சிரிப்பதற்கு ஒன்றுமில்லĭ
by வெங்கட் • September 1, 2003 • பொது • 0 Comments
கடந்த வாரம் கனேடிய கடவுச்சீட்டுத் திணைக்களம் (அப்படித்தான் ஈழத்தமிழர்கள் நாம் மறத்தமிழில் கனேடிய பாஸ்போர்ட் ஆபீஸ் என்று அழைப்பதைக் குறிப்பிடுகிறார்கள்) கனடாவில் கடவுச்சீட்டுக்கென புகைப்படம் எடுப்பவர்களுக்கு (கிட்டத்தட்ட இரகசியமாக) ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதன் அடிப்படையில் புகைப்படக் கலைஞர்கள்(?) குடிமக்களுக்குக் கடவுச்சீட்டுக்கென புகைப்படம் எடுக்கையில் குடிமகன் எக்காரணத்தை முன்னிட்டும் புன்னகைத்துவிடாமல் (அல்லது சிரித்துவிடாமல் அல்லது முகம் சுளிக்காமல்) இருக்குமாறு கவனத்துடன் பார்த்துக்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது.
தீவரவாதமும் அதற்கு எதிர்வினையாக பீதியும் பெருகிவரும் இந்நாட்களில் சராசரி கனேடியக் குடிமகன் சிரிக்கும் உரிமையைத் தீவிரவாதத்திற்குத் தானம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. இதற்கான காரணம் உடலைமைப்பறிதல் (Biometrics) கூறுகளை புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கடவுச்சீட்டுகளில் பதிவுசெய்வதே எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கனேடிய அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு அமைப்பை வெளியிட்டிருக்கிறது. இதில் பல சங்கேதக் குறியீடுகள் உள்ளிடப்படவிருக்கின்றன. உதாரணமாக, டிஜிட்டல் முறையில் அச்சிடப்படும் படம், அதற்குப் பக்கத்திலேயே புறஊதாக் கதிர்களால் மாத்திரமே காணக்கூடிய அதே படத்தின் மறு அமைப்பு. ஹோலோகிராம், விசேட மை கொண்டு அச்சிடப்படும் தகவல்கள் மற்றும் சங்கேதக் குறியீட்டுத் தகவல்கள் என்பவை அடங்கும்.
தற்சமயம் கள பரிசோதனைகளில் இருக்கும் உடலமைப்பறிதல் நுட்பத்தின் மூலம், வருங்காலத்தில் வரிசையில் நிற்கும் சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை நோக்கி குடியேற்ற அதிகாரிகள் காமெராவைத் திருப்பினால் அதிகாரியின் கணினித் திரையில் ஆசாமியின் கோத்திரமும் ஜாதகமும் பளிச்சிடும். நபருக்கு ஏழாமிடத்தில் சனியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகள் எச்சரித்தால் உடனடியாக அதற்குப் பரிகாரம் எடுக்க ஆயத்தங்கள் நிகழும். இதுபோன்ற அங்க அமைப்பு ஒப்பிடல் முறையைக் கணினி சரியாகச் செய்யவேண்டுமென்றால் அதற்குச் சேமிக்கப்பட்ட ஆசாமியின் படம் பல்வேறு நிலைகளிலும் அவருடைன் ஒத்துப்போதல் வேண்டும். அதாவது, அவர் அதிகபட்ச முகபாவனைகள் இல்லாமல் இருப்பது அவசியம். உதாரணமாக, நடிகர் மைக் மோகனை கணினி எல்லா நேரங்களிலும் அடையாளம் கண்டுவிடும் (அது சாலையோரம் சோலையன்று பாடும் போதும், இராகதீபம் ஏற்றும்போது வரும் புயல் மழையிலும், இளையநிலா பொழிகின்ற வேளைகளிலும் அதே (விளக்கெண்ணெய்த்தனமான) பாவத்தில்தான் இருக்கும். மாறாக மிருதங்கம் வாசிக்கும் பொழுது கண்ணில் குருதிபொங்கும் நடிகர் திலகத்தைக் கணினி கோட்டைவிட சாத்தியங்கள் அதிகம். 99.9 சதவீத சமயங்களில் அப்பாஸை அப்பழுக்கின்றி அடையாளம் காணும் கணினி அவருக்கு மீசையை இழுத்துவிட்டால் அம்பேல் ஆகிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
எனவே, கணினிகளை அதிகச் சிரமப்படுத்தாமல் இருக்கச் சொல்லித்தான் கனேடிய அரசாங்கம் புன்னகை மறக்க வேண்டுகிறது. சற்று சிரமமான காரியம்தான், முடியாதவர்கள் கனடாவின் பிரதமர் கிரெட்ச்யென் இல்லை, ஜார்ஜ் புஷ் இளையர் என்று உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சி செய்துதான் ஆகவேண்டும், இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை.