நேற்று இரவு கனேடியத் தமிழ் வானொலி என்ற டொரான்டோ பன்பலை வானொலியில் மின்கனினி உலகம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினனாகப் பங்கேற்றேன். (இது CTR -ல் இரண்டாம் முறை, கடந்த வருடம் சான்பிரான்ஸிஸ்கோ தமிழ் இணைய மாநாட்டிற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் இதுபோலக் கலந்துகொண்டேன்). ஒரு மணி நேர நிகழ்ச்சி திறந்த ஆணைமூலச் செயலிகளைப் பற்றியது. நிகழ்ச்சியின் இறுதியில் பதினைந்து நிமிடம் நேயர்களும் நேரடியாகத் தொலைபேசி மூலம் பங்கேற்றனர். கேட்கப்பட்ட கேள்விகள் சுவாரசியமாக இருந்தன (இது திறந்த ஆணமூலச் செயலிகளும், லினக்ஸ்-ம் நம்மவர்களைச் சென்றடைகிறது என்பதைக் காட்டுகிறது).

சில கேள்விகளும் அதற்கு என்னுடைய பதில்களும்;

1. <நேயர்> இப்படி இலவசமாகச் வெளியாகும் லினக்ஸைப் பலர் பயன்படுத்தத் தொடங்கினால், மென்கலன் எழுதும் (குறிப்பாக நம்மூர்) விற்பன்னர்களுக்குச் சம்பளம் குறைந்து போகுமே? இது நம்மூர் (இந்தியா, இலங்கை) பொருளாதாரத்தைப் பாதிக்காதா? பொதுவில் இது வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யாதா?

(சந்தை வியாபாரிகளின் வெற்று தர்க்கத்தினாலும் மூளைச் சலவை முயற்சியாலும் எழுந்த ஐயம் இது என்பதில் சந்தேகமில்லை).

<நான்> இப்பொழுது ஒரேவிதமான செயலிகளைப் பலரும் பல வணிகநிறுவனங்களிலும் திரும்பத் திரும்ப
தயாரித்து வருகிறார்கள். உதாரணமாக, மைக்ரோஸாப்ட் வேர்ட்-இல் இருக்கும் அதே செயற்பாடுகளை வேர்ட் பர்பெக்ட் தயாரிப்பவர்களும் செய்து வருகிறார்கள். இது மூடிய ஆணைமூலத்தினால் ஏற்படும் நிலைமை. இது பொதுவில் மனித இனத்தின் அறிவு வளர்ச்சியைத் தேக்கச் செய்கிறது. இதேபோல விஞ்ஞானிகள் அவர்களது கண்டுபிடிப்பை ஆய்வுக் கட்டுரைகளாகவும், மாநாட்டு உரைகளாகவும் வெளியே சொல்லாமல் மூடிவைத்தால் அறிவியலில் எந்த அளவு தேக்கம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மருந்தைக் கண்டுபிடிக்கும் மருத்துவர் அதை வெளியில் சொல்லாமல் போனால் நோய்கள் ஒருக்காலத்திலும் ஒழிக்கப்படாது. ஆனால் மூடிவைப்பதுதான் மனித வளர்ச்சிக்கும் (குறிப்பாகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு) நல்லது என்று காலம் காலமாக நாம் கணினிப் பெரு நிறுவனங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறோம். கணினிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பரிமாறிக்கொள்ள வழிவகுத்த TCP/IP, HTTP போன்ற திறந்த தொழில்நுட்பங்கள் இருந்திருக்காவிட்டால் இன்று இணையம் வளர்ந்திருக்காது. நீங்கள் மனதில் கொண்டு கேட்கும் மின்வணிகம் போன்ற புதுப் பொருளாதாரச் சாத்தியங்கள் தோன்றியிருக்காது. எனவே, திறந்த அறிவுதான் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். அறிவு முன்னடைய முன்னடைய புதியப் பொருளாதாரச் சாத்தியங்கள் உருவாகும். அதில் பங்கெடுத்து நம்மவர்களும் முன்னேறுவதான் நல்லவழி.

2. <நேயர்> வருங்காலத்தில் மைக்ரோஸாப்ட் நிறுவனமும் தன்னுடைய வழிமுறைகளை மாற்றி அமைத்துக்கொண்டு திறந்த ஆணைமூல நிறுவனமானால் லினக்ஸ் என்ன ஆகும்?

<நான்> நல்ல கேள்வி இது. நம்ம ஊரில் ஒரு சொலவடை உண்டு, ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்று. மைக்ரோஸாப்ட்டுக்கு மீசை முளைக்குமா என்று யாராலும் (பில் கேட்ஸ் உள்பட) ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஐபிஎம் போன்ற வர்த்தக முதலைகள் லினக்ஸைத் தழுவிக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்திருப்பதைப் பார்க்கும் பொழுது, அத்தைக்கு மீசை ஒருக்காலத்தில் முளைக்கும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அப்படி ஒரு நிலை வந்தால் அவர்களிடமும் நல்ல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றின் அறிவை எல்லோரும் பெற முடியும். இப்பொழுது TCP/IP போன்ற திறந்த தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு அவர்கள் தயாரிப்பவற்றை, உதாரணமாக .NET, மூடிய, சந்தை பொருள்களாக்கி வருகிறார்கள். Commodifying open protocols என்பது அவர்களது வியாபார உத்திகளில் ஒன்று. இந்தக் கேவலமான நிலை மாற்றியமைக்கப்படும். லினக்ஸ், வின்டோஸ் இரண்டும் சமதளத்தில், level playing field-ல் மோதிக்கொள்ளும் அதனால் வெற்றியடைவது யார் லினக்ஸா மைக்ரோஸாப்டா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம் சொல்லமுடியும்; அந்த விளையாட்டைக் காசு கொடுத்துப் பார்க்கும் சராசரி நுகர்வோர்தான் வெற்றியடைவார்கள். அவர்களுக்கு தரத்தில் உயர்ந்த தொழில்நுட்பம் கைக்கெட்டும் விலையில் கிடைப்பது உறுதி. அந்த ஒரே காரணத்திற்காக நான் அத்தைக்கு மீசை முளைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

* * *
தயாரித்து வழங்கும் கணா ஆறுமுகம் நிகழ்ச்சியை மூன்றாண்டுகளாக புதன் தோறும் நடத்திவருவதாகக் கூறினார். பங்குபெற்ற நேயர்களின் கேள்விகளை வைத்துப்பார்த்தால் அவருக்குக் கட்டாயம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.