• வார்த்தை விளையாட்டு.

    by  • September 28, 2003 • நகைச்சுவை • 0 Comments

    நிர்வாகச் சந்திப்புகள், சந்தை அலசல், வரவுசெலவுக் கணக்கு என்று ஒவ்வொரு முறையும் சந்திப்புகளுக்கு உள்ளாகும்பொழுது “பூமியில் மானிட ஜென்மம் எடுத்த பாவம் என்ன?” என்று என்னையே நான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக எங்கள் மார்க்கெட்டிங்க் மீட்டிங். நான் வேலை செய்வது முற்றிலுமான ஒரு ஆராய்ச்சி நிறுவனம், இதற்கு மார்க்கெட்டிங்க் மண்ணாங்கட்டி என்ன வேண்டிக்கிடக்கிறது. மிகச் சிறிய எங்கள் அலுவலகத்தில் என்னையும் சேர்த்து ஏழு விஞ்ஞானிகள். எங்களுக்கு மேலாளராக இன்னொரு விஞ்ஞானி (இவர் ஆய்வகத்தில் உள்ளே நுழையமாட்டார்). எங்களை முதுகெலும்பாக வைத்து நடக்கும் நிறுவனத்தில் ஒரு தலைவர், இவருக்குக் கீழே மார்க்கெட்டிங் குழு, கணக்குப் பிரிவு, தகவல் தொடர்புக் குழு என்று மூன்று நிர்வாகப் பிரிவுகள். இதில் மொத்தம் பத்துப் பேர். அதாவது எட்டு விஞ்ஞானிகளைச் சந்தைப் படுத்த, அவர்களுக்குக் கணக்கு வழக்கு பார்க்க, கடுதாசி எழுத என்று பத்துப் பேர். என்ன பம்மாத்து இது. இவர்களின் சராசரி சம்பளம் ஆராய்ச்சியாளர்களின் சம்பளத்தில் பார்க்க 130%. உண்மையில் கடந்த இரண்டு வருடங்களில் இவர்கள் எனக்கு எந்த ஒரு புதிய வேலையையும் கொண்டுவந்ததில்லை. எனக்குக் கிடைக்கும் பெரும்பாலான வேலைகள், தனியார் நிறுவனங்களிலிருந்தோ, பல்கலைக் கழகங்களிலிருந்தோ என்னுடைய பெயரைக் கேள்விப்பட்டு அவர்கள் நேரடியாகத் தரும் திட்டங்கள்தான். இவர்கள் பம்மாத்துக்கு ஒரு முடிவே கிடையாது. வாரம் தோறும் திங்கட்கிழமை காலையில் ஒன்றரை மணி நேரம் மார்க்கெட்டிங்க் கூட்டம். பல சமயங்களில் வேலைகளைத் தவிர்த்துவிட்டு இந்த இரங்கல் கூட்டத்திற்குப் போயாக வேண்டும். போகவில்லை என்றால் தெய்வ குற்றம். சக பிரிவினர்களுடன் இணக்கம் காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். அதாவது கல்யாணத்தை தவறவிட்டாலும் விடலாம், கருமாதியை விடக்கூடாது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதைக் கேட்டுக் கொண்டிருப்பது அப்படியன்றும் எளிதான செயல் இல்லை. திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான வார்த்தைகள் வந்து விழும். அதே வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்குக் கதைப்பார்கள்.

    இணையத்தில் Bullshit Bingo என்று ஒரு வார்த்தை விளையாட்டு இருக்கிறது. இத்தகைய சந்தை அலசல்கள் இன்னபிற நிர்வாகக் கூட்டங்களின்போது தூக்கம் வராமல் இருப்பதற்காக ஒரு புண்ணியவான் உருவாக்கிய விளையாட்டு இது. இதை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விளையாட முடியும். கூட்டத்திற்குப் போகும்போது ஒரு தாளில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதி எடுத்துச் செல்ல வேண்டும்;

    bottom line, synergy, revisit, paradigm, bandwidth, hardball, value-added, value-driven, proactive, win-win, think outside the box, out of the loop, strategic fit, client focus, …

    மார்க்கெட்டிங் ஆசாமிகள் பேசும்போது உற்றுக் கேட்க வேண்டும், அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னதும் தாளில் இருக்கும் பட்டியலில் இருந்து அதை அடித்து விடவேண்டும். இப்படியாக முதல் பத்து வார்த்தைகளை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் இரண்டு கைகளையும் இரகசியமாக உயர்த்த வேண்டும், அல்லது எழுந்து நின்று கால்ச்சட்டையை சரி செய்ய வேண்டும். அவரே அன்றைய கூட்டத்தில் வெற்றியாளர். இதை இன்னும் சுவாரசியமாக்க பணப் பரிசுகளை வைத்துக்கொள்ளலாம். (இதில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது, மார்க்கெட்டிங்க் கூட்டங்களால் பைசா பிரயோசனமில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது).

    சென்ற வாரம் மார்க்கெட்டிங்க் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. அடுத்த மாதத்திற்கான மார்க்கெட்டிங்க் இலக்கு பற்றி அவர்கள் கொடுத்திருந்த தாளில் நிறையவே இடம் இருந்தது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது. குறிக்க வேண்டிய வார்த்தைகள்;

    விழுமியம், விகசிப்பு, விந்நியாசம், சொல்லாடல், புனைவோட்டம், அனுபவ நெருக்கம், ஒழுங்கமைவு, விவரனை உத்தி, படைப்பூக்கம், சூட்சுமங்கள், மறைபொருள், சார்நிலைகள், ஒலிக்குறியீடு, சாத்தியப்பாடுகள், படிமம், குறியீடு, உள்வாங்கல், பிரதிபலிப்பு, விரவிக்கிடத்தல், கட்டுடைப்பு, பிரக்ஞாபூர்வம், உயிர்ப்பு நிலை, மொழிமாற்றுத் தன்மை, உதிரிப்படிமங்கள், யதார்த்த தள நீட்சிப்பு, வார்த்தைப் பிரயோகம், இளகல், பன்முக வாசிப்பு, அர்த்தச் செறிவு, பரீட்ச்சார்த்த உத்தி, பரிமாணம், பரிணாமம், முரணியக்கம், பூடகம், புறவயம், நிகழ்தொடர்வு, ஒற்றைப்படை, வடிவநேர்த்தி, தட்டையானது, செய்நேர்த்தி.

    இதே போல ஒவ்வொரு கூட்டங்களுக்கும் செல்வதற்கு முன்னால் தகுந்த வார்த்தைத் தொகுப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக அரசியல் கூட்டங்களுக்கு, … செல்வாக்கு, இலட்சியம், … தொடங்கி… சோமாறி, பேமானி என்ற வகையில் பட்டியல் இருக்கலாம். விளையாட்டு உத்திகளையும் சற்றே மாற்றிக் கொண்டால் சுவாரசியமாக இருக்கும். அரசியல் கூட்டங்கள் முதல் பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிப்பவர் உடனடியாக அடுத்தவரின் வேட்டியை உருவிக் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம்.

    0 Responses to வார்த்தை விளையாட்டு.

    1. ravi srinivas
      September 29, 2003 at 12:27 pm

      it is all part of bureacratic games btb have you seen dilbert the comic strip.

    2. -/.
      September 29, 2003 at 12:36 pm

      உங்கள் வார்த்தைவிளையாட்டின் மேலாளர் தொடர்பான ஆதங்கத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். ஆனால், வார்த்தை விளையாட்டுத் தொடர்பானதிலே கொஞ்சம் முரணுண்டு. நீங்கள் உள்ள சிக்கலை நகைச்சுவையாகச் சொல்லும் வகையிலே கொஞ்சம் “உயர்வுநவிற்சி” :-) சேர்த்தே சிறுபத்திரிகைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், அதற்கு முன்னாலே வருத்தம் கொண்டு எழுதியிருந்த குமுதத்தின் தமிழிற்கும் சிறுபத்திரிகைகளின் தமிழுக்குமான வித்தியாசத்தையும் நீங்கள் அவதானிக்காமலிருந்திருக்கமாட்டீர்கள். இதிலே குறிப்பிடவேண்டிய விடயமென்னவென்றால், குமுதம், விகடன் போன்ற “சூப்பர் மாஸ் மாகசீன்”களிலே சிறுபத்திரிகைகளிலே புழங்கும் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தேவைகள் வருவதேயில்லை. விகடனுக்கும் குமுதத்துக்கும், “சூப்பர், தூள்,செமை, ஸைட், ஜோர், பலே, வர்ரே வாவ், யா, கலக்கல், டாப், அசத்தல், கலக்ஸ்” இந்த சொற்றொகுதியிலிருந்து எதேச்சையாகச் சொல்லெடுத்தமைத்த துணைச்சொற்றொகுதிகளே போதுமானது. இதற்கு, வரித் துட்டுக்கெழுதும் பிரபல்யமான எழுத்தாளர்களும் அவர்களின் பிடரிப்பிரகாசத்திலே ஒளிரும் அறுந்த வால்களும் கைத்தாளம். சிறுபத்திரிகைகளிலே ஆங்காங்கு நீங்கள் சொல்லும் அதீதப்படுத்தும் தன்மை இருக்கின்றதென்பதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படியான சந்தர்ப்பங்கள் மட்டும் அவற்றினை முழுக்க நிராகரிக்க உதவா.

    3. -/.
      September 29, 2003 at 12:39 pm

      venkat, sorry if anything got posted twice. When I tried to send the comments, I thought it did not go through. Hence, I posted again. If you find the same message twice, please delete the raw version and this message. thanks. (

      with a hope I woun’t post this twice:-) ,

      -/.

    4. venkat
      October 1, 2003 at 4:37 pm

      செ.

      முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். இந்த வலைக்குறிப்பு முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. இது சிற்றிதழ்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட அல்ல.

      நல்ல மொழிப்பிரயோகத்தில் (அது தமிழாக இருந்தாலும் சரி; ஆங்கிலமானாலும் சரி) நம்பிக்கைக் கொண்டவன் நான். பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் (அது தொன்னூறு சதவீதம் என்னுடைய திறனின்மையைத்தான் சுட்ட வேண்டும்) திண்டாடுகிறேன். சில சமயங்களில் பாலிமர், கார் என்பவை போன்று தமிழுக்கு அன்னியமில்லாத ஒலியோசை கொண்ட வார்த்தைகளை நேரடியாகக் கையாள்வதிலும் எனக்குத் தயக்கமில்லை (இலத்திரன் என்று ஒலிமாற்றத் தேவைகூட இல்லை).

      உங்கள் கருத்தையேதான் நானும் திரும்பச் சொல்லவேண்டும்; இன்றைய சூழலில் தமிழுக்கு நிறைய வார்த்தைகள் தேவைப்படுகின்றன. சிற்றிதழ்கள் அந்தக் குறையை ஓரளவிற்கேனும் நிவர்த்தி செய்கின்றன. சிற்றிதழ்களின் “வடிவ நேர்த்தி, பிரக்ஞாபூர்வம்” இவற்றையும் குப்பைகளின் ·à®ªà¯€à®²à®¿à®™à¯à®•், கைஸ் அன்ட் கார்ள்ஸ் இவற்றையும் எந்தவிதத்திலும் சேர்த்துப் பார்க்கக் கூடாது.

      ஆமாம், நான்கு வருடங்களுக்கு முன்னால் agnost க்குத் தமிழ்ப்பதம் தேடினோமே, கிடைத்ததா?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *