• சதாம் உசேன் கைது – என் சந்தே

    by  • December 30, 2003 • பொது • 0 Comments

    நேற்று இங்கு (டொராண்டோ) காலம் ஆசிரியர் திரு செல்வம் இல்லத்தில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விருந்துக்குச் சென்றிருந்தேன். பெயர்தான் புத்தாண்டு விருந்து. நடந்ததென்னவோ ஒரு (இலக்கற்ற) இலக்கியக் கூட்டம்தான். வந்திருந்தவர்களில் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், மஹாலிங்கம், பேராசிரியர் செல்வா கனகநாயகம் மூவரும் அடக்கம். இலக்கற்ற பேச்சு என்பதால் தகுதர எழுத்துக் குறியீட்டில் தொடங்கி, திவ்யப்பிரபந்தம், காநாசு, சிலுவைராஜ் சரித்திரம் என்று எல்லாவற்றையும் கதைத்தோம். இடையில் சதாம் உசேனும் வந்தார். * * *

    சதாம் கைதானதன் பின்னணி பற்றிய என்னுடைய கருத்துக்களை “Wildest Imaginations” என்றார் முத்துலிங்கம். சரி, நீங்களும் என்னுடைய கற்பனையைக் கண்டுகொள்ளுங்களேன்… (அவர் பிடிபட்ட விதத்தில் எனக்குத் தோன்றும் சந்தேகங்கள்/ஊகங்கள் இவை);

    1. இப்படிப் பெருச்சாளிபோல் ஒரு பொந்தில் சதாம் இருந்தார் என்பதை எந்த விதத்திலும் நம்பமுடியவில்லை, சொந்த ஊரில் இருக்கும் பொந்துகளில் எல்லாம் தீப்பந்தம் வைத்துத் தேடுவார்கள் அமெரிக்கர்கள் என்பது . அவருக்குக் கட்டாயம் தெரியும். அப்படியிருக்க, சொந்த ஊரிலேயே அவர் கிடைத்தார் என்பது முதல் சந்தேகம், சதாம் நினைத்திருந்தால் அதே தாடியை வளர்த்துக் கொண்டு, நிம்மதியாக பங்களாதேஷில் மளிகைக்கடை வைத்திருக்க முடியும். சாக்கடைப் பெருச்சாளி வாழ்க்கையைவிட மளிகைக்கடை மேலானது, இன்னும் நாலு பெருச்சாளிகளுக்குத் தீனிபோடக் கூட முடியும்.

    2. எதிர்த்து நின்று உயிர்கொடுக்க ஒரு தோழன்கூட இல்லை என்பது எங்கோ இடிக்கிறது. அய்யா நிறைய பேருக்குச் சோறுபோட்டு வளர்த்திருக்கிறார். நன்றிக்கடன் செலுத்த ஒரு நாய்கூட அருகில் இல்லையா?

    3. மாட்டியவுடன், “என்னைச் சுடவேண்டாம் நான்தான் சதாம் உசேன்” என்று உள்ளேன் ஐயா என்று வகுப்பறையில் எழுந்து நிற்கும் சிறுவனாகக் கை தூக்கினாராம்.

    4. இழுத்துக்கொண்டு வந்தவுடன் “சமத்தோல்லியோ, ஆ காட்டு” என்றவுடன் கிடைக்கப்போகும் குச்சிஐஸ்க்கு வாய்திறக்கும் சிறுவனாகப் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறாராம். அபத்தமாக இருக்கிறது. குறைந்த பட்சம், வில்லன் கூட்டத்தால் கற்பழிக்கப்படும்போது தனக்கு எந்தவித்ததிலும் சாத்தியம் இல்லை என்று தெரிந்தபிறகும் வில்லனின் மணிக்கட்டைக் கடிக்கும் கதாநாயகனின் தங்கச்சியாக நடந்துகொண்டிருக்க வேண்டாம்?

    இப்படிப் பல சந்தேகங்கள். இதனால் இந்த நாடகத்தின் திரைமறைவில் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது; இப்படியாக,

    1. சதாம் பல நாட்களுக்கு முன்னரே பிடிபட்டுவிட்டார் அல்லது மாட்டிக் கொள்ளத் தனக்கிருக்கும் உத்தேசத்தை நம்பகமான வழிகளில் ரம்ஸ்·à®ªà¯†à®²à¯à®Ÿà¯ போன்ற பெருந்தலைகளுக்குச் சொல்லிவிட்டார். அவர் எப்படி மாட்டிக்கொள்ள வேண்டும் என்று திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். சதாம் தன்னுடைய பங்கைத் திறம்படச் செய்திருக்கிறார். அவருடைய நடிப்பைப் பார்க்கும் பொழுது எனக்கு “Subtle Overplay” என்ற தொடர் ஏனோ மனதில் தோன்றியது.

    2. சேதி சொன்ன நாளுக்கும், பிடிபட்ட நாளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அவற்றுள் ஒன்று, சதாமை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைப்பது, அங்கே அமெரிக்கர்களே அவருக்கு மன்னிப்புக் கேட்டுப் பெருந்தன்மை காட்டுவது. (இதனால் அமெரிக்கர்கள் கொலை வெறியர்கள் அல்லர்(?) என்று உலகுக்கு நிருபிக்கவும் முடியும்).

    3. என்றைக்கு சதாம் பிடிபட வேண்டும்? கிட்டத்தட்ட கிறிஸ்துமஸை ஒட்டி, புஷ்ஷின் ஆதரவு ஐம்பது சதவீதத்திற்குக் கீழே போகும் நிலையில். பிடித்தவுடன் ஹாவர்ட் டீனின் ஆதரவு சரிய வேண்டும். (அல் கோர் சில நாட்களுக்கு முன்தான் அதை உயர்த்திவிட்டார்).

    4. எதனால் சதாமுக்கு மன்னிப்பு? அவர் பேரழிவு ஆயுதங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லுவார். அப்படி நிஜமாகவே பேரழிவு ஆயுதங்கள் அவரிடம் இல்லாமல் போனாலும் கவலையில்லை. அமெரிக்கர்களிடம் இல்லாத பேரழிவா? அதில் பழையதாகப் போகும் சமாச்சாரங்களில் கொஞ்சம் ஹாலிபர்ட்டனிடம் காசு கொடுத்து வாங்கி பாக்தாத்திற்குப் பக்கத்தில் டீக்கடை ஒன்றில் புதைத்துவைக்கலாம். பிரிட்டிஷ்காரர்களை விட்டுக் கண்டுபிடிக்கச் சொல்லி டோனி பிளேரையும் காப்பாற்றலாம்.

    5. எப்பொழுது பேரழிவு ஆயுதங்களைப் பற்றி சதாம் சொல்வார்? அமெரிக்காவில் ஆரம்ப கட்ட தேர்தல்கள் முடிந்து, புஷ்க்கு எதிராகப் போட்டியிடப்போகும் டெமாக்ரடிக் வேட்பாளரின் பெயர் உறுதியானபின். முழுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்னால். அதுதான் இரண்டாவது துருப்புச் சீட்டை இறக்கச் சரியான நேரம்.

    6. ஆமாம், சதாம் கிறிஸ்துமஸ் வெளியீடு, ஓசாமா, தீபாவளி ரிலீஸா? இல்லை, ஒசாமாவைப் பிடிக்க புஷ்க்குப் பைத்தியமா? அது பொன்முட்டையிடும் வாத்து. அதை அறுத்துவிட்டால் செய்திக்கு என்ன இருக்கிறது. ஓசாமாவைக் கண்ணில் காட்டாமல் வைத்து, அவர் அவ்வப்போது அல்-ஜஸீராவில் வெளியிடும் ஒளிநாடாக்களுக்கு எல்லாம், “ஆமாம், இது நிசமாக அவர்தான், அவர் ஒருவரால்தான் இப்படி உணர்ச்சி பொங்கப் பேசமுடியும்” என்று சி.ஐ.ஏ-ஐ விட்டு சான்றிதழ்கள் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லை இது பொய். ஆசாமி அப்பவே காலி என்று ஒருதடவைகூடச் சொல்லிவிடமாட்டார்கள். அவரும் நன்றாகத் விஷயதானம் செய்து கொண்டிருப்பார்.

    7. இந்தப் பேரழிவு ஆயுதங்கள், ஓசாமா இதெல்லாம் சரி வராவிட்டால்? இன்னும் சில விஷயங்கள் இருக்கவே இருக்கின்றன, முல்லா முஹம்மது ஓமார் என்று ஒருவர் பெயர் செப்டம்பர் 11க்குப் பிறகு பிரபலமாக அடிபட்டதே நினைவிருக்கிறதா? அவர் சாம்பலில் இருந்து பினிக்ஸ்-ஆக எழுவார். இன்னும் சில பேர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, குல்புதீன் ஹெக்மத்தியார் (இழுத்து ஸ்டைலாக உச்சரிக்க சி.என்.என்னுக்கு ஏற்ற பெயர்), அவரை முதலில் ஏற்றி விடுவார்கள். பின்னர் அவரும் மாட்டிக் கொள்வார். ஹெக்மத்தியாரைப் பிடிப்பது மிகவும் எளிது, விளாடிமிர் புடினுக்கு அவரை நன்றாகத் தெரியும். ஓசாமாவுக்கு சி.ஐ.ஏ சோறு போட்டு வளர்த்தது, குல்புத்தீன் கே.ஜி.பியின் செல்லக் குழந்தை.

    அதி கற்பனைதான், ஆனால் அமெரிக்கவின் ஆயுத வியாபாரிகளான புஷ்உம், டிக் சென்னியும் கற்பனைக்கு எட்டாத காரியங்களை எல்லாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    0 Responses to சதாம் உசேன் கைது – என் சந்தே

    1. Pari
      December 30, 2003 at 10:41 am

      சரியாச் சொன்னீங்க. இன்னும் 40 வருசத்துக்கப்புறம் ‘உண்மை’யா என்ன நடந்ததுன்னு தெரிய வரும்.

    2. Vassan
      December 30, 2003 at 8:17 pm

      வெங்கட்:

      ஜோர்ஜ் புஷ் பெரிய யோக்கியர் என்று யாராலும் பறைசாற்றமுடியாது.ஆயினும் இலக்கற்ற இலக்கிய கூட்டமொன்றில், நீங்கள்

      செய்துள்ள ஊகங்களின் அடிப்படையிலான கருத்துகளில்,தெளிவாக புலப்படுவது ஒன்று உண்டென்றால், அது கண்மூடித்தனமான

      அமேரிக்க வெறுப்பு.

      இலக்கற்ற இலக்கிய கூட்டத்தில் கீழுள்ளவற்றை நிச்சயம் பேசியிருந்திருக்க மாட்டீர்களே…

      சதாம் அருளாட்சி,ஒரு சில பெருமைகள்

      [ சான்றுகளை, நடுநிலையான ஏடுகளின் தொகுப்புகளில் பல வலைதளங்களில் படிக்கலாம் ]

      79ல் தொடங்கி 2003 வரை சிறையில் அடைக்கப்பட்டு பின் கொல்லப்பட்டு,கொத்து கொத்தாக

      புதைக்கப்பட்ட துருக்கிமோன்கள்,பொதுவுடமைவாதிகள் மற்ற பிற சதாம் எதிரிகள்.

      92 வாக்கில் சதுப்பு (marsh?) நிலங்களில் வாழ்ந்த marsh அரேபியர்களில் வாழ்க்கைக்கு மூலதனமான

      சதுப்பு நிலங்களின் நீர் வடிகட்டப்பட்டு அவர்களின் வாழ்க்கை முறை நிர்மூலம் அடைந்தது.எதிர்க்கப் பார்த்த

      marsh அரேபியர்களில் பலர் சதாமால் கொல்லப்பட்டது.

      91 ஆண்டில் நடந்த ஷியடி/குர்திஷ் எழுச்சி அடியோடு நசுக்கப்பட்டு பல்லாயிர கணக்கானோர் சதாமின்

      படையினரால் கொல்லப்பட்டு,பெருஞ் சவக்குழிகளில் புதைக்கப்பட்டது.

      86-88 இடைப்பட்ட ஆண்டுகளில்,தன்னுரிமை பெற போராடிய குர்திஷ் மக்கள் ரசாயான வாயுக்களால்

      கொல்லப்பட்டு பெருஞ் சவக்குழிகளில் எறியப்பட்டது.

      இரான் நாட்டிற்கு உதவிய குர்திஷ் பர்சானி குடியினர் பலர் கொல்லப்பட்டது.

      கடைசி எழுபதுகளில் இரான் நாட்டில் பூர்வீகம் உடையோர் பலர் சொத்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டு,

      மிருகங்கள் போல் வண்டிகளில் அடைக்கப்பட்டு எல்லைக்கு அந்தபுறம் கடாசிவிடப்பட்டது.இதில்

      பலரின் மகன்கள் சிறையில் 15 வருடம் வரை அடைபட்டு பின் கொல்லப்பட்டது.

      அடுத்த தடவை இலக்குடன் ஏதாவது கூட்டத்தில் பேசினால் நாணயத்திற்கு இருபுறங்கள் உண்டு

      என்பதை மனதில் கொண்டு பேசுங்கள்.

    3. காசி
      December 30, 2003 at 9:04 pm

      நண்பர் வாசன் சொல்வதில் நியாயம் உள்ளது. சில பொய்களை அமெரிக்க அரசியல்வாதிகள், சொல்லப்போனால் எந்த நாட்டு அரசியல்வாதியானாலும் மக்கள் ஓட்டை நம்பியுள்ளவர்கள் என்பதனால், அவிழ்த்து விட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதனால் எல்லாம் சதாம் செய்ததை மறக்க முடியாதல்லவா? இது அவர்கள் தங்களை சந்தைப்படுத்துதலில் ஒரு அங்கம். ஜனநாயகத்தில் இதெல்லாம் செய்துதானே ஆகவேண்டியுள்ளது?

    4. prabhu
      December 30, 2003 at 11:23 pm

      assumptions and surmises. interesting to read are talk but hard to accept:-))

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *