கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னால் டோக்கியோவில் வசித்தபோது மரபுக்கவிதைகளிலும் இலக்கணத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது (இப்பொழுதும் இருக்கிறது; என்னுடைய Attention Dificiency Disorder காரணமாகக் கொஞ்சம் அடித்தட்டிற்குப் போயிருக்கிறது). அப்பொழுது மன்றமையம் என்று அன்புடன் அழைக்கப்பட்ட Forumhub.com தளத்தில் இருந்த பல இலக்கியக் குழுக்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தேன். அப்பொழுது எங்கள் குழுக்களில் புதிதாக வருபவர்களுக்கு அடிப்படைப் பாடங்களை ஒரு இடத்தில் சேர்த்துவைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து இருந்தது. அங்கு இருந்தவர்களிலேயே குறைவாக இலக்கணம் தெரிந்த நான் அதைத் தொடங்கினேன். அந்தப் பக்கங்கள் xoom.com என்ற இலவசச் சேவைத் தளத்தில் yappuvalai.org என்று Namezero.com என்ற பெயர் கொண்ட பல ஊடுவலை புண்ணியாத்மாக்களில் ஒருவர் பெயரை இலவசமாகப் பதிந்து தர சில காலம் நடை போட்டது. அதற்குப் பிறகு எல்லா பாலங்களின் அடியிலும் நிறைய நீர் ஓடிவிட்டது (எங்கள் கும்பகோணம்
காவிரியில் கர்நாடகத்தின் தயவில்லாமல் போனதால் அவ்வளவாக இல்லை). புள்ளிவணி என்ற ஒற்றைப் பெருங்குமிழி என்னைப்போன்ற இலவசச் சேவை நாடி நின்றவர்களுக்குப் புரவலர்களாக இருந்த புண்ணியவான்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு ஒரு நாள் பெருத்த ஓசையுடன் வெடித்தே போயிற்று. Namezero, Xoom போன்ற பெருச்சாளிகளே காணமல் போய்விட கரைபுரண்டோடும் தகவல் வெள்ளத்தில் யாப்புவலை சுக்கு நூறாகக் கிழிந்தே போனது. இதில் Namezero முதலில் ஐநூறு டாலரில் ஆரம்பித்து இறுதியில் எழே முக்கால் டாலருக்கு (வரியை அவர்கள் கட்டிவிடுவார்களாம்) யாப்புவலை.ஆர்க் தளத்தை மீதம் மூன்று வருடங்களுக்கு என்னிடம் விற்க பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்த்தார்கள். யாப்புக்காக அவ்வளவு காசு கொடுக்க நான் தயாராக இல்லை

வழக்கமாக தமிழுக்கு வரும் அதே சோதனைதான் – புரத்தலின்றி புழுதிபடியத் தொடங்கியது

பழைய நண்பர்கள் பலமுறை “இம்மாம் பெரிய எணையத்துல எதுனாச்சியும் ஒரு மூலைல அதப்போட்டு வையேன்” என்று சொல்லி சொல்லி சலித்துப் போனார்கள். போடாமல் போனதற்குக் காரணம் மாறிக் கொண்டே இருக்கும் தமிழ்த் தகுதரக் குறியீடுகள்தான், தஸ்கி போய்விடும், டாப் வந்துவிடும் என்று காத்திருந்தேன், தஸ்கி போனது, டாப் வரவில்லை, மாறாக தஸ்கி 1.7 ஆக உருவெடுத்தது. பின்னர், இதோ வருகிறது யுனிகோட் என்று இலவு காத்திருந்தேன். (டேய் வெங்கிட்டா, இப்படியெல்லாம் சொல்லி உன் சோம்பேறித்தனத்தைப் பூசி மொழுகுறியே, நாயமா? – மோர்க்குழம்பு போலக் கலக்கமாக, கையில் சிகரெட்டில்லாத சிவாஜி கணேசனை ஒத்த என் மனசாட்சி).

ஏதோ ஒரு உத்வேகத்தில் இப்பொழுது இன்றைய தகுதரமான தஸ்கி 1.7க்கு மாற்றி வலையேற்றியிருக்கிறேன். இது யாராவது ஒருவருக்கு, ஏதாவது ஒரு வகையில் பயன்படும் என்ற நம்பிக்கை.

அப்படி யாராவது இதைப் படித்துவிட்டு ஒரு கால் கடுதாசி போட்டால் சந்தோஷப்படுவேன்.

http://www.tamillinux.org/venkat/yappu_tutor/

அன்புடன்
வெங்கட்

பி.கு: அப்படியன்றும் பயமுறுத்தும் இலக்கணமில்லை என்று சொல்ல என்னுடைய பழைய முன்னுரையை இங்கே இணைக்கிறேன்.
——
வணக்கம்.

இது இணையத்தின் வழியே யாப்பிலக்கணத்தின் அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக்கொடுக்க என்னுடைய எளிய முயற்சி.

எனக்குத் தெரிந்த வகையில் இணையத்தின் வழியே தமிழில் அமைப்பிக்கப்பட்ட முதல் வலையாசன் (Web Tutor) இதுதான். மின்னூடகம் கற்பித்தலுக்கு எண்ணிலடங்கா சாத்தியங்களை வழங்குகிறது. இவற்றின் சில எளிய கூறுகளை இந்த வலையாசானில் பயன்படுத்தியுள்ளேன். முதல் முயற்சி என்பதால் இதில் தவறுகள் இருக்கலாம். தெளியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

யாப்பிலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு நான் அதில் தேர்ந்தவன் அல்லன். இன்னும் சொல்லப்போனால் அதை கணினி வழி பயிற்றுவிக்க எனக்குப் போதுமான கணினி அறிவு கிடையாது. இருந்தாலும் நான் இதைத் துணிந்து கையாள முயற்சித்திருக்கிறேன். நான் அறிவியல் ஆராய்ச்சி மாணவனாகப் பயின்ற காலங்களில் எங்கள் பயிற்றுக் கூடத்தில் (இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்) என் நண்பர்களிடையே எழுதப்படாத விதி ஒன்று இருந்தது. எங்கள் பலருக்கும் தெரியாத ஏதாவது ஒரு விடயம் இருந்தால் அதை எங்களில் ஒருவர் பிறருக்குச் சொல்லிக் கொடுப்போம்!! அதாவது, காலை முன் வைப்பவர், மற்றவர்கள் அந்த விடயத்தைப் படிப்பதற்கு முதல் நாள் படித்து விட வேண்டு. மறுநாள் அவர் பலகையின் முன்னின்று சொல்லிக் கொடுப்பார். மூன்றாம் நாள், எல்லோருக்கும் ஓரளவு புரிந்த நிலையில் அவர் தவறுகள் விமரிசிக்கப்படும். தங்களில் ஒருவரும் கற்றுக் கொள்ளும் பாடத்தில் கரை தேர்ந்தவர் இல்லை என்ற நிலையில் கற்பிப்பவர், கற்பவர் வித்தியாசமின்றி வாத, விவாதங்கள் மேற்கொள்ளப்படும். இந்த முறை ஒரு முதிர்ந்த ஆசிரியரிடமிருந்து கற்பதைவிட சுவாரசியமாக இருக்கும். இந்த யாப்பிலக்கண வலையாசானும் அதைப் போன்ற முயற்சிதான். என்னை முழு முட்டாளென்று உணர்ந்துகொண்டு நான் முன்னால் அடியெடுத்து வைக்கிறேன் – சறுக்கி விழும் நிலையில் பின்னாலிருந்து கைப்பற்றி உதவ நீங்கள் இருக்கும் தைரியத்தால்.

கிட்டத்தட்ட இதே நிலையில்தான் மன்றமையத்தில் எங்களில் பலர் யாப்பைக் கற்றுக் கொள்கிறோம். “நெய்யழுக வெண்பொங்கல் தா” என்ற வெண்பா ஈற்றடியுடன் சிறுபிள்ளையின் ஆர்வத்துடன் யாப்பின் பரிமாணங்களை நாங்கள் கற்கத் தொடங்கியிருப்பது மன்றமையத்தில். யாப்பென்னும் அருங்கடலில் மூழ்கித் திளைக்க உங்களையும் அங்கே அன்புடன் வரவேற்கிறோம். இந்தப் பாடங்களை எழுத எனக்குப் பலர் உதவியிருக்கின்றார்கள். குறிப்பாக, பசுபதி, அனந்தநாராயணன், ஹரி கிருஷ்ணன், பெரியண்ணன் சந்திரசேகரன், அருளரசன், பாலாஜி இவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இனி, நீங்கள் இருக்கும் தைரியத்தில் ஒரடி முன்னெடுத்து வைக்கிறேன். வாருங்கள்.

அன்புடன்

வெங்கட்ரமணன்,
டோக்கியோ.