ஜப்பானின் நிப்பான் டெலிகிராப் & டெலிபோன் கார்பொரேஷன், என்.டி.டி தன்னுடைய அடுத்த தலைமுறை செல்பேசிகளில் லினக்ஸ் இயக்குதளத்தைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது பதிலினக்ஸ்க்கு (Embedded Linux) ஒரு முக்கியமான வெற்றி. ஏன்? இன்றைய தேதியில் உலகத்தின் தலைசிறந்த செல்பேசித் தொழில்நுட்பம் ஜப்பானில்தான் இருக்கிறது (இதைப்பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதியாக வேண்டும்). துவக்கத்தில் ஜப்பானியர்கள் செல்பேசித் தொழில்நுட்பத்தை முற்றிலும் தவறவிட்டார்கள், அதில் விரைவான முன்னேற்றம் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில்தான் நிகழ்ந்தது. நோக்கியா, சீமென்ஸ், எரிக்ஸ்ஸன் போன்ற நிறுவனங்களின் முன்னேற்ற காலங்களில் ஜப்பான் அந்த விளையாட்டிலேயே இல்லை. ஆனால் இப்பொழுது அதி உன்னத செல்பேசிகள் ஜப்பானிலிருந்துதான் வருகின்றன, பனாசோனிக், க்யோஸரா, சோனி (சோனி-எரிக்ஸ்ஸன்), தொஷீபா, மிட்சுபிஷி, போன்ற நிறுவனங்கள் அழகான, திறன்வாய்ந்த செல்பேசிகளை உருவாக்கி வருகின்றன. அதே போல, என்டிடி-தோகோமோ, ஜப்பான் டெலிகாம், போன்ற நிறுவனங்கள் சேவையளித்தலில் சிறந்து விளங்குகின்றன. நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் ஜப்பானில் இருந்தபொழ்து பயன்படுத்திய சில சேவைகள் – உதாரணம்-அருகில் இருக்கும் ஹோட்டலைக் கண்டுபிடித்தல், திரையரங்கில் இடம் பிடித்தல்,- இன்னும் வட அமெரிக்காவில் பிரபலமாகவில்லை.
docomo_3g.png என்டிடி தன்னுடைய மூன்றாம் தலைமுறை – 3G செல்பேசிகளை 2001 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. அந்தச் சேவையின் மூலம் செல்பேசி வழியாக இணையத்தில் உலாவ முடியும், பாடல்களை இறக்கிக் கொள்ளமுடியும், செல்பேசியில் படமெடுத்து உடனடியாக செல்பேசி வழியாகவே அனுப்பமுடியும், இரண்டுக்கு மேற்பட்டவர்கள் செல்பேசி வழியே விளையாட முடியும், 2004ம் வாக்கில் செல்பேசியில் திரைப்படங்களையே பார்க்கமுடியும். இன்னும் இந்த அளவிற்கு உன்னத சேவைகள் உலகில் எங்கும் வரவில்லை. தோகோமோவின் புதிய செல்பேசிகளை இங்கே பார்க்கலாம்.

இப்படிப்பட்ட உயர்ந்த சேவைகளை வழங்குவதற்குத்தான் செல்பேசிகளுக்கு லினக்ஸ் இயக்குதளத்தை தோகோமோ பரிந்துரைக்கிறது. அதாவது செல்பேசிகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட லினக்ஸ் இயக்குதளத்தை தொகொமோ வடித்துத் தரும். பனாசோனிக், க்யோஸரா போன்ற செல்பேசித் தயாரிப்பாளர்கள் அவர்களுடைய செல்பேசிகளின் இதயமாக இதை வைத்து வடிவமைப்பார்கள்.

முக்கியமான வெற்றி என்று சொன்னது ஏன்? ஜப்பானியர்களின் ட்ரான் இயக்குதளம்தான் அங்கே இதுநாள்வரை மிகவும் பிரபலமானது. உலகின் மற்ற இடங்களில் சிம்பியன் (நோக்கியாவின் செல்லக் குழந்தை), பிரபலமாக இருக்கிறது. மறுபுறம் மைக்ரோஸாப்ட் தன்னுடைய செல்பேசி இயக்குதளத்தை வடிவமைத்து, தன் சந்தைப்படுத்தும் திறமையெல்லாம் அதில் கொட்டி உள்ளே தள்ளப் பார்க்கிறது. இந்த நிலையில் மெதுவாகத் தொடங்கிய பதிலினக்ஸ் இப்பொழுது அதன் தொழில்நுட்பத் திறமையினால் மாத்திரமே பிரபலமாகி வருகிறது. எனவேதான் தோகோமோவின் இந்த அறிவிப்பு லினக்ஸ்க்குப் பெரிய வெற்றி.

கொசுறுச் செய்தி; என்டிடியின் தோகோமோ பெயர் ஒரு வார்த்தை விளையாட்டு. ஜப்பானிய மொழியில் தோகோமோ என்றால் “எங்கு வேண்டுமானாலும்” என்று பொருள். இதை ஆங்கிலத்தில் DoCoMo என்று எழுதுகிறார்கள். இதை DO COmmunication on MOve என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகவும் பாவிக்கலாம். முதலில் என்டிடியின் ஒரு சேவையாகத் தொடங்கிய தோகோமோ, விரைவில் அதன் தலைமையான லாபம் தரும் பிரிவானது. பின்னர் என்டிடி-தோகோமோ என்றெ பெயரில் தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்டது.