வழக்கு தொடர்த்து ஸ்கோ என்ன சாதிக்க நினைத்திருக்கும் என்பது ஒரு புரியாத புதிர்தான். ஸ்கோவின் செய்தி முதலில் வெளிவந்தபொழுது உடனடியாக பலர் மனதில் தோன்றியது இதுதான் – ஸ்கோ-வின் பொருளாதார நிலை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. முன்னரே சொன்னதுபோல் ஸ்கோவின் ஒரே தயாரிப்பு – விலையில் குறைந்த இன்டெல் நுண்செயலிகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட யுனிக்ஸ் இயக்குதளம் மாத்திரம்தான். ஆனால் சக்தி வாய்ந்த யுனிக்ஸை முதலில் AT&T இடமிருந்தும், பின்னர் நாவெல் நெட்வேரிடமிருந்தும் பிறகு ஸ்கோவிடமிருந்தும் உரிமை பெற்ற பல நிறுவனங்கள் யுனிக்ஸ் அடிப்படையில் தங்களுக்கென அதை மாற்றியமைக்கத் தொடங்கின. உதாரணமாக, ஐபிஎம், சிலிக்கன் கிராபிக்ஸ், சன் மைக்ரோஸிஸ்டம்ஸ், ஹிவ்லெட்-பக்கார்ட் போன்ற ஒவ்வொரு நிறுவனங்களும் தமது போக்கில் கட்ந்த முப்பது வருடங்களாக யுனிக்ஸை மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலைக்கு பிளவுபடுதல் (fork) என்று பெயர். பிளவுபடுதல் மென்கலன் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. சிலிக்கன் கிராபிக்ஸ்க்கு என வடிக்கப்பட்ட மென்கலனை, சன்னில் இயக்க முடியாது. இந்த வகையில் சற்றே மாறுபட்ட ஒவ்வொரு யுனிக்ஸ் குழந்தைகளுக்கும் என்று தனித்தனியா மென்கலனைத் தயாரிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து போயிற்று. இதுவும் மைக்ரோஸாப்டின் அபார வளர்ச்சிக்கு ஒரு அடிப்படை காரணம். தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டவைகளாக இருந்தாலும் பிளவுபட்டுப் போனதால் யுனிக்ஸ் இயக்குதளங்கள் வளராமல் போயின. அந்த வகையில் ஸ்கோவும் அதற்கென ஒரு யுனிக்ஸை வைத்திருந்தது.

ஆனால் தொன்னூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஸ்கோவின் வர்த்தகம் மெதுவாக அரித்துப்போகத் தொடங்கியது. படிப்படியாக தொழில்நுட்பத்தில் மேம்படத் தொடங்கிய லினக்ஸ் இயக்குதளத்தின் வளர்ச்சியில் முதல் பலி ஸ்கோதான். பின்லாந்து நாட்டில் மாணவராக இருந்த லினஸ் டோர்வால்ட், யுனிக்ஸ் போன்ற சக்தி வாய்ந்த இயக்குதளம் இன்டெல் நுண்செயலி அடிப்படியில் அமைந்த தனது மேசைக்கணினிக்கு வேண்டும் என விரும்பினார். அது இல்லாத நிலையில் தானே அதை உருவாக்க முற்பட்டார். பின்னர், தனது மிக, மிக எளிதான சக்தி குறைந்த அந்த இயக்குதளத்தின் கருவை இணையத்தில் மற்றவர்களுக்கும் இலவசமாக வெளியிட்டார். பெற்றுக்கொண்ட பலர் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர், ஒரு பொழுதுபோக்காக லினக்ஸ் விரைவில் உலகெங்கிலும் உள்ள கணினிப் பொறியியல் மாணவர்களிடையே பிரபலமாகத் தொடங்கியது. அதைப் பயன்படுத்தியவர்களில் பலர் அதை மாற்றியமைத்துத் திறமையானதாக ஆக்க முடிந்தது, அதற்குக் காரணம் இயக்குதளத்தின் அடிப்படை ஆணைமூலங்களும் இலவசமாகக் கிடைத்ததுதான். அடிப்படையில் லினக்ஸ்ம் ஸ்கோவும் ஒரேமாதிரியா கணினிகளுக்கானவை என்பதால் லினக்ஸ் வளரவளர ஸ்கோ தேயத்தொடங்கியது.

லினக்ஸ் விரைவிலேயே மேசைக்கணினிகளைத் தாண்டி சக்திவாய்ந்த நடுத்தர அளவு கணினிகளியும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சக்தி வாய்ந்த சேவைவழங்கு கணினிகள் லினக்ஸை நாடத்தொடங்கின. இன்றைக்கு இணையத்தின் பெரும்பகுதி லினக்ஸாலேயே இயங்குகிறது. ஐபிஎம், சன், ஹெச்.பி, சிலிக்கன் கிராபிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவை வழங்கு கணினிகளில் லினக்ஸைப் பயன்படுத்துகின்றன. ஒருகாலத்தில் யுனிக்ஸால் பிளவுபட்ட நிறுவனங்கள் இன்றைக்கு லினக்ஸால் மீண்டும் நெருங்கத் தொடங்குகின்றன. மைக்ரோஸாப்ட் தனது வளர்ச்சிக்கு முதல் எதிரியாக லினக்ஸைக் கருதுகிறது. இந்த எதிரியைப் போரிடுவது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது, ஏன் என்றால் அதற்கு முகம் கிடையாது, அது தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ இல்லை. அந்தவகையில் லினக்ஸின் வளர்ச்சியைத் தடுக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அதற்குப் பொன்னானது. ஸ்கோ அப்படியரு வாய்ப்பை மைக்ரோஸாப்டுக்குக் கேட்காமலேயே கொடுத்திருக்கிறது (அல்லது ஸ்கோவைத் தூண்டியது மைக்ரோஸாப்டா?). …