அமெரிக்க பாடல் பதிவோர் குழுமம் (RIAA – தமிழிலும் ரியா என்றே வசதிக்காக எழுதலாம்), MP3 பாடல்கள் எங்கிருந்து வந்தன என்பதை அடையாளம் காட்டமுடியும் என்று சொல்லுகிறது. இது பித்தம் தலைக்கேறியவன் உளறுவதைப் போலத்தான் இருக்கிறது.

எம்பி3 பாடல்களை அலசி ஆராய்ந்து அது தனியருவர் அவருடைய சொந்த இசைத்தட்டை அவரே எம்பி3 ஆக மாற்றியதா (சட்டப்படி அனுமதிக்கப்பட குற்றமற்ற செயல்) அல்லது அவர் வேறு ஒருவரிடமிருந்து (குறிப்பாக நேரடி வலையிறக்க நிரலிமூலம் peer-to-peer p2p) சுட்டதா என்பதைத் தன்னால் நிரூபிக்கமுடியும் என்கிறது ரியா. இசைக் குறுவட்டுகளை எம்பி3ஆக மாற்றும்பொழுது பயன்படுத்தப்படும் நிரலிகளில் சில அவற்றில் மேலதிகவிபரங்களையும் தாமாக உள்ளிடுகின்றன. உதாரணமாக ID3 verison2 tag என்று சொல்லப்படும் மீத்தரவு (meta data) இசைத் தரவுகளுடன் கூடவே சேமிக்கப்படுகின்றது. இத்தகைய மீத்தரவுகளில் அதை எம்பி3யாக்கம் செய்த நிரலி என்ன, அதன் வடிவெண் என்ன போன்ற விபரங்களும், சில சமயங்களில் கணினியிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட கணினி சொந்தக்காரர் பெயரோ இருக்கும். இதை வைத்துக்கொண்டு தன்னால் எம்பி3 சொந்தமாக தயாரிக்கப்பட்டதா அல்லது இணையத்திலிருந்து சுட்டெடுக்கப்பட்டதா என்று நிரூபிக்க முடியும் என்று மார்தட்டுகிறது.

சமீபத்தில் ரியா கிட்டத்தட்ட 1600 தனிநபர்கள் இணையம்வழி இசைத் திருடல்களில் ஈடுபட்டார்கள் என்று நீதிமன்றத்திற்கு அழைக்க உத்தரவு பெற்றுள்ளது. அதில் ஒருவர் நியூயார்க் நகரில் இருக்கும் nyfashiongirl என்ற புனைப்பெயரில் நேரடி வலைகளில் உலவி வந்ததாகக் கருதப்படும் பெண். இவர் வைத்திருந்த 1000க்கும் மேற்பட்ட இசைக்கோப்புகளில் பல அவருக்குச் சொந்தமில்லை என்றும் அதே மீத்தரவுகள் கொண்ட கோப்புகள் இணையத்தில் நேரடிவலைகளில் உலவிவருவதாகவும் ரியாவின் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.

இசைக் குறுந்தகடு வடிவிலிருக்கும் பாடலை, எம்பி3 ஆக மாற்றும்பொழுது அதன் அளவில் கிட்டத்தட்ட 90% குறைக்கமுடிகிறது. ஒரே பாடலை எம்பி3 ஆக மாற்றும் முயற்சியில் சற்றே மாறுபட்ட அளவுடைய கோப்புகளாக முடிவது சகஜம். இதற்கான முக்கிய காரணம் பல்வேறு எம்பி3 ஆகும் நிரலிகள் பல்வேறு வகையில் அவற்றைச் சுருக்குகின்றன. அதன்கூட அவற்றில் அவை சேர்க்கும் மீத்தரவுகளின் அளவும் மாறுகின்றது. இதனால் இவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாக முடிகின்றன. ரியாவின் வாதப்படி டிஜிட்டல் முறையில் ஒருமுறை மாற்றப்பட்ட கோப்புகளை பிரதியெடுக்கும்பொழுது அவை அளவில் மாறுவதில்லை. எனவே, எனவே, நகல்களிலிருந்து மூலத்தை அடையாளம் காணமுடியும் என்பது அவர்கள் வாதம். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மூலத்தைக் கண்டெடுத்துத்தான் திருட்டை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை என்று சொல்கிறார்கள். ஒரே அளவிலான ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் இருப்பதை நிரூபித்தால் தங்களை நிரபராதி என்று நிரூபிக்கும் கடமை மாட்டிக்கொண்டவர்களிடம்தான் இருக்கிறது என்பது அவர்கள் வாதம்.

ஆனால், சிக்கல் என்னவென்றால், இவற்றின் நீள மாறுபாடுகளை புள்ளியில் ரீதியாக ஆராய்ந்து ஒருவரும் முடிவிற்கு வரவில்லை. அது அப்படியன்றும் சாதாரணமான காரியம் அல்ல. நூற்றுக்கணக்கான எம்பி3 மாற்றிகள் செயலில் இருக்கின்றன. இவற்றின் சுருக்கும் தன்மையை ஆராய்ந்து அவற்றை பொதுவில் ஒரு பாடலை எந்த அளவிற்க்கான எம்பி3 கோப்பாக மாற்றும் என்று கணக்கிடும் சூத்திரங்களை உருவாக்குவதும் அவற்றின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்கஸ் குன் கருத்துப்படி இது கிட்டத்தட்ட இயலாத காரியம்.

தலைக்கு வெறியேறிய ரியா தொழில்நுட்பப் பயன்பாட்டை எப்பாடுபட்டாவது நீதிமன்றத்தின் துணைகொண்டு ஒழித்துவிடலாம் என்று நம்புகிறது. உண்மையில் மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றபடி தங்கள் விற்பனை வழிமுறைகளையும் சாத்தியங்களையும் மாற்றியமைத்துக் கொண்டால்தான் அவர்களால் தாக்குபிடிக்க முடியும். தொழில்நுட்ப வேகத்திற்கு சட்டத்தடைகள் போட்டி போடமுடியாது என்பதுதான் அசைக்க முடியாத உண்மை.