நேற்றுதான் பதிகணினிகளைப் பற்றியும், அந்தத் துறையில் லினக்ஸின் அதிவேக வளர்ச்சியையும் பற்றி எழுதினேன்.

இன்றைய தகவலின்படி நான்கு ஜப்பானிய நிறுவனங்கள் (சோனி, ஷார்ப், கென்வுட், பயோனீர்) எனிமியூசிக் என்ற இயக்குதளத்தின் அடிப்படையிலான இசைக்கருவிகளின் மாதிரிகளை வெளியிட்டுள்ளன. எப்படி சிம்பியன் செல்பேசிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இயக்குதளமோ, அதோ போல் எனிமியூசிக் இசைக்கருவிக்கான இயக்குதளமாம இருக்கும். இது லினக்ஸ் அடிப்படையிலானது. இல்லத்தில் பயன்படுத்தப்படும் சராசரி ஸ்டீரியோ கருவிகளில் அடுத்த வருடம் முதல் இந்த இயக்குதளத்தினாலான பதிகணினிகளுடன் விற்பனைக்கு வரும்.. இந்தக் கருவியை, கணினி உதவியில்லாமல் இணையத்துடன் இணைக்கலாம். டிஜிட்டல் வடிவ இசையை நேரடியாக இணையத்திலிருந்து தருவித்துக் கொள்ளலாம். இதை எளிதாக்க இக்கருவிகளில் எல்சிடி திரைகள் இருக்கும். இறக்கப்பட்ட இசையை மினிடிஸ்க்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் இரண்டு. ஒன்று இது லினக்ஸ் அடிப்படையிலானது. இரண்டாவதாக, மேலே சொன்ன நான்கு நிறுவனங்களையும் தவிர, என்ஈசி, யமாஹா, டெனான், ஓன்க்யோ நிறுவனங்களும் இந்த இயக்குதளத்தைத் தழுவி புதிய கருவிகளை வடிவமைத்து வருகின்றன. இவற்றில் யமாஹா, டெனான், ஓன்க்யோ மூன்றும் அதிஉன்னத இசைக்கருவிகளுக்குப் பெயர் பெற்றவை. எனவே மிகவும் தரமான இசைக்கருவிகள் வெளியாகும் என்று நம்பலாம்.