உலகெங்கும் இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்; இணையத்தின் வழியே பாடல்களைப் பகிர்ந்து கொள்வது. MP3 – தொழில்நுட்பம் வளர்ந்த உடன், கிட்டத்தட்ட 460 மெகாபைட் தேவையாக இருந்த ஒரு பாடலுக்கு 4 மெகாபைட் போதுமானதாக மாறிவிட்டது. இதனுடன் கூடவே, அதிவேக வலை இணைப்புகளும் பெருகியது, குறுவட்டுகளின் விலை வீழ்ச்சியடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களிடமுள்ள பாடல்களைப் பகிர்ந்து கொள்வது பெருகிவிட்டது. இதன் வேகத்தை Napster, Kazza, DC++ போன்ற நேரடிப் பரிமாறிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இது இசைத்தட்டுக்கள் விற்பனை இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.

இந்தப் பன்னாட்டு சமாச்சாரங்களை வேறு மூலையில் போட்டுவிட்டு, நம் நாட்டு நிலைக்கு இதைப் பொருத்திப் பார்த்தால் இந்த MP3 ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். நம்மூரில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட திரையிசைக்கு எந்தவிதமான வணிகச் சாத்தியக்கூறுகளும் இல்லை. இருபது வருடங்களுக்கு மேற்பட்ட பாடல்கள் முற்றிலுமாக இழந்து போய்விடவேண்டிய நிலையில்தான் இருக்கின்றன. அந்த நாட்களில் பலருக்கும் இசைத்தட்டுக்களோ, ஒலிநாடாக்களோ வாங்கும் சக்தி இல்லை. பாடல்கள் பெரும்பாலும் வானொலியிலேயே அனுபவிக்கப்பட்டன. இந்த நிலையில் சில நல்ல பாடல்கள் இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு தனிநபர்களிடம்தான் இருக்கின்றன. இவற்றில் சில இப்பொழுது MP3 ஆகப் புணர்ஜென்மம் எடுத்திருக்கின்றன.

இந்த வழியில் சமீபத்தில் கேட்கக் கிடைத்த ஒரு பாடல் “மங்கை ஒரு திங்கள்”. இது வெளியாகாத முன் ஒரு காலத்திலே என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பதிவான அருமையான பாடல். இதுபோல முற்றிலுமாக இழந்து போய்விடக்கூடிய பாடல்களைப் பாதுகாக்க MP3 வடிவத்தில் அவற்றை மாற்றி, kazza, DC++, FTP, இன்னும் எந்த வடிவத்திலாவது அவற்றை பலரிடமும் பரப்புவதுதான் ஒரே வழி. இது இசைவணிகர்கள் சொல்வதைப்போல் பாவமான காரியம் அல்ல; புண்ணியம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.