கோல்ட்மான் சாக்ஸ் என்னும் முன்னனி பொருளாதார நிபுணர்கள் நிறுவனம் 2050ஆம் ஆண்டில் உலகின் முக்கிய பொருளாதாரங்களாக எந்த நாடுகள் இருக்கும் என்று ஒரு சோதிடத்தை வெளியிட்டிருக்கிறது. நாளைக்குப் பங்குச் சந்தையில் யாரால் முன்னேற முடியும் என்று கணிப்பதே சிரமமாக இருக்கின்ற நிலையில் ஐம்பது வருட ஆரூடத்தை முன்வைத்திருப்பது கோல்ட்மானின் தைரியம்தான் என்று கூற வேண்டும். 2050ல் முக்கியமான பொருளாதாரமாக சீனாதான் இருக்கும் (45 டிரில்லியன் டாலர்கள்) என்பது அவர்கள் கணிப்பு. தொடர்ந்து அமெரிக்கா (35 டிரில்லியன்), இந்தியா (30 டிரில்லியன்), ஜப்பான், பிரேசில், ரஷியா என ஆறு முக்கியமான வர்த்தக முதலைகள் உருவாகும். இன்றைக்கு முக்கியமான நாடுகளாக இருப்பவை; அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி. இதில் இல்லாத நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யாவின் மொத்த மதிப்பு ஜி6 நாடுகளின் பொருளாதாரத்தில் பதினைந்து சதவீதம்தான். ஆனால் கோல்ட்மானின் கணிப்புப்படி இன்னும் நாற்பது ஆண்டுகளில் இவற்றின் மதிப்பு 100%ஐக் கடந்துவிடும். பின்னர் தொடர்ந்த வளர்ச்சியால் அது மேலோங்கி நிற்கத் தொடங்கும். இந்த வளர்ச்சி முதல் நாற்பதாண்டுகளில் வேகமாக நடக்கும், பின்னர் அது நிதானமடையத் தொடங்கும். இந்த நால்வரின் (சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா) வளர்ச்சியில் மூன்றில் இரண்டுபங்கு நேரடிப் பொருளாதார வளர்ச்சியாகவும், மீதம் ஒரு பங்கு அவர்களின் பணம் வலுவடைந்து மாற்று வீதம் உயர்வதாலும் நிகழும்.

இந்தக் கணிப்பைச் சொல்ல கோல்ட்மான் தற்சமய வளர்ச்சி வீதத்தை மாத்திரமே உபயோகப்படுத்தி அதை நீட்டித்துக் கணக்கிடவில்லை. அவர்களுடைய மக்கள் தொகை, உழைக்கும் வயதில் இருக்கும் மக்கள் வீதம், அவர்கள் சொத்து உயர்வு போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதே கணக்கீடுகளை வைத்துக்கொண்டு அவர்களின் கடந்த கால நிலவரம் கணிக்கப்பட்டிருக்கிறது. அது கிட்டத்தட்ட வரலாற்றை துல்லியமாக கணித்திருக்கிறது.

பொருளாதாரம் வளர்வதால் தனிநபர் நிலைமையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெரிதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை. தற்சமயம் பணக்கார நாடுகளாக இருப்பனவற்றின் குடிமக்கள் தொடர்ந்தும் பணக்காரார்களாகவே இருப்பார்கள். இந்தக் கணிப்புகளெல்லாம் நாடுகளின் பொருளாதார நிலையைப் பற்றியவைதான், தனிமனித முன்னேற்றத்திற்குச் செல்லாது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், இந்தியாவில் முதலீடு செய்து, பொருளீட்டி தங்கள் நிலையை முன்னேற்றிக்கொள்வார்கள் மேலை தேச நாடுகள்.

இந்தக் கணிப்புகளெல்லாம் அரசியல் குழப்பங்கள் வந்தால் முற்றாக மாறிப்போக வாய்ப்புகள் இருக்கின்றன.

* * *
இந்தக் கோல்ட்மான் கணிப்பில் தொழில்நுட்பங்களை மக்கள் எந்த அளவிற்கு உட்கிரகித்துக் கொள்வார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்குப் பொருளாதாரம் பற்றி அதிகம் தெரியாது. பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பதைப் பற்றி நன்றாகத் தெரியும். அது மிகவும் சுலபம் – நேரடியாக ஒரு மின்சாதனங்கள் கடைக்குச் சென்று நேற்றைக்கு வந்த பிளாஸ்மா தொலைக்காட்சியில் ஒன்று, புதிய சோனி வாயோ மடிக்கணினி, அப்படி இப்படி என்று பையை நிரப்பிக் கொண்டால் ஒருவருடச் சம்பளம் காலி. இதை என்னால் திறமையாகச் செய்யமுடியும் (அதாவது நல்ல தொலைக்காட்சி, கணினி என்று பார்த்து வாங்கமுடியும் என்று சொல்கிறேன்). ஆனால் இது சம்பந்தமாக எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் இந்தக் கணிப்பின்மீது என்னை முற்றாக நம்பிக்கை இழக்கச் செய்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு இணையத்தின் வரவு யாருக்கும் தெரியாது. முப்பது வருடங்களுக்கு முன்பு கணினியின் பெருக்கம் யாரும் கனவு கண்டதில்லை. ஆனால் இன்றைக்கு இவை நாம் வாழும் நிலையையே மாற்றியமைத்துள்ளன. வெறும் தொழில்நுட்ப, பொருளாதார சமாச்சாரம் இல்லை இது. இன்றைக்கு கணினியைத் தெய்வமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஓவியர்கள் இருக்கிறார்கள். என்னுடைய மூன்று வயது மகனுக்கு இன்னும் மூச்சா வரும் நேரம் தெரிவதில்லை. ஆனால் அவனுக்கு கணினியில் தன்னுடைய பெயரில் கடவுச் சொல்லைக் கொடுத்து உள்ளே போகத் தெரியும். அந்த அளவிற்கு அடிப்படை வாழ்முறையையே மாற்றியமைத்த இந்தத் தொழில்நுட்பத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கனவில்கூட கண்டதில்லை.

அவர்களின் பின்னோக்கிய கணக்கீடுகள் கடந்த காலத்தைத் துல்லியமாக கணக்கிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அது மிகவும் எளிது. இன்றைக்கு என்ன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும். பத்தாண்டுகளுக்கு முன்/ஐம்பதாண்டுகளுக்கு முன் என்ன இருந்தது என்றும் தெரியும். அந்தத் தொழில்நுட்பங்கள் எந்த வீதத்தில் உட்கிரகிக்கப்பட்டு பொருளாதாரம் மாறியது என்பதும் தெரியும். ஆனால் வருங்கால அறிவியல்??

எனவே, அடுத்த ஐம்பதாண்டுகளில் யார் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பது பொருளாதார நிபுணர்கள் கையில் இல்லை. அது அறிவியாளர்கள் கையில்தான் என்பதை என்னால் நிச்சயமாக ஊகிக்க முடியும் (அவர்கள் இதுபோல் சோசியம் சொல்லத் தயங்குவார்கள்). எனவே இந்த ஐம்பதாண்டு சமாச்சாரம் எல்லாம் வெட்டி, ஏனென்றால் அவர்களுக்கு ஆட்டையும், மாட்டையும் நகலெடுத்த மரபியளாலர்களுக்கு மனிதனை நகலெடுக்க எத்தனை ஆண்டுகள் தேவை என்ற தரவு கைவசம் இல்லை.

சொல்லப்போனால், நாளை மறுநாள் காலை நியூயார்க் சந்தையில் சரியப்போகும் வர்த்தக நிறுவனத்தைப் பற்றிகூட அவர்களுக்குத் தெரியாது.

கோல்ட்மான் சாக்ஸி பொருளாதாரக் கட்டுரை. (படிப்பதற்கு அடோப் அக்ரோபாட் தேவை)