ஹெச்பி-யின் நூறு சாதனங்கள
எல்லா கணினி நிறுவனங்களும் தங்கள் கணினி தொழிலை உபதொழிலாக்கிவிட்டு பிற சாதனங்களையும் சேவைகளையும் முன்னிருத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கணினி தயாரிப்பாளராக இருத்தல் ஒரு பெரிய தொழில்நுட்ப பரிவட்டத்தைத் தலையில் கட்டிவிட்டது. குறிப்பாக கேட்வே, டெல் போன்ற நிறுவனங்கள் கிட்டதட்ட ஐ.ஆர் 8 நெல்பயிரைப்போல குறுகிய கால அறுவடை இரகங்களாக முன்னேறின. இவர்கள் ஐபிஎம், ஹெச்பி போன்றவர்களை வீழ்த்தி மேசைக்கணினி வியாபாரத்தில் முதலாவது, இரண்டாவது இடங்களுக்குப் போட்டிபோடத் தொடங்கியபோது உலகமே வியந்தது உண்மை. இன்றைக்கு நிலை தலைகீழாகிவிட்டது. ஒய்2கே என்ற பதிநூறாண்டுப் பிழையைச் சரிகட்டிவிட்டும், புள்ளிவணி எனும் புரட்சியைச் சரித்துவிட்டும் இன்றைக்குப் பலர் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டார்கள். இந்த நிலையில் கணினி வியாபாரத்தை மாத்திரமே நம்பி இருப்பது தங்கள் வருங்காலத்திற்கு நல்லதில்லை என்ற முடிவிற்கு இந்த முதலைகள் கிட்டத்தட்ட வந்தாகிவிட்டன. அதுவாக இருக்கையில்; ஐபிஎம் வெள்ளைத்தாள் வியாபாரத்திலிருந்து, விளக்கெண்ணெய் வியாபாரம் வரை ஒரு கை பார்க்கலாம் என்று பார்க்கிறது. ஹியுவ்லெட் பக்கார்ட்டும் சளைக்காமல் கலர் காகிதம், டிஜிட்டல் காமெரா, காதில் மாட்டிக் கொள்ளும் புளுடூத் ஹெட்போன், என்று பரவுகிறது. கேட்வே பிளாஸ்மா தொலைக்காட்சி, எம்பி3 வாக்மேன் என்று பாய்கிறது. அது வரப்போகிறது, வந்துவிடும் என்று பயமுறுத்தும் கைக்கணினி வருவதாகத் தெரியவில்லை; தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திப் போடப்பட்டிருக்கிறது. எல்லாவற்றும் மேலாக டெல் தனது பெயரில் இருந்த (Dell Computers) கணினியைத் தொலைத்துவிட்டு டெல் என்று மொட்டையாகி இருக்கிறது. பாருங்கள் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் கணினி இன்றைக்குக் கெட்டவார்த்தை ஆகியிருக்கும் அதிசயத்தை. மூன்றாண்டுக்கு முன்னால் சர்வம் கணினிமயமாக இருந்தது. டெல் இப்பொழுது கையளவு கணினி, கணினியைக் கட்டிக்காக்கும் சங்கிலி போன்ற வியாபாரங்களில் இறங்கியிருக்கிறது. விரைவில் இவர்கள் டிஜிட்டல் பூட்டு, போன்ற சமாச்சாரங்களை விற்றால் அதிசயப்படாதீர்கள்.
இது இப்படியாக இருக்க; ஹெச்பி இந்த வருட இறுதிக்குள் தான் ஒரு நூறு நுகர்வோர் சாதனங்களை வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறது. இது என்னைப் போன்ற சாதனப்பித்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. முதல் தவணையாக சிலவற்றை இந்த வாரம் அறிவித்திருக்கிறது. அந்த வெளியீட்டை அவர்கள் இவ்வாறு பறைசாற்றுகிறார்கள்; “Radically simple, better together.”
ஆனால் வெளியான சாதனங்களைப் பார்த்தால் இது முற்றிலுமான சந்தை விளம்பரம் என்றுதான் தோன்றுகிறது. ஒரு சில டிஜிட்டல் காமெராக்களும், அலகிகளும் (scanner) வெளியாகியிருக்கின்றன. ஆனால் இவற்றில் எதுவும் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக, அவர்கள் கைக்கணினியின் ஸ்மார்ட்கார்ட் பொருத்தியில் இணையக்கூடிய ஒரு சிறிய காமெரவை முற்றிலும் புரட்சிகரமான வடிவமைப்பு என்று விளம்பரித்திருக்கிறார்கள். ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் ஜப்பானில் இருந்தபொழுது என்னுடைய காஸியோப்பியா E-100 கைக்கணினிக்கு காஸியோ நிறுவனம் ஒரு மெகாபிக்ஸெல் காமெராவை அறிமுகப்படுத்தியது. அந்த சமயத்தில் அமெரிக்காவில் ஒரு நிறுவனமும் வண்ணத்திரையுடன் கூடிய கைக்கணினியைக்கூட வெளியிட்டிருக்கவில்லை. (அடியேன் காஸியோப்பியா வாங்கி காசு செலவழித்துவிட்டு, காமெரா, ஏற்றிறக்கி (Modem) போன்ற புறக்கருவிகளுக்குக் காசில்லாமல் ஜொள்ளோடு நின்றுபோனேன்). எனவே, ஹெச்பியின் இந்தக் காமெராவில் எந்தப் புதுமையும் இல்லை.
இவர்களது இன்னொரு வெளியீடு, நேர்குத்தாக நிறுத்திவைக்கக்கூடிய அலகி. படுக்கையில் கிடந்த அலகியை நிறுத்தி அலுவலக மேசையில் இடத்தைச் சேமிப்பதாக ஹெச்பி காலரை உயர்த்திக் கொள்கிறது. ஆனால், உண்மையில் நான்கு வருடங்களுக்கு முன்னால் ஜப்பானில் என்னுடைய மேசையில் ஒரு கெனான் அலகி நின்றுகொண்டிருந்தது. மொத்தத்தில் ஹெச்பியின் ஆய்வகம் புதிதாக எதையும் சிந்திக்கவில்லை என்று தெரிகிறது.
சொல்ல மறந்துவிட்டேனே; பட்டியலில் இருக்கும் பிற “உயர் தொழில்நுட்பப் புரட்சி சாதனங்களில் “Excellent Quality Paper for Photosmart Color Printers” -ம் அடக்கம். சாதனப் புரட்சியின் உச்சம் மயிர்க்கூச்செறிகிறது. இந்த ரீதியில் வருடத்தில் ஒரு நூறு என்ன ஒராயிரம் தொழில்நுட்பச் சாதனங்களைக்கூட வெளியிடலாம். இது ஹெச்பியில் மாத்திரம்தான் என்று இல்லை, மொத்ததில் அமெரிக்கா முழுவதிலுமே இப்படித் தொழில்நுட்ப மூளை வறட்சி தலைவிரித்தாடுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஜப்பானில் இருந்த MiniDisc சாதனங்கள், நான்கு வருடங்களுக்கு முன்னால் வந்த வண்ணத்திரை செல்பேசிகள் போன்றவற்றை வட அமெரிக்காவில் இப்பொழுது புரட்சிகரமாகச் சந்தைப்படுத்தி வருகிறார்கள். புதிய, சிறிய, திறமையான, விலை குறைந்த சாதனங்கள் எல்லாம் பெரும்பாலும் ஜப்பானிலும், கொரியா, தைவானிலிருந்தும்தான் வெளிவருகின்றன. இணையத்தில் சென்று எத்தனை அமெரிக்க நிறுவனங்கள் பிளாஸ்மா மற்றும் எல்சிடி தொலைக்காட்சிகளையும் கணினித் திரைகளையும் வடிவமைத்துள்ளன என்று தேடிப்பாருங்கள்.
அமெரிக்கர்களுடைய முழுக்கவலை; peer-to-peer network, MP3, DVD, இவற்றை எப்படிச் சட்டமியற்றி சராசரி நுகர்வோரிடமிருந்து பறிக்கலாம் என்பதே.
Popularity: 2% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.












Comments
No comments yet.
Leave a comment