கடந்த வருடம் இதே சமயத்தில் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். இவ்வருடம் பொருளாதார மற்றும் வேலை நிர்ப்பந்தங்களின் காரணமாக சென்னை மாநாடு கனவிலும் கூட சாத்தியமில்லாமல் போய்விட்டது.

நண்பர் பத்ரி சேஷாத்ரி மாநாட்டு நடப்புகளை அரங்கினுள் இருந்தபடியே தனது மடிக்கணினி மூலம் உடனடியாக வலைப்பதிகிறார். மிகவும் நல்ல முயற்சி. கடந்த மாநாட்டில் லினக்ஸ் வளர்ச்சிகள் பற்றியும், லினக்ஸ் கொண்டு தமிழக/ஈழ/மலேஷியப் பள்ளிகளில் எப்படி விலைகுறைந்த கணினி ஆய்வங்களை அமைக்கலாம் என்பது பற்றியும் இரண்டு உரைகளை நிகழ்த்தினேன். இந்த வருடம் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூலச் செயலிகள் குறித்த கட்டுரைகள் ஏதும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு கிடைத்தவுடன் அதைப்பற்றிய குறிப்புகளை எழுதுவேன். ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலைப் பார்த்தவுடன் மனதைப் பாதித்த ஒரு சில விஷயங்கள் பற்றி இப்பொழுது எழுதியே ஆக வேண்டும். இம்மாநாடு சென்னையில் நடக்கிறது, இதில் சென்னையில் இருக்கும் இரண்டு பெரிய கல்வி நிறுவனங்களான சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழகம் (ஐஐடி) இரண்டிலும் இருந்து எந்தவிதமான பங்களிப்புகளும் இல்லை. குறிப்பாக ஐஐடி, கல்விக்கென்ற இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஐஐடிகள் பெரும்பகுதியைப் பெற்றுக்கொள்கின்றன. அவை இந்தியாவின் மிகச்சிறந்த இளம் மூளைகளை தொழில்நுட்பக்கல்வி பெறச் செய்கின்றன. ஆனால், இந்த இளைய சமுதாயமும், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் குழுக்களும் இந்தியாவின் தொழில்நுட்பத் தேவைகளை முற்றிலும் உதாசீனம் செய்கின்றனர் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

கடந்த வருடங்களில் சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா நாடுகளில் மாநாடு நடந்த பொழுது, பங்களிப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு வெளியிருந்து வந்தவர்கள். அந்த நேரங்களில் அயல்நாடுகளில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வசதியின்மை காரணமாகத் தோன்றியது. ஆனால் இந்த மாநாட்டிலும் பங்களிப்பாளர்களில் பெரும் வீதத்தினர் அயல்நாடுகளில் வாழும் தமிழர்களாகத் தெரிகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து கவலையளிக்கிறது.

கடந்த மாநாட்டில் மைக்ரோஸாப்ட், ஐபிஎம், ஆரக்கிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சென்றவருடம் சிலிக்கன் பள்ளத்தாகில் நடந்ததால் பெரிய அளவில் கலந்துகொண்டார்கள். இம்முறை அவர்களையும் மாநாட்டில் காணவில்லை. இந்த மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய தயாரிப்புக்கூடங்களை அமைத்திருக்கிறார்கள். அவர்களை இம்மாநாட்டுக்கு அழைத்துவராதது பெரிய இழப்பாகத் தோன்றுகிறது. இதே போல, சென்னையில் இருக்கும் லினக்ஸ் தன்னார்வலர்கள், தளையறுமென்கலன் – இந்தியா (Free Software Foundation – India) இவர்கள் இல்லாதது மாநாட்டைச் சோகையாகக் காட்டுகிறது.

இதெல்லாம்தவிர நான் மாநாட்டுக்குப் போகமுடியாமல் போனது தனிப்பட்ட வகையில் எனக்கு ஒரு இழப்புதான். அருமை நண்பர்கள்; கல்யாண், மணிவண்ணன், அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன் போன்றவர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறேன்.