• இன்னொரு கொடிய வைரஸ்.

    by  • October 30, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய மகனுடன் ஹாலோவின் நாளைக் கொண்டாட என்ன பயங்கர உடைகளை அவனுக்குப் போட்டுப் பள்ளிக்கு அனுப்பலாம் என்று தீர்மானித்து முடித்துவிட்டு கணினியில் சற்று முன்னர்தான் அமர்ந்தேன்.

    பயங்கரங்களைத் தேட அதிக தொலைவு செல்ல வேண்டியதில்லை. அமெரிக்காவை ஒருமுறை பார்த்தால் போதும். நியூ சயன்டிஸ்ட் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வைரஸை உருவாக்கியிருக்கிறார்கள். அம்மை வியாதி வைரஸின் மரபு மாற்றமான இது செலுத்தப்படும் எலிகள் எல்லாவற்றையும், நூறு சதவீதம், அழிக்கிறது. மேலும் சாதாரணமாக அம்மை வந்தால் குணமளிக்ககூடிய எதிர்வைரஸ் மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் இந்த மரபு மாற்றப்பட்ட வைரஸிடமிருந்து எலிகளுக்கு எந்த விதமான குணத்தையும் தரமுடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், இந்த வைரஸ் தொற்றினால் மரணம் நிச்சயம். இந்தவிதமான வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வகை உயிரினத்தை (உதாரணமாக எலிகளை) பூண்டோடு அழிக்கக்கூடியது.

    இந்த ஆராய்ச்சி அமெரிக்க அரசாங்கத்தின் பணவுதவியுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

    தொழில்நுட்பத்தில் முன்னேறி நாடுகளுக்குள்ளே கிருமியாயுதங்கள் (Bioweapons) தடுப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்யாத ஒரே நாடு அமெரிக்காதான்.

    தற்பொழுது தடுப்பு மருந்துகள்தான் வைரஸ்களிடமிருந்து நமக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு. இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாதக் குழுக்களும், கொடுங்கோல் அரசுகளும் கிருமியாயுதங்களை உருவாக்குவதில் முக்கிய உத்தியாகக் கையாளுவது, தடுப்பு மருந்துகளால் கட்டுப்படாத வீரிய தொற்றுவியாதிகளே. எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் பலனளிக்காது என்ற நிலையில், கிருமியாயுதங்களுக்கு இருக்கும் மதிப்பு மிகவும் அதிகம். அந்த வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் மானிய உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீரிய வைரஸ் ஒரு கிருமியாயுதமாகவே கருதப்பட வேண்டும்.

    இதையே வேறு ஒரு நாடு செய்திருப்பதாக, ஏன் முயற்சிப்பதாகவே, அறிவித்திருந்தால் அமெரிக்கா அந்த நாட்டின்மீது போர் தொடுக்கும். ஆறு மாதங்களுக்கு முன் நாம் அடிக்கடி கேட்ட சதாம் உசேன், அணு ஆயுதம், கிருமிகள், என்ற வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். அது போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு புஷ் அரசாங்கம் எப்படியெல்லாம், “நாங்கள் நல்லவர்கள், அவர்கள் கொடியவர்கள்” என்ற பம்மாத்துகளை அள்ளி வீசி சதாமுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களின் வழியாக எப்படி விதைத்தார்கள் என்பதை அறிவோம். இப்பொழுது அமெரிக்க அரசின் அனுமதியுடன், பண உதவியுடன் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் இது கிருமியாயுதம் அல்லாமல் வேறொன்றுமில்லை.

    இந்த ஆராய்ச்சி அமெரிக்காவின் தற்பொழுதைய பாதுகாப்புத் தேவைக்கு மிகவும் அவசியம் என்றும், இது போன்ற ஆராய்ச்சியை ஒரு தீவிரவாதக் குழு நடத்தி வீரிய வைரஸ்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அமெரிக்கா இதைக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்று கூறுகிறார்கள். புதிய வீரிய வைரஸ் தொற்றிப் பரவுவதில்லை, இது எலிகளை அல்லாமல் வேறு உயிரினங்களை பாதிப்பதில்லை போன்ற பல வாதங்களை முன்வைக்கிறார்கள். பார்க்கப்போனால் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சதாமும் (அமெரிக்காவிடமிருந்து) தன் மக்களைக் காப்பாற்ற என்றுதான் ஆயுதங்களை பெருக்குகிறார்கள். அமெரிக்கா இந்த இடத்தில் சற்றே மாறுபடுகிறது; அதற்கு இருக்கும் ஆயுத, பணபலங்களையும், ஆராய்ச்சித் திறமைகளையும் வைத்து புதிய ஆயுதங்களை உருவாக்குகிறது.

    உருவாக்கும் ஆயுதங்கள் திறன் மிகுந்தவை. அவற்றிலும் கிருமியாயுதங்களுக்கு தம்மைத் தாமே பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மேலும் இயற்கையின் பரிணாமக் கூறுகளால் இவைகள் சுயமாக மரபுமாற்றத்திற்குச் ஆளாகி, மனிதன் சற்றும் எதிர்பாராத விஸ்வரூபம் எடுக்கவும் சாத்தியம் உண்டு. அப்பொழுது இதுபோன்ற தாய்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதம் என்ற வார்த்தைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி மனித குலம் முழுவதுமாக அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் தோன்றும்.

    அமெரிக்காவின் “நல்ல” நோக்கங்களின் மேல் எப்பொழுதுமே உலகிற்குச் சந்தேகம் இருந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக,

    பேரழிவு ஆயுதமான அணு ஆயுதங்களை முதன் முதல் தயாரித்தது அமெரிக்காதான். வரலாற்றின் ஒரே ஒரு முறை அந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய பெருமையும் அமெரிக்காவையே சேரும்.

    இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் கிட்டத்தட்ட 3,000,000 மனிதர்களைக் கொன்ற ஒரே நாடு அமெரிக்கா (இதில் 2,000,000 பேர் புவியியல் ரீதியாக அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பு இல்லாததும் அளவிலும், மக்கள் தொகையிலும், திறனிலும் அமெரிக்காவிற்கு எந்தவிதமான பெரிய குந்தகமும் விளைவிக்க இயலாத வியட்நாம் என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர்கள்).

    இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 24 நாடுகளின் மீது அமெரிக்கா நேரடியாக குண்டுகளை வீசியிருக்கிறது. கவனிக்கவும் இவை நேரடியாக வீசப்பட்ட குண்டுகள், என்னற்ற நாடுகளில் அமெரிக்க பணவுதவிடன் பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க குண்டுகளை மண்ணிலும் மனிதரிலும் ஏந்திக் கொள்ள பேறு பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ; சீனா, கொரியா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேஷியா, லாவோஸ், குவாட்டமாலா, காங்கோ, சோமாலியா, சுடான், லெபனான், ஆப்கானிஸ்தான், க்யூபா, எல் சால்வடார், இரான், இராக், குவைத், க்ரெனடா, பெரு, பனாமா, நிக்ராகுவா, யூகோஸ்லாவியா.

    உலக நன்மைக்காகவே போரில் ஈடுபடுவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அதற்கு உலகின் பிற நாடுகள் கொடுத்துள்ள விலை அளவிடமுடியாதது.

    இந்த நிலையிலிருந்து உலகம் விடுபட இரண்டே இரண்டு வழிகள்தான் எனக்குத் தோன்றுகின்றன.

    1. பொருளாதாரம் பரவலாக்கப்பட்ட நிலையில் ஏதாவது ஒரு சரிவு ஏற்பட்டு அமெரிக்காவின் நேரடிப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, உலகமயமாக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் தங்கள் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்று முடிவெடுத்து அமெரிக்காவின் பல்லைப் பிடுங்குவது.

    2. அழிவும் ஆயுதமும் தாண்டவமாடும் அமெரிக்க மண்ணில் ஒரு அற்புதம் நடந்து இன்னொரு மகாத்மா காந்தி அவதரிக்க வேண்டும். அவர் அரசுத் தலைவராகி பலம் ஆய்தங்களில் இல்லை; அதை ஒழிப்பதில்தான் இருக்கிறது என்று இந்த சக்கரச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அமெரிக்காவைத் திருத்த வேண்டும்.

    நான் வாழ்க்கையில் ஒருபோதும் நம்பிக்கை இழந்துபோக மாட்டேன். எனவே, நாம் வாழிடம் நல்லபடியாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    0 Responses to இன்னொரு கொடிய வைரஸ்.

    1. saraswathi
      November 2, 2003 at 9:50 am

      Nandrihal.

      I really like the way in which atleast you could tell about somethings and that too in tamil. But i feel that you are doing marvelous job (through your weblog) by bringing out ( and telling it out) some brutal aspects which are happenning around us, in a conscious way.

      Thank you so much

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *