கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகள்

1. லினக்ஸ் புதிய கரு 2.6.0 வெளியிடப்பட்டிருக்கிறது. எல்லா பெரிய வெளியீடுகளையும் போலவே இதிலும் பல முக்கிய முன்னேற்றங்கள் உள்ளிடப்பட்டிருக்கின்றன. விபரங்கள் இங்கே. எல்லா பெரிய வெளியீடுகளையும் போலவே இதிலும் பல முக்கிய ஓட்டைகள் இருக்கும், விரைவில் ஒட்டுகளும் அடுத்த வெளியீடும் வரும். கொஞ்சம் நாள் பொறுத்திருக்க வேண்டும். குறைபாடுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்தபின் இதற்குத் தாவியே ஆகவேண்டும். முக்கிய காரணங்கள் இரண்டு; 1. கம்பியில்லா வலைத் திறனில் முன்னேற்றம். 2. அதி வேக USB வசதி. இரண்டும் என்னுடைய மடிக்கணினிக்கு முக்கியம்.

2. என்னுடைய சோனி வாயோவில் கடினவட்டு அடிக்கடி பிரச்சனை கொடுத்துவருகிறது. சென்ட்ரினோ கணினி இப்பொழுதைய நிதி நிலைமையில் ஏப்பிரல் வரை கிடையாது என்பது முடிவாகியிருக்கிறது. இதற்காகப் பல விஷயங்களை ஒத்திப் போட்டு வந்தேன். இன்றைக்கு ஒரு தோஷிபா 60 கி.பை. வட்டு வாங்கியாகிவிட்டது. பழைய 30 கி.பை வட்டை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு இதில் புதிதாக எல்லாவற்றையும் ஏற்றத் தொடங்கியாயிற்று. விரைவில் பெடோரா லினக்ஸையும் சோதித்துப் பார்க்க ஒரு வாய்ப்பு.