• பிபிஸி ஆவணங்கள் – பொதுப்பா&#

    by  • August 26, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனம் (British Broadcasting Corpotion) தனது ஆவணங்களை பொதுப்பார்வைக்குத் திறக்கப் போகிறது. BBC Creative Archive என்று பெயரிடப்பட்ட இந்த சேவை இணையத்தின் வழியே பிபிஸியி ஒளி/ஒலி ஆவணங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படப் போகிறது. உலகிலேயே அதிக வானொலி தொலைக்காட்சி ஆவணங்களை உள்ளடக்கிய மாபெரும் காப்பகம் அவர்களுடையது. இது பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப்போவது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. வணிக இலாபங்கள் நோக்கங்கள் இல்லாத எந்தப் பயனுக்கும் இந்தக் காப்பகத்தை யாரும் இணையத்தின் வழியே இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

    இதனை அறிவிக்கும் பொழுது பிபிஸி நிர்வாக இயக்குனர் இவ்வாறு கூறுகிறார், “நாம் டிஜிட்டல் புரட்சியின் இரண்டாம் நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். இந்த நிலையில் பொது(மக்கள்) மதிப்பு தனி மதிப்பைக்காட்டிலும் அதிகரிக்கும். இது இலவச பொதுத் தேவைகளை அதிகரிக்கவேண்டிய காலம்; பணத்திற்கான வியாபாரத் தேவைகளை அல்ல. இது எல்லோரையும், எல்லாவற்றையும் அரவணைக்க வேண்டிய நேரம்; யாரையும் தவிர்க்க அல்ல. குறிப்பாக இது பொதுப்பணத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனிநபர் வாழ்வை மேம்படுத்த வேண்டிய தருணம்”. கேட்கவே காது குளிர வைக்கும் வார்த்தைகள்.

    இதே போல மாசாசூஸெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் (Massachusetts Institute of Technology, MIT) பல்கலைக்கழகமும் தனது பாடத்திட்டங்களையும், பாட உதவி நூல்களையும் Open Courseware என்ற திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்காகத் திறக்கிறது. இணையத்தின் வழியே நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி நடத்தும் பாடத்தை கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி மாணவர் கேட்டுப் பயனடைய முடியும். சென்ற வருடம் ஒருசில பாடங்கள் இதன் முன்னோடித் திட்டம் என்று வெளியிடப்பட்ட பொழுது Software Engineering பற்றிய எம்ஐடியின் பாடத்தைப் படிக்கவும், விவாதிக்கவும் என்று கராச்சி பல்கலைக்கழகத்தில் ஒரு (படிப்பு)விவாதக் குழு அமைக்கப்பட்டதைப் படித்தேன். இது திறந்த பாடப்பொருள்கள் எவ்வளவு நேரடி பலன்களைத் தரக்கூடும் என்பதற்கு ஒரு உதாரணம்.

    இதே நாளில்தான் டிவிடி சங்கேதக் குறியீடுகளை (அதைத் தகர்க்கும் வழிகள்) தனிநபர் வலையில் வெளியிட்டது தவறு என்று கலிபோர்னிய மாநில நீதிமன்றம் ஹாலிவுட் வணிகர்களுக்குத் துணையாகக் கொடிபிடித்திருக்கிறது. ஒரு புறம். இதே போல, காஸா, மார்பியஸ் போன்ற நேரடி பறிமாறிகள் மூலமாக எம்பி3 பறிமாறிக்கொள்பவர்களை அடையாளம் கண்டுபிடித்து இணையச் சேவை வழங்குபவர்கள் RIAA -வின் காலடியில் பலியிட வேண்டும் என்று இசைவணிகர்களால் கை முறுக்கப்பட்டது. இதுபோல இடைத்தரகர்கள் (கலைஞர்கள் இல்லை) – (பிறருடைய)அறிவுரிமை என்ற பெயரில் சுரண்டத் தலைப்பட்டு வரும்பொழுதும், அதற்கு நீதிமன்றங்கள் துணைபோகும் பொழுதும் – பிபிஸி, எம்ஐடி இவற்களின் திறந்த சேவை சமூகத்தில் இருக்கும் நம்பிக்கையை உயர்த்துகிறது – தலைவணங்குகிறேன்.

    ம்ம்… பிபிஸியின் இந்தச் சேவை வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். டக்ளஸ் ஆடமின் Hitchhiker’s Guide to Galaxy தொலைக்காட்சித் தொடரை பிபிஸி ஆவணத்தில் பார்த்தேயாக வேண்டும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *