Semmangudi Passes Away
by வெங்கட் • October 31, 2003 • இசை • 0 Comments
கர்னாடக இசை மேதை செம்மங்குடி சிறீனிவாச அய்யர் தனது 96ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
இந்த ஒற்றை வரியே போதும் சோகத்தைப் பிழிய. செம்மங்குடியின் மறைவில் நாம் ஒரு மேதையை இழந்திருக்கிறோம். செம்மங்குடியின் சங்கீதத் திறமையைப் பற்றி என்னைப் போன்றவர்கள் எழுதத் தகுதி கிடையாது. எனவே, அவரின் மறுபக்கத்தைப் பற்றி, தியாகராஜ ஸ்வாமிகளின் நேரடி சீடர்களின் பரம்பரையில் வந்தவர். அவரிடம் பாடம் கற்றவர்களில் திருமதி, எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.என். கிருஷ்ணன், நெய்யாடின்கரா வாசுதேவன் ஆகியவர்கள் அடக்கம்.
செம்மங்குடி தானே அரியக்குடி, மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் (அடியேனுக்கு கொஞ்சம் விட்டகுறை தொட்டகுறை உறவு), ஜி.என். பாலசுப்பிரமணியம் ஆகியவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டதாக பெருமையுடன் கூறுவார்.
1927ல் காங்கிரஸ் மாநாட்டில் செம்மங்குடியின் கச்சேரி அவரை முன்னனி வித்துவானாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
இந்தியா சுதந்திரம் வாங்கிய வருடம் செம்மங்குடி சங்கீத கலாநிதி பட்டம் பெற்றார். அப்பொழுது மிகவும் குறைந்த வயதில் (39) சங்கீத கலாநிதியானவர் அவர்தான். நேற்றுவரை வாழும் சங்கீத கலாநிதிகளில் மூத்தவராகத் திகழ்ந்தார்.
திருவனந்தபுரம் மன்னரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். அந்தகாலத்தில் அவரும், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருமாக, பண்கள் தவறிப்போன 200க்கும் மேற்பட்ட மஹாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகளுக்கு இசைவடிவம் கொடுத்தும் உயிரூட்டினார்கள்.
மனித நேயம் மிக்க செம்மங்குடியின் கால்பட்ட இடமெல்லாம் துலங்குவதாகப் பலரும் கருதினார்கள். எனவே அவரை விழாவுக்கு அழைப்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டு.
இசைஞானி இளையராஜாவின் மீது பெரும் மதிப்பு கொண்டவர் செம்மங்குடி; அவருடைய இல்லத்தை அலங்கரிக்கும் ஒரே சமகால இசைக்கலைஞரின் படம் இளையராஜாவினது.
கர்னாடக இசையில் சோதனை முயற்சிகளை எப்பொழுதும் வரவேற்றவர் அவர்; கர்நாடக இசைக்கு செழுமையான பல்வாத்திய வடிவம் கொடுத்து மேற்கத்திய இசை முறையில் இருக்கும் உத்திகளைக் கையாண்டு பார்க்கலாம் என்று சொன்னர். அதைச் செய்யும் தகுதி இளையராஜாவிற்கு இருப்பதாக நம்பினார்.
வாழ்ந்த நாளில் தான் நேசித்த இசையை இன்னும் செழிப்புள்ளதாக்கி மறைந்து போனார்.
வெற்றிடம்