• திரு நாகூர் ரூமியின் பதில

    by  • December 19, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அவருடைய கட்டுரைப் பற்றி நான் எழுதியதற்கு நண்பர் ரூமியின் பதில் ராயர் காபிகிளப்பில் இன்றைக்குக் கிடைத்தது.

    என்னுடைய பதிலை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டு பாராட்டியிருக்கிறார். அவருடைய நேர்மையும் தெளிவும் எனக்கு அவர்மேல் மரியாதையை அதிகரிக்கின்றன. வீண்சண்டைகளும், வெட்டி விவாதங்களும் அதிகரித்துப் போன இந்த நாட்களில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நினைப்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அச்சமாக இருக்கிறது. இதே அச்சம்தான் என்னை அவருடைய தமிழோவியம் கட்டுரைக்கு உடனடியாகப் பதிலெழுதாமல் தாமதிக்க வைத்தது.

    இன்று காலை (இதெல்லாம் எங்கள் கனடா நேரம்), கிளப்பில் என்னுடைய வலைக்குறிப்பைப் படிக்க முடியவில்லை என்று எழுதியிருந்தார். மதியம் அவருடைய கடிதம் வந்திருக்கிறது. எனவே, கொஞ்சமும் தயக்கமில்லாமல் படித்தவுடனேயே அவர் பதிலெழுதியிருக்கிறார். நல்ல இலக்கியவாதியான ரூமி என்னுடைய மதிப்பில் மிக நல்ல மனிதராகவும் உயர்ந்திருக்கிறார். பல சமயங்களில் நண்பர்களை நாம் இப்படித்தான் அடையாளம் காண்கிறோம்.

    அவருடைய கடிதம்;
    அன்புள்ள வெங்கட் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், வணக்கம்.

    வெங்கட்டின் ‘ப்ளாக்’கை படித்துவிட்டேன். (‘ப்ளாக்’ என்பதற்கு என்ன தமிழ் என்று வெங்கட்தான் சொல்லவேண்டும்) என்னென்னவோ செய்து இப்போதுதான் படித்தேன். என் பதில் :

    நான் எழுதிய கட்டுரைக்கு பதில் என்பதாக உங்கள் கட்டுரையை நான் நினைக்கவில்லை. தமிழில் அறிவியல் சொற்கள் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் எழுதி நாங்கள் புரிந்து கொள்ள என் கட்டுரை ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளது என்பதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். ரொம்ப அற்புதமான கட்டுரை. உங்கள் அனுபவமும், திறைமையும் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. நான் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருக்காவிட்டால் உங்களது கட்டுரை கிடைத்திருக்குமா?!

    என் கட்டுரையில் என் முக்கியமான அல்லது பிரதானமான வருத்தம் அல்லது கோபமே தமிழ்ப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு தமிழைப் படுத்துபவர்கள்மீதுதான். அதோடு சிந்தனை நமதாக இல்லாத பட்சம், ஏன் மற்றவருடைய சிந்தனையை தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற கேள்வியும் கேட்டுத்தான் இருந்தேன். அதற்கு நீங்கள் சொல்கின்ற விளக்கம் என் வாதத்தோடு முரண்படுவதாக நான் நினைக்கவில்லை. ஒருவேளை என் நிலைப்பாட்டை நான் இன்னும் சரியாகச் சொல்லவில்லையோ என்னவோ.

    ஒருவருடைய சிந்தனையைப் பற்றி அல்லது ஒட்டி நாம் மறுபடி சுயமாக சிந்திக்கும்போது அது நம்முடைய சிந்தனையாகத்தான் ஆகிவிடுகிறது. அதன்பிறகு அதற்கான சொற்களை உருவாக்க முயல்வதில் தவறு ஒன்றுமில்லை. இந்த வகையில் அறிவியல் சொற்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். நம்முடைய சிந்தனை என்ற விஷயத்தின் நீட்சி எங்கெல்லாம் வரும் என்பதைப் பற்றி நான் குறிப்புகூட கொடுக்காமல் விட்டுவிட்டது தவறாகப்புரிந்து கொள்ளக் காரணமாக அமைந்து போயிருக்கலாம். இந்த வகையில், inflation என்பதற்கு பணவீக்கம் என்பதை வரவேற்கத்தான் வேண்டும். ஏனெனில் அது நம்முடைய சிந்தனையாகிவிட்டது. அது நம்மையும் அன்றாடம் பாதிக்கின்ற பிரச்சனைகளில் ஒன்றாகிப் போனதாலோ என்னவோ சொல்லும் அழகாக வந்து விழுந்துவிடுகிறது.

    ஆனால் ‘சூபர்ஹெட்ரோடைன்’ என்பதற்கு ‘கலக்கிப்பிரித்தல்’ என்பது ஒரு எளிமையான சுருக்கமான விளக்கமாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அது ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் என்ற அந்தஸ்துக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன். Floppy Disk போன்ற வட்டுகளைப் பற்றி நீங்கள் சொல்வது ரொம்ப சரி.

    நிற்க. ரோஜாவை ரோஜா என்று சொல்ல முடியாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் தமிழ்த் தூய்மை என்ற பெயரில், வடமொழிக் கலப்பெல்லாம் கூடாது என்று சொல்லி, வேண்டுமென்றே ‘ரோசா’ என்று சொல்வதற்கும் எழுதுவதற்கும்தான் எனது ஆட்சேபம். அதற்காகத்தான் “இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி சொன்னதை உதாரணம் காட்டினேன். மற்றபடி ‘ச’வின்மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. நான் ‘ஜ’வை எவ்வளவு விரும்புகிறேனோ அதே அளவு ‘ச’வையும்தான் நேசிக்கிறேன்! என்னுடயை எதிர்ப்பு உச்சரிப்பை நோக்கியதல்ல. உச்சரிப்பின் பின்னால் உள்ள, மொழியின் அழகுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் உள் நோக்கங்களின்மீதுதான்.

    ‘கார்’போல சுருக்கமாக எளிமையாக இருக்கும்போது நேரடியாகக் கையாளலாம் என்று நீங்கள் சொன்னதைத்தான் நண்பரே நான் கொஞ்சம் நீட்டி முழக்கி ஒரு கட்டுரையாகச் சொன்னேன்!
    கடைசியாக ஒன்று : யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு எப்போதுமே கிடையாது. (இப்படிச் சொல்லிவிட்டதனால் மட்டும் சொல்வது உண்மையாகிவிடாது என்பது வேறுவிஷயம். ஆனால் நான் இப்போது அதிகபட்சமாக இதைத்தானே செய்ய முடியும்?) எனவே இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கவனமாக இருந்து சான்றோர் மரபைப் பின்பற்ற முயல்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    வெங்கட் இதுபோன்ற கட்டுரைகள், எதிர்வினைகள் இன்னும் நிறைய செய்வாரென்றால் நானும் ‘சிறுபிள்ளைத்தனமான’ கட்டுரைகள் — ஆனால் சான்றோர் மரபுப்படி — மேலும் எழுத காத்திருக்கிறேன்.

    அன்புடன்
    நாகூர் ரூமி

    0 Responses to திரு நாகூர் ரூமியின் பதில

    1. Ramani
      December 21, 2003 at 3:40 am

      நீங்களும் காசியும் இந்த தலைப்பில் பிய்த்து உதறி இருப்பதால் எனக்கு இந்த விஷயத்தில் உள்ள சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

      சொற்களை முடிந்தவரை தமிழ்ப்படுத்தவேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. எழுத்துத்தமிழில் இந்த புதிய சொற்களை எளிதில் பயன்படுத்த முடிகிறது. ஆனால், பேச்சுத்தமிழில் முடிகிறதா? எனக்கென்னவோ எப்படி செந்தமிழை பேச்சுத்தமிழில் பயன்படுத்த முடியவில்லையோ அதேபோல் இதுவும் கடினமாக உள்ளது. ஐப்பானில் இருந்த வெங்கட் அங்கு பேசும்போதுகூட ஆங்கில கலைச்சொற்கள் பயன்படுத்தமாட்டார்களா என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

      ஐப்பானிலும் ஜெர்மனியிலும் எப்படித்தான் உடனுக்குடன் எல்லா கலைச்சொற்களையும் புத்தகங்களையும் மொழிபெயர்க்கிறார்கள் என்று எனக்கு சத்தியமாக புரிந்ததில்லை. அப்படியானால் அங்கு மொழிபெயர்க்கப்படாதவை எதுவும் ‘விலைபோகாது’ என நினைக்கிறேன். அந்த அளவுக்கு Demandஜ (பெரும்பாலும் ஆங்கிலமும் படிக்கமுடிந்த) தமிழர்களால் ஏற்படுத்த முடிந்தால்தான் நிறையப்பேர் மொழிபெயர்க்க முன்வருவர். முடியுமா?

      தமிழாக்கம் நிலைத்து நிற்கவேண்டுமானால் எல்லாரும் ஒரே வார்த்தையை பயன்படுத்தவேண்டும். ‘blog’ஐ தமிழ்படுத்தியதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளையும், சுஜாதா போன்ற ‘தான் சொல்வதுதான் சரி’ ஆசாமிகளையும் பார்க்கும்போது இது கொஞ்சம் கடினமான விஷயமாக தோன்றுகிறது. ஐப்பானிலும் ஜெர்மனியிலும் மொழிபெயர்ப்புக்கு ஏதேனும் Standards Organisation வைத்திருக்கிறார்களா?

      ஜெர்மானியர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் விடாமல் ஜெர்மனியிலேயே பதிலளிக்கிறார்கள் என்று சுபா ஒருமுறை சொல்லியிருந்தார். இந்த அளவு மொழிப்பற்று உள்ளவர்கள் எங்கே!! ‘பண்ணி’த்தமிழிலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் நம்மவர்கள் எங்கே!! தமிழுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் ‘பண்ணி’த்தமிழை மறக்கவைக்க என்ன செய்யப்போகிறார்கள்?

      இவையெல்லாம் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இவை தீர்க்கப்படாமல் தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் புழங்கமுடியாது என்பது என் கருத்து.

    2. Badri
      December 21, 2003 at 9:14 pm

      வெங்கட்: http://thoughtsintamil.blogspot.com/ 2003_12_21_thoughtsintamil_archive.html#107205860360590394

      இங்கு பாரதியின் சில மேற்கோள்கள் + என் கருத்துகள்.

    3. prabhu
      December 22, 2003 at 2:06 am

      ±Ð ±ôÀʧ¡…¦À¡ÐÅ¢ø þÕÅ÷, ´ÕŨæ¡ÕÅ÷ Á¾¢òÐ…Ó츢ÂÁ¡¸ ¾Å¦ÈýÚ «Îò¾ÅÕìÌ §¾¡ýȢ¨¾ ÒâóÐ ¦¸¡ñÎ «¨¾ ¦ÅǢ¢¼×õ ¨¾Ã¢Âõ ¦¸¡ñÎ….¿¡õ ¿øÄ À¡¨¾Â¢ø §À¡¸¢§È¡õ ±ýÀÐ Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.

    4. prabhu
      December 22, 2003 at 2:10 am

      எது எப்படியோ…பொதுவில் இருவர், ஒருவரையருவர் மதித்து…முக்கியமாக தவறென்று அடுத்தவருக்கு தோன்றியதை புரிந்து கொண்டு அதை வெளியிடவும் தைரியம் கொண்டு….நாம் நல்ல பாதையில் போகிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    5. venkat
      December 22, 2003 at 9:45 pm

      ரமணி, நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. தமிழுக்கு இருக்கும் ஒரு சிக்கல் அது Diglossia (பேச்சு வழக்கும், எழுத்து வழக்கும் பெரிதும் வித்தியாசமானவை. நான்கு – நாலு…) ஆனால் இது ஒரு பெரிய சிக்கலே இல்லை. பல diglossia மொழிகளில் அறிவியல்/தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கிறது.

      என்னுடைய மனதிற்குப் பட்ட வகையில் இதிலிருக்கும் சிக்கல்கள் எல்லாம் நம்முடைய மனப்பாங்கைச் சார்ந்தவை;

      1. நன்றாக ஆங்கிலம் பேசுபவன் நல்ல அறிவாளி (பட படன்னு இங்கிலீசுல பொளந்து கட்டுவான்).

      2. தாய்மொழியில் கல்வி கற்றால் உலகச் சந்தையில் வேலைவாய்ப்பு கிடைக்காது (சில நாட்களுக்கு முன்பு வரை பம்பாயில் வேலை கிடைக்காது).

      3. கையில் ஆங்கில புத்தகம் இருப்பது கௌரவம் (புஸ்தகம் ஹஸ்த பூஷணம்; ஆங்கில புத்தகம் பரம பூஷணம்).

      4. சராசரி பத்மா சேஷாத்ரி சிறுவனைக் கேளுங்கள் அவனுக்கு எகிப்தின் பிரமீடுகளில் யாருடைய பிண்ங்கள் இருக்கின்றன என்று தெரியும். கிரேக்கப் புராதணக் கதைகளையும் கதா மாந்தர்களையும் நன்றாகத் தெரியும். ஆனால் பிற்காலச் சோழர்களில் ஒருவர் பெயரைக் கேட்டால் தெரியாது).

      இதெற்கெல்லாம் அடிப்படையில் நம்மிடம் தேங்கியிருக்கும் காலணியாதிக்க அடிமையுணர்வு. (பேச்சுக்கும் அறிவுக்கும் வித்தியாசம் காணமுடியாமை, ஏன் அயல்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும், உள்ளூரிலேயே வேலை பார்த்து அயல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாமே (இந்த விஷயம் பற்றி விரிவாக இன்னொரு நாள்), நம்மிடம் இருக்கும் இலக்கியம், கலாச்சாரம் இதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது.

      இந்த விஷயத்தில் இன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. ஜப்பான், ஜெர்மனியர் மனப்பாங்கையும், அங்கு உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பப் பறிமாற்றங்களைப் பற்றியும் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை வரும் நாட்களில் எழுதுகிறேன்.

    6. காசி
      December 22, 2003 at 11:59 pm

      >>>

      சராசரி பத்மா சேஷாத்ரி சிறுவனைக் கேளுங்கள் அவனுக்கு எகிப்தின் பிரமீடுகளில் யாருடைய பிண்ங்கள் இருக்கின்றன என்று தெரியும். கிரேக்கப் புராதணக் கதைகளையும் கதா மாந்தர்களையும் நன்றாகத் தெரியும். ஆனால் பிற்காலச் சோழர்களில் ஒருவர் பெயரைக் கேட்டால் தெரியாது).

      >>>

      சரியாகச் சொன்னீர்கள். சென்னையில் (திருவள்ளூரில்) நான் வேலை செய்தபோது, என் சென்னை நண்பர்கள் சிலர் சென்னைத் தெருக்கள்/வட்டரங்கள் பெயர்கள் தெரியாமல் இருக்க வெளியூர்க்காரன் நான் திருத்தியிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு எல்லேயிலிருந்து லாஸ் வேகாஸுக்கு எந்த நெடுஞ்சாலை எண் என்று அப்போதே தெரியும்.

    7. Balaji
      December 23, 2003 at 12:42 am

      நான் படித்த கல்லூரியில் தமிழர் இருபது சதவிகிதம் இருந்தும், அதில் தமிழ் ‘படிக்கத்’ தெரிந்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழ் படிக்கத் தெரிந்தோரிலும் அரிது, தமிழ் புத்தகங்களை படிப்பவர்கள். இதனால்தான் நாம் ‘தி ஹிந்து’ மக்களை குறி வைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.

    8. venkat
      December 23, 2003 at 1:13 pm

      பாலாஜி, நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்? :) நான் கும்மோணம் கவுர்மெண்டு காலேஜில்தான் எம்.எஸ்.ஸி வரை படித்தேன். அங்கு 99.9% பேருக்குத் தமிழ் நன்றாக, எழுதப் படிக்க, பேசத் தெரியும். 46.325% பேருக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது.

      கும்மோணம் காலேஜ் தமிழ் நாட்டின் சராசரி கல்லூரி என்று நம்புகிறேன். மெட்ராஸ் லயோலாக்கள்தான் விதி விலக்கு. அவர்களால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்களை முற்றாக மறந்து பிறரைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

    9. காசி
      December 23, 2003 at 4:37 pm

      பாலாஜி, சொல்வதற்கு வருத்தமாயிருக்கிறது, உங்கள் கேள்விகளும் வாதங்களும் நாம் எல்லாரும் ஒரு கருத்தை நோக்கிக் குவிவதற்குப் (converging) பதிலாக வெற்றாக விலகிக்கொண்டு (diverging) போகுமாறு இருக்கின்றன. இன்னும் பரவலான தமிழகத்தை நீங்கள் அறிந்திருக்கவில்லையோ என்று சிலசமயம் மனதுக்குள் கேள்வி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இது உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

      என்றும் அன்புடன்,

      -காசி

    10. Balaji
      December 23, 2003 at 5:29 pm

      மனதில் பட்டதை சொன்னேன். :) தினம் ஒரு கவிதையில் இருக்கும் 1872 உறுப்பினர்களில் பத்து விழுக்காடு வலைப்பதிவு செய்யவேண்டாம். படித்தாவது வருகிறார்களா? அவர்களை கவர்ந்திழுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள்.

      Anyway, please don’t assume I have a preconceived notion and hogging your comment time. எனது பெருவாரி கருத்துடன் ஒத்துப் போகாத(diverging) கருத்துகள் தொல்லை தருது என்றாலும் சொல்லுங்கள் :>

    11. காசி
      December 23, 2003 at 8:14 pm

      பாலாஜி,

      >>

      தினம் ஒரு கவிதையில் இருக்கும் 1872 உறுப்பினர்களில் பத்து விழுக்காடு கவர்ந்திழுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள்.

      >>

      அய்யோ எனக்குத் தெரியாதுங்களே. ஏன்னா அவங்களைக் கவரணும்னா, கவிதை, கதை, சினிமா வேணும். அதுக்கு குமுதமும் விகடனும் இருக்கே, நமக்கு எதுக்கு அந்த வேலை.:-))

    12. காசி
      December 23, 2003 at 8:16 pm

      >>>

      எனது பெருவாரி கருத்துடன் ஒத்துப் போகாத(diverging) கருத்துகள் தொல்லை தருது என்றாலும் சொல்லுங்கள் :>

      >>>

      பெருவாரி சிறுவாரியெல்லாம் இங்க பேச்சில்லை, எது னல்லதுன்னு னநமக்குப்படுதோ அதைச் சொல்லறோம், செய்யறோம். சொல்லப்போனா நீங்கதான் பெருவாரியா இருப்பீங்க;-)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *