வருங்காலம்
by வெங்கட் • October 25, 2003 • பொது • 0 Comments
இன்று கனடாவில் வசிக்கும் இலங்கை பட்டதாரிகள் சங்கமும், இலங்கைத் தமிழர் பெற்றோர் சங்கமும் இணைந்து நடத்திய ஒரு நாள் பட்டறையில் கலந்துகொண்டேன். இது பள்ளியை விட்டு பல்கலைக்கழகம் சேர இருக்கும் மாணவர்களுக்கான நிகழ்வு. இந்நிகழ்வில் பங்காற்றிய ஒரே இந்தியத் தமிழன் நானாகத்தான் இருந்திருப்பேன். நான் எதிர்பார்த்ததைவிட கூட்டம் மிக, மிக அதிகமாக இருந்தது. நான் நூறு பேர்கள் வருவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் கிட்டத்தட்ட நானூறு முதல் ஐநூறு பேர்கள் கலந்துகொண்டார்கள். விழாவிற்கு டொராண்டோ பள்ளிக் கல்வி மன்றமும் உதவி செய்திருந்தது.
நிகழ்வு நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தது; உயிரியல், பயனுறு அறிவியல், தகவல்நுட்பம் மற்றும் மானுடவியல். நான் பங்குபெற்றது பயனுறு அறிவியல் பிரிவு. நிகழ்வு தற்கால மாணவர்களுக்கானது என்பதால் ஆங்கிலத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகளிலும் பணியாற்றுபவர்கள் மாணவர்களுக்குத் தங்கள் துறையைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தோம். உதாரணமாக என்னுடைய பிரிவில், Electrical Enginnering, Mechetronics, Aerospace Engineering, Actuarial Science என்ற துறைகளை அறிமுகப்படுத்தினார்கள். நான் An Invitation to Photonics என்ற தலைப்பில் பேசினேன். காலையில் ஒரு பிரிவினருக்கும், மதியம் இன்னொரு பிரிவினருக்குமாக இரண்டு முறை பேசவேண்டியிருந்தது (நான்கு பிரிவுகளில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளைத் தெரிந்தெடுக்க, காலையில் ஒன்றும் மதியம் இன்னொன்றுமாக இருவேறு பிரிவுகளில் கலந்து கொண்டார்கள்). பயனுறு அறிவியலுக்கு காலையில் கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களும், மதியம் நாற்பத்தைந்து மாணவர்களும் இருந்தார்கள். ஆகக்கூடி அதிக ஆர்வம் உயிரியல் துறைகளிலேயே காணப்பட்டது. பட்டறைகளுக்குப் பிறகு மாணவர்களும் பெற்றோர்களுமாகப் பங்கேற்றிய கருத்தரங்கும் இருந்தது. இதில் பொதுவான கேள்விகளுக்கு நாங்கள் விடையளித்தோம்.
மேலாளர்களும், நிர்வாகிகளும் அதிக ஊதியம் பெறும் இந்நாளில் அறிவியல், தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு குறைந்து வருகிறது. எனவே உலகெங்கும் அறிவியலில் ஆர்வம் காட்டும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் அறிவியலில் தமிழ் மாணவர்கள் காட்டும் ஆர்வம் மகிழ்சி தருகிறது. இதுபோன்ற கருத்தரங்கு மாணவர்களுக்கு இன்றைக்கு முன்னனியில் இருக்கும் அறிவியல் துறைகளை அறிமுகம் செய்ய உதவியாக இருக்கிறது.
டொராண்டோ நகரில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற முன்னேற்ற நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்திய-இலங்கை புலம்பெயர் தமிழர்கள் ஒன்று சேர்ந்து இதுபோன்ற நிகழ்வை நடத்தியிருந்தால் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.
வெங்கட்:
பயனுள்ள விடயம்.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.இந்தியத் தமிழரான நீங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம்
ஈழத்தமிழர்,அவர்கள்தம் நிகழ்ச்சிகள்,விழாக்கள் போன்றவைகளில் பங்கு பெற்று,பல்வேறு கோணங்களில் கட்டுரை
படைக்கலாம்.படைப்பீர்கள் என்பது எமது அவா.
நகைக்கவல்ல: ஒரு நீண்டநாள் ஐயம்.டொரோண்டா பெருநகரை மற்றும் பல டகர தமிழ்ச்சொற்களை ஈழத்தமிழர்கள்
ஏன் ” ரோராண்றோ ” என்பது போல எழுதுகிறார்கள்…? எழுதுவது மட்டுமா அல்லது உச்சரிப்பும் roo raan Roo
என்பது போலவா..? தொலைக்காட்சியை – டீவி – ரீவி என்பதும் கண்ணுற்றவொன்று.