Best Regional IndiBlog Award
சில நாட்களுக்கு முன்னால் நண்பர் குமரகுரு என்னுடைய வலைப்பதிவில் இண்டிபிளாக் குழுவில் சிறந்த வட்டார வலைக்குறிப்பு விருதுக்கு என்னுடைய வலைக்குறிப்பைப் பரிந்துரைத்திருப்பதாக எழுதினார். அதுவரை எனக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. முதலில் மூன்று வலைக்குறிப்புகள் இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. பிறகு அவற்றில் ஒன்றை நீக்கிவிட்டார்கள் (திருமதி காமத்தின் கன்னட வலைக்குறிப்பு வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை, அவர் கன்னடத்தில் நேரடியாக எழுதுவதில்லை, அலகிட்ட படங்களைத்தான் வலைக்குறிப்பாக அவ்வப்பொழுது சேர்க்கிறார் என்று ஒருவர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்).
பிறகு வாக்களிப்பில் எனக்குப் பத்தொன்பது வாக்குகளும், பத்ரிக்குப் பதினெட்டு வாக்குகளும் கிடைக்க என்னுடைய வலைக்குறிப்பு சிறந்த வட்டார (மொழி) விருது பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்கெடுப்பும் விருது வழங்கலும் நல்ல முயற்சிதான். ஆனால், என்னவோ ஆரம்பம் முதலே இதில் எனக்கு ஆர்வம் இல்லை. இதற்கு முக்கியமான காரணம், விருதுகளுக்கான பிரிவுகள்தான் என்று தோன்றுகிறது. Best Indian Male Blogger, Best Indian Female Bloggar, IndiBlog with the best tagline, IndiBlog Lifetime achievement என்று அபத்தமான தலைப்புகளில் வாக்கெடுப்புகள் நடைபெற்றன. மகளிர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் எவரும் பெண்கள், பெண்களின் பிரச்சனைகள், பெண்மை சம்பந்தமான விஷயங்களில் கருத்துக்கள் எழுதுவதாகத் தெரியவில்லை. அதே போல தலைசிறந்த ஆண் குறிப்பர் தன்னுடைய வலையில் ஆண்மை பொங்கக் கருத்துரைப்பதாகத் தெரியவில்லை. ஒற்றைவரி உப தலைப்புக்காக ஒரு விருது என்பதும் என்னைக் கிளர்ந்தெழச் செய்யவில்லை. இரண்டு வருடத் தொழில்நுட்பத்திற்கு ஆயுள்கால விருது வேறு.
இன்னொரு விஷயமும் உறுத்துகிறது. இந்தியாவில் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் Indian Movies என்றும் Regional Movies என்றும் எழுதுவார்கள். உண்மையில் இந்திப் படங்கள் கற்பனையில் வறட்டுத்தனமாக இருக்கும், மலையாள, பெங்காலி, அஸ்ஸாமியப் படங்களில் இருக்கும் கலை நயமோ, தெலுகுப் படங்களில் இருக்கும் கற்பனைத் திறமோ, தமிழ்ப் படங்களின் தொழில்நுட்ப முன்னேற்றமோ, நல்ல இசையமைப்போ எதுவுமே ஹிந்திப் படங்களில் தென்படாது. அதே போலத்தான் இங்கும்; இரண்டு பிரிவுகள், ஒன்று தலை சிறந்த இந்தி வலைக்குறிப்புக்கு, மற்றது எட்டாம் அட்டவணையில் காணப்படும் “மூத்தாள் குழந்தைகளுக்கு”.
எனக்கு ஆறு, ஏழு வயதிருக்கும்போது, எங்கள் தெருவில் ஞாயிற்றுக்கிழமைகளில் அண்ணா என்று மரியாதையாக விளிக்கப்படும் (எட்டாம் வகுப்பு) சந்துரு தெருப்பசங்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்துவார். தன்னுடைய ஆஸ்துமா இழுப்பின்கூடவே நாள் முழுவதும் மைக் (துருபிடித்த ஓவல்டின் டப்பா) வைத்துக் கொண்டு ஓட்டப்பந்தய அழைப்புகளையும், நேர்முக வர்ணனைகளையும் கத்திக் கொண்டிருப்பார். முடிவுகள் பெரும்பாலும் இப்படி இருக்கும், “சீனியர் பெண்கள் பிரிவில் நூறு மீட்டர் ஓட்டத்தில் செல்வி ராஜாத்தி முதல்பரிசைப் பெறுகிறார். வேறு யாரும் ஓட்டத்தில் கலந்துகொள்ளாததால் அவரே இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசையும் தட்டிச் செல்கிறார்” (முதல் பரிசு ஐந்து புளியங்கொட்டைகள், ஒத்தையா, ரெட்டையா விளையாட). இப்படி என்னுடைய பக்கத்துவீட்டு சோனிப்பிச்சான் ராஜாத்தி போல, ஹிந்திப் பிரிவில் ஒருவரே தனியாக ஓடி முதல் பரிசையும் பெற்றுச் செல்கிறார்.
இந்தியில் வலைக்குறிப்பு எழுதுபவர்களே மிகவும் குறைவு (விரல் விட்டு எண்ணிவிடலாம்). தமிழில் இது வளமாகவே இருக்கிறது. சிறுகதைகள், கவிதைகள், திரை விமர்சனங்கள், பெண்ணியம், தொழில்நுட்பம், என்று தனிப்பட்ட தலைப்புகளில் பலர் காத்திரமான விஷயங்களை எழுதுகிறார்கள். இவற்றில் பல, இன்டிபிளாக் விருதுக்குத் தகுதி பெறா. ஏனென்றால் இவை தமிழில் எழுதப்பட்டவை. உண்மையிலேயே மூத்தாள் குழந்தைதான், மற்ற விருதுகளைப் பெற்றவர்கள் அவர்களுடைய வலைக்குறிப்பில் அதைப் போட்டுக்கொள்ள படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சில விருதுகளுக்கு அதெல்லாம் கிடையாது.
இந்தக் காரணங்களால்தான் இந்த வாக்கெடுப்பையும், விருதையும் ஒரு பெரிய விஷயமாக ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது. ஆனாலும், இப்படி ஒரு தகுதி எனக்கிருப்பதாக என்னைப் பரிந்துரைத்த நண்பர் குமரகுருவுக்கு என்னுடைய நன்றிகள். (ஒரு ஓட்டில் சிறந்த வடிவமைப்பிற்கான விருதைத் தவறவிட்டவர். அந்தப் பிரிவில் அதிக வாக்குகளைப் பெற்றவரின் வலைக்குறிப்பு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முழுவதுமாகக் குழம்பித்தான் காட்சியளிக்கும்).
முக்கியமான விஷயம், பல சமயங்களில் என்னுடைய வலைக்குறிப்புக்கு விஷயதானமும், ஊக்கமும் பத்ரியிடமிருந்து கிடைக்கின்றன. போதுமான மெஜாரிட்டி இல்லாததால் அவரும் இந்தக் கூட்டாட்ச்சியில் இடம்பெறுகிறார்
.
என்னைப் பாராட்டித் தனியஞ்சலில் எழுதியவர்களுக்கு, ராயர் காபி கிளப்பில் வாழ்த்திய நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள். பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லி ‘பொன்குஞ்சைக்’ குளிரச் செய்த ஹரியண்ணாவுக்கு ‘ஒரு வார்த்தை’ சொல்லக் கடமைப்பட்டவன். உச்சி மோந்த இரா.முருகனுக்கும்தான்.
Popularity: 4% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
வெங்கட்,நீங்கள் வெற்றி பெற்றதற்கு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் ![]()
மேலும்,வெற்றி பெற்ற ஆண்,பெண் வலைகுறிப்பர்கள் தமிழ் நாட்டவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
என்னுடைய வருத்தமெல்லாம் காசி அவர்களின் வலைப்பதிவை பரிந்துரை செய்யாமல் விட்டதுதான்.
இந்த விருது போன்று தமிழ் வலைப்பதிவுகளுக்கும் வாக்கெடுத்து விருது வழங்க வேண்டும் என்று மதி அவர்களை கேட்டுக்கொண்டேன்.
அவரோ என்னை ‘Tamilblogs’ yahoo குழுமத்தில் இதைப் பற்றி எழுத சொல்கிறார் – பார்ப்போம்!
“இரண்டு வருடத் தொழில்நுட்பத்திற்கு..”
Blogging has been going on for at least the last 6 years. Slashdot began in sept 1997.
David Winer (author of RSS 2.0 specification) started blogging in April 1997.
http://newhome.weblogs.com/historyOfWeblogs
வாழ்த்துகள் வெங்கட்! (இவர்கள் தேர்ந்தெடுக்காவிடினும்). ஹிந்தியே தேசிய மொழி என்று நினைத்துக்கொண்டுள்ளனர், இல்லாவிடில் “Best regional IndiBlog” என்று எழுதியிருக்கமாட்டர்கள்.
குமரகுரு:
>>
என்னுடைய வருத்தமெல்லாம் காசி அவர்களின் வலைப்பதிவை பரிந்துரை செய்யாமல் விட்டதுதான்.
>>
உங்கள் அன்புக்கு நன்றி. எனக்கே இன்னும் என் மேல் நம்பிக்கை வரவில்லை:-) உங்கள் ஆங்கில வலைபதிவும் ஒரு வாக்கில் தவறவிட்டதாக அறிந்தேன். இன்னொரு முறை வெல்ல வாழ்த்துகள்!












அன்றே உங்களை வாழ்த்தவேண்டும் என்று நினைத்தேன். எனக்கும் இவர்கள் இதை நடத்திய விதத்தில் அவ்வளவு கருத்தொற்றுமை இல்லை. உங்களுக்கும், ஒரு வாக்கில் தவறவிட்ட பத்ரிக்கும் வாழ்த்துகள். இதைப்பற்றிய உங்கள் நிலையை தெளிவாக்கியதன் மூலம், இன்னும் உயர்ந்துவிட்டீர்கள்.