chretien.pngஇன்று காலை கனடாவின் இருபதாவது பிரதமர் ழான் க்ரெட்ச்யன் (Jean Chrétien) பிரதமர் பதவியிலிருந்து விலகினார் இத்துடன் அவரது நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும் முடிந்து போகிறது.

யார் இந்த ழான் க்ரெட்ச்யன்? கனடாவை விடுத்த பல நாடுகளில் அவரை யாருக்கும் தெரியாது. கனடா உலகின் ஏழு முக்கியமான நாடுகளுள் ஒன்று, அந்த ஏழு நாடுகளுள்ளும் நிலையான அரசியலமைப்பு, வளர்ந்துவரும் பொருளாதாரம், அகதிகள் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களால் முன்னால் இருக்கும் நாடு. அந்த நாட்டின் பிரதமரை உலகில் பலருக்கும் தெரியாது. பரவாயில்லை. அதுதான் கனடாவிற்கு வேண்டும்; அப்படித்தான் க்ரெட்ச்யன் ஆட்சி செய்து ஓய்ந்திருக்கிறார். ஏனென்றால் தன்னுடைய வல்லமையை எளியவர்மேல் செலுத்தி ஆதிக்கம் செய்வது கனடாவிற்கு ஒப்பானதல்ல. செப்டம்பர் 11, 2002 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் க்ரெட்ச்யன் இப்படிச் சொன்னார்; “உங்கள் பலத்தைப் பிரயோகித்து மற்றவர்களைக் கேவலப்படுத்துவதில் எந்தப் பெருமையும் கிடையாது”. இது இரட்டைக் கட்டிடங்கள் இடிபட்டபின், அமெரிக்காவின் நிலையைத் துல்லியமாகச் சொல்லும் வாக்கியம். கடந்த பத்தாண்டுகள் கனடாவை நிர்வகித்து க்ரெட்ச்யன் சாதித்தது இந்த மூன்றும்தான்; 1. மோசமான நிதிநிலையைச் சரிகட்டியது, 2. பிரெஞ்சு பேசும் க்யூபெக் கனடாவிலிருந்து பிரிந்துபோகாமல், ஒற்றைப் பெருந்தேசமாக கனடாவைக் கட்டிக் காத்தது 3. தனக்கென்று இருக்கும் தனித்தன்மையை நிலைநாட்டி அதனால் கனேடியர்களைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தது. தன்னுடைய எளிமையான தோற்றத்தாலும், தினறும் பேச்சினாலும் தன்மேல் அதிகம் எதிர்பார்ப்புக்கு இடம்கொடுக்காமல் போனார் க்ரெட்ச்யன்; இருந்தாலும் கனேடிய சரித்திரத்தில் புகழ் மிக்க பிரதமர்களில் ஒருவராக அவர் கட்டாயம் இடம்பெறுவார்.

1995 ஆம் ஆண்டு, க்யூபெக் மாநிலம் தனிநாடாகப் பிரிந்துபோக ஆயத்தப்பட்டது. பிரெஞ்சு பேசும் அந்த மாநிலம் தனிநாடானால் அதை உடனடியாக அங்கீகரிக்கத் தயார் என்று சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக பிரான்சு அதற்குத் தூபம் போட்டது. நாடே கொந்தளிப்பான நிலையில் க்ரெட்ச்யனுக்கு இரண்டு சாத்தியங்கள் இருந்தன; க்யூபெக்கில் பிறந்து, க்யூபெக்கின் தலைமகன் என்று தன்னைப் பெருமையுடன் அறிவித்துக் கொள்பவர் க்யூபெக்கின் தனித்துவத்தை இழந்து பெரும்பாண்மை ஆங்கிலம் பேசும் கனடாவுடன் இணைந்து போவதா அல்லது தனக்கிருக்கும் வளங்களின்மீது துணை கொண்டு தனிநாடாக க்யூபெக்கை அறிவித்து பெருங்கனடாவின் கடைசி பிரதமராக ஒய்வதா என்பது. தன்னுடைய பிரெஞ்சுப் பற்றுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐக்கிய கனடாவின் பிரதமராகத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு, கனடாவின் ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தார் க்ரெட்ச்யன். மயிரிழை வித்தியாசத்தில் (தனிப்பது – 49.4%, இணைந்திருப்பது 50.6%) கனடாவின் ஐக்கியம் உறுதிப்படுத்தப்பட்டது. இதில் க்ரெட்ச்யனின் பங்கு அளவிடமுடியாதது. இதன் பின் தன்னுடைய சொந்த மண்ணில் அந்நியப்பட்டுப் போனார் அவர். ஆனால் நாளடைவில் க்ரெட்ச்யனின் நேர்மை முன்னுக்கு வர க்யூபெக்கிலும் அவரைப் பாரட்டத் தொடங்கினார்கள்.

கடந்த வருடம் “தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம்” போன்ற வெற்று கோஷங்களை முன்னிருத்தி அமெரிக்கா இராக்கின் மீது படையெடுத்த பொழுது, காலம் காலமாக தன்னுடைய நண்பனாக இருக்கும் அமெரிக்காவிடம் அதன் நியாயமின்மையைச் சுட்டிக் காட்டி படையனுப்ப மறுத்தார் க்ரெட்ச்யன். இதனால் கனடாவின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்குப் பேரழிவு ஆயுதங்களும், ஓசாமா தொடர்பும் இராக்கிற்கு இல்லை என்பது கிட்டத்தட்ட தெளிவான நிலையில் கனடாவின் நேர்மை உலகில் மெச்சப்படுகிறது. தன்னுடைய வல்லமையின் உன்னதம் பிறரை அரவணைத்துப் போவதில்தான் இருக்கிறது என்பதைக் கனடா இன்னொருமுறை உலக அரங்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதை நேர்மையாகவும் திறமையாகவும் சாதித்துக் காட்டிய பெருமை க்ரெட்ய்சனுக்குத்தான்.

இன்று இருபத்தியோராவது பிரதமாராக திரு பால் மார்ட்டின் பதவியேற்றார். இவர் க்ரெட்ச்யனின் நிதிமந்திரியாக இருந்து கணக்குப் புத்தகங்களில் இருந்த சிகப்பு மையை அழித்தவர். பின்னாட்களில் பிரதமர் பதவிக்காக நேரடியாக க்ரெட்ச்யனை எதிர்த்தவர். திறமையான நிர்வாகியாக அறியப்படுபவர். இவர் தலைமையில் எழுச்சிமிக்க, வலுவான கனடாவை எதிர்நோக்கி நிற்கிறோம். இதற்கு உறுதியான அடித்தளம்போட்டுக் கொடுத்த ழான் க்ரெட்ச்யன் ஒரு பனிக்கால காலை நேரத்தில் ஓய்வுதேடி மறைந்துபோகிறார்.