எடுத்துச் செல்லத் தகுந்த கடின வட்டு அடிப்படையிலான எம்பி3 இயக்கிகளே, இசையின் எதிர்காலம் என்று தோன்றுகிறது. கடந்த வருடம் ஆப்பிள் தனது ஐபாட் இயக்கியை அறிமுகப்படுத்தி இசை உலகில் பெரும்புயலைக் கிளப்பியது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன் அது ஐபாடில் இறக்கிக் கொள்ள வசதியாக எம்பி3 கோப்புகளை தனது இணையதளத்தின் மூலம் விற்கத் தொடங்கியது. பொதுவில் இத்தகைய கைக்கடக்கமான, தொழில்நுட்பத்தில் உயர்ந்த சாதனங்களை ஜப்பானிய நிறுவனங்கள்தான் அறிமுகப்படுத்துகின்றன. இந்த வியாபாரத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஆப்பிள் இப்படியரு உன்னத சாதனத்தை வெளியிட்டது ஆச்சரியம்தான். இதற்கு ஜப்பானிய நிறுவனங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இன்றைக்குக் கிடைத்துவிட்டது.

இன்று தொஷிபா நிறுவனம் தனது 20 கிகாபைட் எம்பி3 இயக்கியைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. (ஜப்பானிய வெளியீட்டின் பேபல்பிஷ் மொழிபெயர்ப்பு). toshiba_mp3.jpg இதன் எடை 138 கிராம் (ஐபாடை விட 20 கிராம் குறைவு), தடிமன் 12.7 மிமீட்டர் (ஐபாடின் தடிமன் 15.6 மிமீ). இதில் கிட்டத்தட்ட 5000 உயர்தர ஸ்டிரியோ பாடல்களை சேமிக்கக் கூடியது). கணினி மூலமான தொடர்பு USB 2.0 இணைப்பின் வழி இயங்குகிறது. இதில் FireWire என்று அழைக்கப்படும் IEE1394 இணைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கணினிக்கும் இதற்கும் இடையில் கோப்புகளைப் பறிமாரிக்கொள்வது அவ்வளவு விரைவாக இருக்காது.

மெமரிஸ்டிக், காம்பாக்ட் பிளாஷ், மினிடிஸ்க் போன்ற பிற சேமிப்புச் சாதனங்களால் இயங்கும் இசை இயக்கிகளைக் காட்டிலும் கடினவட்டால் இயங்கும் இயக்கிகளே சிறந்தவை. இது கணினிக்கும்-சாதனத்திற்குமான இணைப்பை இருவழிப்படுத்துகிறது. அந்த வகையில் தேவைப்படும்பொழுது சாதனத்திலும் மற்ற நேரங்களில் கணினிக்குமாக இசைக்கோப்புகளை மாற்ற முடியும். பொதுவில் ஜப்பானிய சாதனங்கள் விலை குறைந்தவைகளாக இருக்கும். அந்த வகையில் தொஷிபாவும் ஐபாடின் உச்சவரம்பைக் குறைக்கும் என்று நம்புகிறேன்.

ம்ம்… பிறகு பார்க்கலாம். இப்பொழுது கடைவாயில் ஒழுகும் ஜொள்ளைத் துடைத்தாக வேண்டும்.