{
கடந்த சில நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்து ஒத்திப்போட்டு வந்த விஷயம் இந்த பெடோரா-ரெட்ஹாட் திட்டம். என்னுடைய நண்பர் சரவணன், “என்ன இன்னும் பெடோரா-ரெட்ஹாட் பற்றி எழுதவில்லை?” என்று கறுப்பு-வெள்ளைப் படங்களில் மோர்க்குழம்புக் குழப்பமாகப் பிரிந்து நின்று பேசுமே அந்த மனசாட்சியாக மின்னஞ்சலில் கேட்டுவிட்டார். சில சமயம் நாம் அதிகம் நேரில் பார்த்து பேசியிருக்காத ( சரவணனை ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன்) நண்பர்கள் நான் இந்த விஷயங்களைப் பற்றி கட்டாயம் கருத்து வைத்திருப்பேன் என்று உறுதியாகத் தெரிந்துவைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற நண்பர்கள் நம்மைச்சுற்றி இருக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தையும் தருகிறது.
}

ரெட்ஹாட் லினக்ஸ் நிறுவனம் பெடோரா என்னும் திறந்த ஆணைமூலக் குழுவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சொல்லியிருக்கிறது. வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் பெடோரா என்னும் திறந்த ஆணைமூலக் குழுவின் நடவடிக்கைகள் ரெட்ஹாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறன. பெடோரா என்பது ஹவாய் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் நடந்துவந்த திட்டம், இவர்களின் முக்கியக் குறிக்கோள் ரெட்ஹாட் லினக்ஸ்உக்கு எளிதில் நிறுவக்கூடிய பொதிகளை வடிவமைத்து வழங்குவது. இவர்களின் திட்டப்படி காலவரையறைப்படுத்தப்பட்டு தானாகவே நிறுவக்கூடிய வகையில் பொதிகளும் அவற்றை நிறுவும் கருவிகளும் உருவாக்கப்படும். இவர்கள் கணினியின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் திட்டத்தை இனி நேரடியாக ஆதரிப்பதாக ரெட்ஹாட் கூறியிருக்கிறது.

அதாவது ரெட்ஹாட்டின் கூற்றுப்படி பெடோரா எங்கள் மேசைத்தள கணினி இயக்குதளத்தளத்தை மேம்படுத்த உழைத்துவருகிறது. எனவே தனித்துச் செயல்படுவது எங்கள் இருவரின் சக்தி விரயமாகத்தான் இருக்கும். எனவே, நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். மறு வரையறுக்கப்பட்ட ரெட்ஹாட்-பெடோரா திட்டத்தின்படி வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புதிய லினக்ஸ் வெளியீடுகள் கிடைக்கும். இந்த லினக்ஸ் வெளியீடுகள் சராசரி தனிநபர் கணினிகளுக்காக இருக்கும், அதாவது இல்லக் கணினிகள் அல்லது மடிக்கணினிகளுக்கானது இந்த இயக்குதளம். ரெட்ஹாட் அறிக்கையின்படி வரவிருக்கும் இயக்குதளம் அவர்களின் தயாரிப்பு என்ற முத்திரையைப் பெறாது, இது அவர்கள் ஆதரவளிக்கும் ஒரு திட்டம் மாத்திரமே. இந்த இயக்குதளத்திற்கு ரெட்ஹாட் எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்காது, அவர்களிடம் தொலைபேசி, இணையவழி உதவியும் கிடைக்காது. இதற்கெல்லாம் இந்தத் திட்டதின் தன்னார்வலர்களைத்தான் நாடவேண்டும்.

இனி இந்தத் திட்டத்தைப்பற்றி என்னுடைய மதிப்பீடு.

ரெட்ஹாட்டின் பார்வையிலிருந்து;

இது ரெட்ஹாட்டின் வணிக உத்தி. அவர்கள் பார்வை இப்பொழுது உயர்சக்தி லினக்ஸ் (என்டர்பிரைஸ் லினக்ஸ்) மீது முற்றாகத் திரும்பியிருக்கிறது. அவர்களுக்கு அங்குதான் பணமிருக்கிறது என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது. தனிநபர் பயன்பாடுகளுக்காக மேசைத்தளங்களில் ரெட்ஹாட்டை நிறுவுபவர்கள் காசு கொடுத்து அதை வாங்குவதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரெட்ஹாட்-டெல் பட்டறையில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்பொழுது இந்த இரண்டு நிறுவனங்களின் நாடியையும் நன்றாகப் பிடித்துப் பார்க்க முடிந்தது. அவர்கள் திட்டங்கள் எல்லாம் பெரிய அளவில் இருக்கின்றன (அதாவது அவர்கள் பல்கலையின் அனைத்து கணினிகளும் ஒரு முரட்டுத் தீயரண் வழியே அவரகள் up2date கருவியைப் பயன்படுத்தி, உடனடியாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளமுடியும். இயக்குதளம் இல்லாத ஒரு டெல் கணினி வலையில் வந்தால் உடனே டெல்லின் பயாஸ் அதைக் கண்டுபிடித்து ரெட்ஹாட்டிடம் ஒப்படைக்க அதில் நீங்கள் சரி என்று சொன்னவுடனே ரெட்ஹாட் இயக்குதளம் வந்து உட்கார்ந்து கொள்ளும், என்றெல்லாம் கோபுரங்களைக் கட்டினார்கள்). எனவே மேசைக்கணினிகள் அவர்களுக்கு ஒரு தூசி.

ஆனால் லினக்ஸ் வளர்ச்சியில் மேசைத்தளம் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. தனி நபர் மேசைகளை அடக்கியாளாதவரை மைக்ரோஸாப்ட் என்ற தனிக்காட்டு இராஜாவிற்குக் கீழேதான் என்றும் ரெட்ஹாட் தெரிந்து வைத்திருக்கிறது.

இந்நிலையில் மேசைத்தள இயக்குதளத்தை வடிவமைக்க அவர்களுக்குப் போதுமான ஆள்பலம் இல்லை. அதனால் அவர்கள் இதைத் தங்கள் தயாரிப்பில் இருந்து கழற்றிவிட்டு திட்டமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் நல்ல அம்சங்களை எல்லாம் (குறிப்பாக குறும்படங்கள், நிறுவு கருவிகள், போன்றவை) தங்கள் உயர்நிலை என்டர்பைரைஸ் ரெட்ஹாட்டிற்க்கு எடுத்துக்கொள்வார்கள்.

இது அதிகம் வெற்றியடையாத நிலையில் இந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கழற்றிவிட்டு பல்லியைப் போல தன் வாலைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இது வெற்றியடைந்தால் அது ரெட்ஹாட்டின் வெற்றி என்று பறைசாற்றப்படும்.

வீட்டில் லினக்ஸை உபயோகிப்பவர் பார்வையிலிருந்து;

இப்போதைக்கு ஒன்றும் சொல்லமுடியாது, பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இது முற்றிலுமாக ரெட்ஹாட் கையில் இருப்பதால் சில நன்மைகள் உண்டு. ரெட்ஹாட்டின் மென்கலன் இதற்குக் கிடைக்கும்.

ஒரு நல்ல நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாட்டில் அதிக வணிகச் சிக்கல்கள் இல்லாத இயக்குதளம் கிடைக்கலாம். இப்பொழுது ரெட்ஹாட்டின் தயவால் புதுப்பிக்கப்படும் பொதிகள் இனிமேல் அதிகச் சிரமம் இல்லாமல் கிடைக்கும்.

ரெட்ஹாட் இந்தத் திட்டத்தை முற்றாக கட்டுப்படுத்த முடியாது. அந்த நிலையில் ரெட்ஹாட் பயனர்கள் கடந்த சில வெளியீடுகளாக இழந்துபோன நல்ல கருவிகள் (KDE, gnoRPM, …) மற்றும் பிற லினக்ஸ் வெளியீடுகளின் நல்ல கருவிகள் (முக்கியமாக apt) இந்த இயக்குதளத்திற்கு வரமுடியும். குறிப்பாக ரெட்ஹாட்டின் மேசைத்தள ஒருங்கிணைப்பு திட்டத்தில் கேடிஈயின் நல்லவிஷயங்கள் பல அவர்களின் க்னோம் சார்பால் மறுக்கப்பட்டுள்ளன, இவை திரும்பக்கிடைக்கலாம்.

ஏற்கனவே தன்னுடைய பழைய இயக்குதளங்களுக்கு உதவி அளிக்கப்போவதில்லை, அவற்றுக்கான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பொதிகளைத் தயாரிப்பதில் தங்களுடைய சக்தியைச் செலவிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. ஒருவிதத்தில் வருடா வருடம் 2000, எம்ஈ, எக்ஸ்பி என்று மைக்ரோஸாப்ட் தலையில் கட்டுவதைப் போல, புதிய இயக்குதளங்களை வாங்கத் தன் வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் செயல் இது. பெடோரா தன்னார்வலர்களுக்கு இதுபோன்ற வணிகக் கட்டுப்பாடுகள் கிடையாது எனவே அவர்கள் பழைய பொதிகளையும் மேம்படுத்த முயல்வார்கள் என்று நம்பலாம்.

இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் – ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் – மாபெரும் வெற்றி, ஏற்கனவே மான்ட்ரேக்கின் தள்ளாட்டம், சுசியின் வணிக தந்திரம் (அது தன்னுடைய புதிய வெளியீடுகளுக்கு குறுந்தகடு படிமங்களை இறக்கிக் கொள்ளத்தருவதில்லை), டீபியனின் ஆமைவேகம் – இவற்றுக்கெல்லாம் மருந்தாக ஒரு தனிநபர் இலக்கு கொண்ட லினக்ஸ் இயக்குதளம் கிடைக்கலாம். அந்த நிலையில் லினக்ஸின் வளர்ச்சி மைக்ரோஸாப்ட் வியாதிக்கு மருந்தாகலாம்.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.