நேற்றைய அறிக்கையின்படி, நேரடி பரிமாற்ற வலைகளின் மூலம் கோப்புகளை இறக்கிக் கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று விளக்கப்பட்டிருக்கிறது. இது கனடா!! இந்த விளக்கம் இசை வணிகர்களை மிகவும் புண்படச் செய்யப்போகிறது. சராசரி பயனர் இதனால் மகிழ்ச்சியடைகிறார்.

ஆனால் வலைகளில் பிறர் எடுத்துக் கொள்ளும்வகையில் கோப்புகளைப் போட்டுவைப்பது குற்றம்தான். க்ரெனடா, வெஸ்டர்ன் சமோவா போன்ற நாடுகளில் உட்கார்ந்துகொண்டு யாராவது போட்டுவைக்கும் எதையும் இனி கனேடியர்கள் பயப்படாமல் இறக்கிக் கொள்ளலாம். கனடாவின் மக்கள்தொகை அமெரிக்காவைவிட மிகவும் குறைவுதான். ஆனால் சராசரி கனேடியர் அமெரிக்கர்களைவிட மிக அதிகமாக அகலப்பாட்டை இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறார். அகலப்பாட்டை இணைப்புகள் கனடாவில் மிகவும் மலிவு. இந்த நிலையில் எம்பி3 வடிவில் பாடல்களை இறக்கம் செய்வது கனடாவில் அதிகரிக்கும்.

இந்த விளக்கத்தை இசை வணிகர்கள் இப்படியே விட்டுவிட மாட்டார்கள், இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அதற்கெல்லாம் நாளாகும் அந்த இடைவெளியில் இன்னும் தொழில்நுட்பம் பெருகிப்போகும். தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி தன்னைத் தகவமைத்துக் கொள்ளாமல், சராசரி நுகர்வோரின் கையை முறுக்கும் இசை வணிகர்களுக்கு இது ஒரு தோல்விதான். நிச்சயமாக நான் இதைக் கொண்டாடியாக வேண்டும்.