அலைபாயும் அறுபது -2
by வெங்கட் • August 25, 2003 • பொது • 0 Comments
இது என்னுடைய பழைய வலைக்குறிப்பின் எதிரொலி தொடர்பானது.
என்னுடைய குறிப்பின் அடிக்கருத்தை நண்பர் வாசு தவறவிட்டிருக்கிறார். வாசு, நீங்கள் உங்களுடைய வயது முதிர்ந்த நண்பர்கள் வட அமெரிக்காவில் இன்னும் அல்லாடிக்கொண்டிருப்பதையும் அதே போல் இந்தியப் பெற்றோர்கள் வேண்டிய எல்லாம் பெற்று நிறைவடைந்த வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருப்பதையும் சுட்டியிருக்கிறீர்கள். நன்றி, நானும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் என்னுடைய குறிப்பின் முக்கிய பாகம் (எனக்கு வேதனை தரும் விஷயம்) நம்மூர் இளைஞர்களும் இளைஞிகளும்(?) தங்களுடைய மிகவும் செழிப்பான, பிறருக்கும் தமக்கும் உபயோகமாக இருக்கவேண்டிய வயதில் பெற்றோரின் பணத்தில் காலம் தள்ளுகிறார்கள். சராசரி இந்தியர் தனது பங்களிப்பை சமூகத்திற்குச் செலுத்தும்பொழுது அவரது அதிகபட்ச உழைப்புத் திறனை இழந்து விட்டிருக்கிறார். முப்பது வயதில் என்று வைத்துக்கொள்ளுவோம். இருபதிலிருந்து முப்பது கட்டாயமாக சக்தி நிரம்பிய, புதுப்புது சிந்தனைகள் தோன்றக்கூடிய வயது. நேற்று இரவுதான் பயோகிராபி தொலைக்காட்சியில் ஸ்டிவன் ஸ்பீல்பெர்கின் வரலாற்றுப் பதிவுகளைப் பார்த்தேன். முப்பத்தைந்து வயதுக்குள் அவர் ஹாலிவுட்டின் மாபெரும் சக்தியாக மாறியிருந்தார். வில்லியம் பிராக் இயற்பியல் நோபல் பரிசைப் பெற்ற பொழுது அவருக்கு வயது இருபத்தைந்து).
உழைத்து தன் சொந்தப்பணத்தில் படிப்பதன் மூலம் இளைஞர்களுக்குப் பணத்தின் அருமையும் படிப்பின் அவசியமும் புரியும் (நன்றாகப் படித்தால் இப்பொழுது செய்யும் வேலையைவிட நல்ல வேலை செய்யலாம்). இது சமூகத்திற்கு நல்லது. பட்டப்படிப்பு படிக்கும் ஒருவன் மாணவனாக இருக்கும் பொழுது உணவு விடுதியில் மேசை சுத்தம் செய்திருப்பானேயானால், பின்னாளில் அவன் மேலாண்மையில் இருக்கும் ஒவ்வொரு கடைநிலை ஊழியருக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு மதிப்பு கிடைக்கும். நம் சமூகத்தில் உடலை வருத்திச் செய்யப்படும் தொழில்கள் மதிப்பு பெறுவதில்லை. அதே போல் அத்தொழிலை செய்பவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தன்னுடைய தொழிலை உயர்வாக மதிக்காமல் ஒருவன் செய்யும் தொழிலில் அவன் உன்னதம் காணமுடியாது (உதாரணமாக, சாலைகளைக் கூட்டும் ஒருவன், தான் யாரையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை, தன்னுடைய வேலையை முழுமனதோடு செய்கிறேன், யாரும் என்னுடைய காரியத்தில் குறைசொல்ல முடியாது என்று தலை நிமிர்ந்து நடக்கும் நாள்தான் நம் சமூகம் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்பட வேண்டிய நாள். அதில்லாமல் அவனைக் கூனிக் குறுகி நடக்கச் செய்வது நம் சமுதாயத்தின் இழிநிலைக்குத்தான் அடையாளம்).
தனிப்பட்ட குடும்பங்களில் தகப்பனின் தாங்குதிறன் என்று பார்க்காமல் முழுவதுமாக நமது சமுதாயம் என்று பார்த்தால் நிலை இப்படித்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. இது மாறினால், நன்றாக இருக்குமே என்று ஆதங்கமாக இருக்கிறது.
வெங்கட் அவர்களே …
உங்களின் கருத்து மிக அருமை .. இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் தேவையான விடயம் இது .. கல்லூரியில் படிக்கும்காலத்தில் தன் பங்கு என்று ஒரு சிறிய பகுதியையாவது உழைத்துச் சம்பாதித்தால் மட்டுமே உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் நன்றாகப் புரிந்துசெயல்பட முடியும் … நன்றாகச் சொன்னீர்கள் ..