சென்ற வாரம் BMG இசை நிறுவனம் ஆன்டனி ஹாமில்டன் என்பவருடைய Comin From Where I’m From என்ற இசைக் குறுவட்டை வெளியிட்டது. இது சன்காம் என்னும் நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட MediaMax CD-3 என்ற புதிய நகல்தடுப்பு சங்கேதத்தை உள்ளடக்கியது. அதாவது இந்தக் குறுவட்டை நீங்கள் வாங்கினால், இதை மாத்திரமே பயன்படுத்தி பாடல்களைக் கேட்க முடியும். இதை வேறொரு டிஜிட்டல் வடிவில் (உதாரணமாக, எம்பி3) நகலெடுக்க முடியாது. ஆனால் சில அனுமதிகள் உண்டு; இதிலிருக்கும் பாடல்களை உங்கள் கணினியில் பதிந்து கொள்ளலாம். ஆனால் பாட்டைக் கேட்க இந்தத் தட்டுடன் வரும் நிரலியையும் நீங்கள் கணினிக்கு ஏற்றியாக வேண்டும். அது நீங்கள் தகாத காரியம் செய்யும் சமயமெல்லாம் (அதாவது இன்னொரு குறுவட்டுக்கு நகலெடுத்தல், எம்பி3 ஆக்கல்..) உடனே இடைவெட்டி தடுக்கும். உங்கள் கையளவு டிஜிட்டல் இசைக்கருவியில் (வின்டோஸ் மீடியா மாத்திரமே, எம்பி3 அல்ல) சங்கேதத்துடன் நகலெடுத்துக் கேட்கலாம்.
இதுபோன்ற ஆராய்ச்சிகளையும், சங்கேத வளர்ச்சிகளையும் நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். இது தொழில்நுட்ப வளர்நிலையைக் குறிக்கிறது. நல்ல சங்கேதம் உருவாகிவிட்டால் சங்கீதத்தை டிஜிட்டல் வடிவில் தடையில்லாமல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், வழக்கறிஞர்களின் பயமுறுத்தல் இன்றிக் கேட்க முடியும்.
ஆனால், செய்தவர்கள் ஒழுங்காகச் செய்தார்களா என்றால் இல்லை. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜான் ஹல்டர்மான் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி இது மிகவும் சொத்தையான பூட்டு என்று தெரிகிறது. அவர் இந்தக் குறுந்தகட்டை கணினியில் பொருத்தும்போது shift பொத்தானை அழுத்திக் கொண்டு பொருத்தினால், இந்தச் சங்கேதம் செயல்படுவதில்லை என்று கூறுகிறார். அதோடு இல்லாமல் இந்த சங்கேதச் சமாச்சாரம் மக்கின்டாஷ் மற்றும் லினக்ஸ் கணினிகளில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இன்னும் அந்தக் கட்டுரையில் சன்காம் சங்கேதத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார். பல வழிகளில் அதைத் தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்.
எந்தவிதமான துணை நிரலிகளின் தேவையும் இன்றி, கணினி பற்றிய அதிக அறிவும் தேவையில்லாமல் வெறும் shift பொத்தானைப் பயன்படுத்தி சங்கேதத்தைத் தகர்க்கமுடிவதால் இது முழுத் தோல்வி என்று அவர் கருத்து தெரிவிக்கிறார். எனவே, இது விரைவில் கைவிடப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* * *
சுபம் போட்டுவிடலாம் என்று பார்த்தால் முடியவில்லை.
இன்று வெளியான சன்காமின் அறிக்கைப்படி அவர்கள் ஜான் ஹால்டர்மானின் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகத் தெரியவருகிறது. அதாவது அந்தக் கட்டுரையில் “இது முழுத் தோல்வி, எனவே இசை நிறுவனங்களால் கைவிடப்படும்” என்று அவர் சொல்லியிருப்பது தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சாத்தியங்களைப் பாதிக்கிறது என்றும் இதனால் அவரும் பிரின்ஸ்டன் பல்கலையும் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கேட்கப் போகிறார்கள்.
shift பொத்தானை பிடித்துக் கொண்டால் சமாச்சாரம் காலி என்று சொன்னது அமெரிக்க அரசின் டிஜிட்டல் காப்புரிமை நிர்வாகம் (Digital Rights Management, DRM) சட்டங்களுக்குப் புறம்பானது (சங்கேதத்தைத் தகர்க்க உதவுதல், சங்கேதத்தைத் தவிர்க்க உதவுதல் போன்றவை இந்தச் சட்டத்தின்படி குற்றம். இதே காரணத்தைக் காட்டித்தான் டிவிடிகளைத் தகர்ப்பது பற்றிச் சொன்னவரின்மீதும் வழக்கு தொடுத்தார்கள்).
இவர்கள் சங்கேதம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வெளியிடுவார்கள் அது வெற்று வேட்டு என்று சொன்னால் அது குற்றம். அமெரிக்க அரசின் சட்டம் எப்படி அறிவு வளர்ச்சிக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறது என்று பாருங்கள்.
* * *
என்னுடைய அம்மா சொன்னது;
ஒரு/இரு வயதுக் குழந்தையாக நான் இருந்தபோது என்னுடைய அம்மா வேலையைக் கவனிக்க விடாமல் தொந்தரவு செய்தால் கட்டிப் போடுவதாகப் பயமுறுத்துவார்கள். நான் தொடர்ந்தும் படுத்தினால், காகிதப் பொட்டலங்கள் கட்டிவரும் சணலில் ஒன்றை எடுத்து என்னுடைய அரைஞாண் கயிறில் செருகிவிட்டால் போதும் நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து விடுவேன். அவர்கள் வேலை எந்தவித இடையூறும் இல்லாமல் முடிந்த பிறகு சணலை எடுத்துவிடுவார்கள்.
இவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்த என்னை அமெரிக்க இசை நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் முன்மாதிரியாகக் காட்டலாம். குறைந்த கட்டணத்தில் நடித்துக் கொடுக்க நான் தயார்.
* * *