கொந்தர்களுக்கு ஒரு சின்ன
by வெங்கட் • October 29, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
நான் சிறுவனாக இருக்கும்போது இந்திய/தமிழக அரசியல் கட்சிகளின் சின்னங்கள் எனக்கு ஆர்வமூட்டின. சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு (அதுவும் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமுள்ள இந்தியாவில்) மிகவும் முக்கியமானவை. “வாத்தியார் கழுதய நிக்கவச்சாலும் நாங்க ரெட்டெ எலேலதாங் குத்துவோம்” என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தச் சின்னங்களை வைத்துக்கொண்டு பல வேடிக்கைகளும் உண்டு. ஆயிரம் “கைகள்” மறைத்தாலும் “ஆதவன்” மறைவதில்லை என்ற கருணாநிதியின் வார்த்தை விளையாட்டைவிட “ரெட்ட எலெய பசுவும் கன்னும் மேய்ஞ்சுடுச்சி” என்ற சராசரிக் குடிமகனின் இளக்காரம்தான் எனக்குச் சுவையாகத் தோன்றியது). அதே நேரத்தில் இந்தியாவில் முழுவதும் படிப்பறிவு வந்துவிட்டால் இம்மாதிரி சின்னங்களுக்குத் தேவையிருக்காது என்றும் கோடுபோட்ட பக்கத்தில் பெயர்கள் மாத்திரம் இருக்கும், அதன் அருகில் கையெழுத்துப் போட்டு சனங்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால், மனித மனம் எப்பொழுதும் சின்னங்களை நாடுகிறது. பொருளைச் சந்தைப்படுத்த மேளாலர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் பெயருடன் தொடர்புப்படுத்த படங்களும் வாசங்களும் தேவையாக இருக்கின்றன. சில சமயங்களில் பொருளுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத படங்கள்கூட நாளடைவில் மக்களுக்கு நல்ல தொடர்பை உண்டாக்குகின்றன. இதற்கு உதாரணமாக, லினக்ஸ் பெங்குவினைச் சொல்லலாம்.
தளையறு மென்கலன் (Free Software) திறந்த ஆணைமூலம் (Open Source) உலகில் சின்னங்கள் மிகவும் பிரபலமானவை; லினக்ஸ் பெங்குவின், பிஎஸ்டியின் குட்டிச்சாத்தான், பெர்ல் ஒட்டகம், என்று பல பார்த்தவுடனேயே சம்பந்தப்பட்ட விஷயங்களை எளிதாக நினைவுபடுத்துபவை. இன்றைக்கு எரிக் ரேமண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இவர் கொந்தர்களுக்கு எனத் தனியாக ஒரு சின்னம் வேண்டும் என்று சொல்கிறார். கொந்தர்கள் (hackers) என்பவர்கள் கணினியில் ஆர்வம் கொண்டவர்கள், இவர்கள் எந்தவித தீய நோக்கங்களும் இல்லாதவர்கள். ஆங்கிலத்தில் hackers என்பதைப் பொதுவில் இவர்களுக்கும், பிளவர்கள் (crackers)க்கும் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பிளவர்கள் பிறர் கணினிகளுக்குச் சேதத்தை விளைவிக்கிறார்கள் அல்லது பிறர் கணினிகளைத் தீய நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்). ரேமண்ட் பரிந்துரைத்த சின்னம் இங்கே.

இது Game of Life என்ற பிரபலமான கணினி உருவாக்கத்தில் (simulation) வரும் glider என்ற படம்தான். கிட்டத்தட்ட யுனிக்ஸ், கணினி வலை இதெல்லாம் தோன்றிய அதே கால கட்டத்தில்தான் இந்த கணினி உருவாக்கமும் தோன்றியது. இதில் பல்வேறு காரணிகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பது ஒரு முக்கியமான உத்தி. இதில் பல்வேறு காரணிகளின் ஊடாடல் பல சிக்கல்களை (நிஜ வாழ்க்கையைப்போல) தோற்றுவிக்கும். இதைப் போன்றதுதான் கொந்தலும் என்பது ரேமண்டின் கருத்து. இந்தச் சின்னத்தை கொந்தலை விரும்பும் எவரும், கொந்தரை விரும்பும் எவரும் பயன்படுத்தலாம் என்பது எரிக்கின் விருப்பம்.
பொதுவாக கொந்தர்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும், வகைப்படுத்தலையும் விரும்பாதவர்கள் அவர்களுக்கும் ஒரு சின்னம் தேவை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் சிறுவயதில் நினைத்திருந்ததைப்போல் சின்னங்கள் படிப்பறிவில்லாதவர்களுக்கு மாத்திரமல்ல; அதிபுத்திசாலிகளுக்கும் கூடத்தான்.
வெங்கட்,
இன்றைய வார்த்தை கொந்தர்களா, பேஷ்!! நானும் ஒருநாள் லினக்ஸை கொந்திப்பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த 10 to 8 வேலை என்னை விடமாட்டேனென்கிறது. எப்போதோ கல்லூரி இறுதியாண்டில் லினக்ஸ் கருவில் (kernel) நோண்டிப்பார்த்ததோடு சரி. ஹும்.. அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். கூடவே கொஞ்சம் கிறுக்குத்தனமும் வேண்டும். ஹி..ஹி..
ரமணி.