“என்னப்பா, blog எழுது ஆரம்பிச்சு பத்து நாளாப்போது, இன்னும் லினக்ஸ் பத்தி எழுதல நீ?”, என்று நண்பர் ஒரு அங்கலாய்த்துவிட்டார். அதனால் இதோ;

இப்பொழுது தகவல் நுட்ப வியாபார உலகம் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பது ஸ்கோ நிறுவனம், ஐபிஎம் மீது தொடுத்திருக்கும் நம்பிக்கை விரோதக் குற்றச்சாட்டு. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. முதலில் ஸ்கோ என்பது யார் என்று பார்க்கலாம். ஸ்கோ யுனிக்ஸ் இயக்குதளத்திற்கு சட்டபூர்வ சொந்தக்காரர். யுனிக்ஸ்தான் முன்னோடி. பல்பயணர் (multiuser), பல்செயல்பாடு (multitasking) இயக்குதளம். இணையத்தின் ஆதாரமான மின்னஞ்சல், வலை அரட்டை, ஊடுவலை போன்றவை யுனிக்ஸின் அடிப்படையிலேயே பின்னப்பட்டவை. இன்றைக்கு பிரபலமாக இருக்கும் மைக்ரோசாப்ட் (2000, XP), ஆப்பிள் (OS-X), மற்றும் லினக்ஸ் – அடிப்படையில் யுனிக்ஸ் இயக்குதளத்தின்மீது அமைக்கப்பட்டவை. சிலிக்கன் கிராபிக்ஸ், ஐபிஎம், ஹெச்.பி போன்ற நிறுவனங்கள் தங்கள் சக்தி வாய்ந்த கணினிகளில் யுனிக்ஸ் இயக்குதளத்தை நேரடியாகப் பயன்படுத்துகின்றன. சக்தி வாய்ந்த நுண்செயலிகளில் மாத்திரமே செயல்பட்டுக்கொண்டிருந்த யுனிக்ஸ் இயக்குதளத்தை, விலை குறைந்த, பிரபலமான இன்டெல் நுண்செயலிகளுக்கும் ஏற்றவகையில் மாற்றியமைத்து விற்கும் நிறுவனம் ஸ்கோ. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் முற்றிலும் இலவசமாகவும், முன்னேறிய தொழில்நுட்பமும் கொண்ட லினக்ஸின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்கோ இப்பொழுது சந்தைக்குச் சம்பந்தமில்லாத ஒரு நிறுவனம் ஆகிவிட்டிருக்கிறது. தங்கள் வியாபார நிர்பந்தங்களுக்காக, லினக்ஸ் வர்த்தக நிறுவனமான கால்டெராவைக் இணைத்துக் கொண்டதன் மூலம். ஸ்கோவும் லினக்ஸ் புரட்சி என்ற பெருங்கடலில் கரையத் தொடங்கியது. கடந்த ஆண்டு, சுசி லினக்ஸ், கனெக்டிவா லினக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்கோ யுனைட்டெட் லினக்ஸ் எனும் இயக்குதளத்தை வெளியிட்டது. எனினும், ரெட் ஹாட், சுசி போன்ற லினக்ஸ் வர்த்தகர்களுடனும், டிபியன் போன்ற முற்றிலும் வணிகத் தொடர்பற்ற லினக்ஸ் வெளியீடுகளுடனும் போட்டியிட முடியாமல் ஸ்கோ ஒரு முடமாக்கப்பட்ட நிறுவனமாக மாறிப்போனது. சுருக்கமாகச் சொல்லப்போனல் 40 வருட வரலாற்றைக்கொண்ட யுனிக்ஸ் வர்த்தக உரிமைகளை AT&T நிறுவனத்திடமிருந்து வாங்கியவர், அதன் தற்சமய வணிகச் சொந்தக்காரர் என்பதைத் தவிர ஸ்கோவிற்குச் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பெருமையும் இல்லை.

இதே நேரத்தில் ஐபிஎம், ஹெச்.பி போன்ற நிறுவனங்கள் நேரடியாக லினக்ஸின் தொழில்நுட்பப் புகழைப் பாடத்தொடங்கின. தற்சமயம் ஸ்கோவிடமிருந்து விலை கொடுத்து வாங்கிய யுனிக்ஸ் இரகசியங்களில் அமைக்கப்பட்ட தனது இயக்குதளத்தை தனது இயக்குதள வணிகத்திற்கு முற்றிலுமாக லினக்ஸை நம்புவது என்று ஐபிஎம் முடிவெடுத்தது. தன்னுடைய கணினி நிபுணர்களை திறந்த ஆணைமூலச் செயலிகள் எழுத ஊக்குவிக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னனியில் இருந்து பின்னர் மைக்ரோஸாப்ட் மற்றும் சில நிறுவனங்களின் வளர்ச்சியால் பின்தங்கிப் போய்விட்ட ஐபிஎம்-மின் வர்த்தகம் லினக்ஸ் தொடர்பால் விரைவாக வளரத் தொடங்கியது. இழந்து போன தனது கடந்தகாலப் பெருமைகளை மீட்டெடுக்கும் பாதையில் ஐபிஎம் நடைபோடத் தொடங்கியது.

இந்த நிலையில் தன்னிடமிருந்து உரிமைபெற்ற யுனிக்ஸ் இரகசியங்களை லினக்ஸ் தன்னார்வ கணினி நிபுணர்களுக்குத் தனது ஊழியர்கள் மூலம் திறந்து காட்டிய குற்றச்சாட்டிற்காக ஸ்கோ தற்பொழுது ஐபிஎம் பல மில்லியன் இழப்பீடு தரவேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளது. அறிவுச் சொத்துரிமை என்று அறியப்படும் Intellectual Property Rights விதிகளின்படி இரண்டு நிறுவன்ங்கள் தங்களுக்கு இடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் கண்டுபிடிப்பு உண்மைகளை மற்றவருக்குத் திறந்து காட்டுவது வழக்கம்தான். அவ்வாறு தான் அறிந்துகொண்ட யுனிக்ஸ் கண்டுபிடிப்புகளை மற்றவருக்கு வெளியிடாமல் காப்பாற்றும் கடமையும் சட்டபூர்வக் கட்டுப்பாடு ஐபிஎம்மிற்குக் கட்டாயம் உண்டு. அதற்கு மாறாக அது திருட்டுத் தானமாக இரகசியங்களை வெளியிட்டிருந்தால் அது கட்டாயம் இழப்பீடு கொடுத்தாக வேண்டும்.

ஐபிஎம்முடன் ஒப்புநோக்கையில் ஸ்கோ மிகவும் சிறிய நிறுவனம். ஐபிஎம்மின் நெடிய தொழில்நுட்ப வரலாறோ, தற்கால சந்தைப் பங்குவீதமோ சற்றும் இல்லாத ஸ்கோ இந்த வழக்கைத் தொடுக்கையில் முக்கியமாக கவனித்திருக்கக்கூடிய விஷயம் இது. தனது சட்ட வல்லுநர்களின் திறமை மற்றும் தனது பணபலத்தைப் பயன்படுத்தி ஐபிஎம் ஸ்கோவை ஒழித்துக்கட்ட முடியும். கசப்பான இந்த உண்மை ஸ்கோ நன்கு அறிந்ததுதான். இருந்தும் தைரியமாக நீதிமன்றத்திற்கு அழைத்திருப்பதன்மூலம் தன்னிடம் அசைக்க முடியாத ஆதரங்கள் இருப்பதாகவும், உண்மையின் தார்மீக பலம் இருப்பதாகவும் ஸ்கோ நம்புகிறது. அல்லது மற்றவர்களை நம்பவைக்கிறது.

ஒருக்கால் ஐபிஎம்மின் மீது தான் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை ஸ்கோ உண்மை என்று நிருபிக்குமானால் அதனால் ஏற்படும் இழப்பு ஐபிஎம்மிற்கு மாத்திரமல்ல. இன்றைக்கு இணையத்தின் ஆதாரத் தூணாக இருக்கும் லினக்ஸ் இயக்குதளத்திற்குத் தான் அதைவிட அதிகம். ஒப்பீடு இல்லாத தார்மீக நெறிகளின் மீது கட்டப்பட்ட கோபுரம் லினக்ஸ் இயக்குதளம். திருட்டத்தனமான அறிவைக் கொண்டு வளர்க்கப்பட்டதாக நிருபணமானால் அது மணல் கோபுரமாகச் சரிந்து போகும். ஐபிஎம்-மைத் தொடர்ந்து பல நிறுவங்களும் ஸ்கோவிற்குக் கப்பம் கட்ட வேண்டியிருக்கும். லினக்ஸையே வியாபாரமாக கொண்ட ரெட் ஹாட் போன்ற நிறுவனங்கள் முற்றாகச் சரிந்துபோகக் கூடும். இணையத்தின் வரலாறு மாற்றி எழுதப்படும்.

ஆனால் உண்மை என்ன? ஸ்கோவிடம் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றனவா? அவை தரும் உண்மையின் தார்மீக பலம் இருக்கிறாதா? இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ஐபிஎம் வாய்மூடியிருக்கக் காரணம் என்ன? குழம்பும் இந்தக் குட்டையில் மைரோஸாப்ட் எப்படி மீன் பிடிக்கிறது. வரும் நாளில் தொடர்ந்து எழுதுகிறேன்.