தனது அடுத்த ஆபீஸ் நிரலி வெளியீட்டில் இருக்கும் புதிய அம்சங்களை மைக்ரோஸாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் குறிப்பாக ஆபீஸ் கோப்புகளைக் கட்டுப்படுத்தும் தகவல் உரிமை நிர்வாகம் பல கேள்விகளை எழுப்புகின்றது. முதலில் இது என்ன என்று பார்க்கலாம்;

தஉநி யின் படி ஆபீஸ் 2003ல் வடிக்கப்படும் கோப்புகளுடன் அவற்றைக் கையாளும் உரிமைகளும் பொதிக்கப்படும். இதன் மூலம் அனுமதியில்லாத ஒருவர் அந்தக் கோப்பைத் திறக்க முடியாது. இதை நடைமுறைப்படுத்த அலுவலகங்கள் முதலில் வின்டோஸ் 2003 இயக்குதளத்திற்கு மாற வேண்டும். அலுவலகத்தில் ஒரு வழங்கியாவது வி2003ல் இயங்கினால்தான் அனுமதிகளை நடைமுறைப்படுத்த இயலும். கோப்பைத் தயாரிக்கும் ஊழியர் அதனுடன் அந்தக் கோப்பை யார் கையாளலாம் எந்த அளவில் (உதாரணமாக அவரும் அவரது மேலாளரும் அதை மாற்றியமைக்கலாம், ஆனால் சக ஊழியரால் அதைப் பார்வையிடத்தான் முடியும். அவர்கள் குழுவிற்குச் சம்பந்தமில்லாத ஒருவர் அதைத் திறந்துபார்க்கக் கூட முடியாது). அலுவலகங்களில் நடைமுறை இரகசியங்களைப் பாதுகாக்க இது நல்ல வழி. காகிதத்தில் நிர்வகிக்கப்படும் அலுவலகங்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் செயல்படுகின்றன. (குமாஸ்தா மேசையைப் பூட்டிவிட்டுப் போனபின் கடைநிலை ஊழியர் அதில் இருக்கும் தாளைப் பார்க்கமுடியாது). இது அலுவலங்கள் திறமையான முறையில் செயல்பட கட்டாயம் உதவும். இதுநாள் வரை இத்தகைய பாதுகாப்பு மின்வெளியில் இல்லாமல் இருந்தது. தனிப்பட்டு அனுப்பப்படும் மின்னஞ்சல்களை எந்தவிதத் தடயமும் இல்லாமல் நகலெடுத்துப் பிறருக்குக் கடத்துவது தகவல் பெருவெளியில் சர்வசாதாரண நடவடிக்கை. இதனால்தான் பல நிறுவனங்கள் தாளில்லா அலுவலகங்களாக மாற தயக்கம் காட்டி வந்தார்கள். மைக்ரோஸாப்டின் புது தஉநி பல அலுவலகங்களால் அவசியம் வரவேற்கப்படும்.

ஆனால் இது தனது வாடிக்கையாளர்களின் திறனை உயர்த்த மாத்திரம் மைக்ரோஸாப்டால் வடிவமைக்கப்பட்டதா எனச் சந்தேகம் வருகிறது. முதலில் தொழில்நுட்ப ரீதியில் ஒன்றும் இது அப்படிச் சிக்கலானதும் புதுமையானது இல்லை. வழங்கியன்றின் அடிப்படையில் கோப்புகள் நிர்வகிக்கப்படுவது எப்பொழுது யுனிக்ஸ் உலகில் சர்வசாதாரண காரியம். இதனுடன் கூட கோப்புகளை சங்கேதமாக்க உதவும் 128-பிட் சங்கேதக் கணக்குகளும் மின்னுலகில் உலவுகின்றன. தஉநி புது மொந்தையில் அடைக்கப்பட்ட பழைய கள்தான் (அல்லது கலக்கல்) என்பதில் சந்தேகம் இல்லை. இனி சில சந்தேகங்கள்;

1. அலுவலகம் தஉநிக்கு மாறவேண்டுமானால் அது ஒட்டுமொத்தமாக ஆபீஸ்2003க்கும் வின்டோஸ்2003க்கும் மாறியாக வேண்டும். அலுவலில் இருக்கும் ஒரு கணினி விடாது எல்லோரும் ஜோதியில் ஐக்கியமாக வேண்டும். இது மைக்ரோஸாப்ட்க்கு நல்ல வியாபார உத்தி. கடந்த சில வெளியீடுகளாகப் ஆபீஸ் செயலிகளை நிலை உயர்த்திக்கொள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது (ஆபீஸ் 2000 கையாளப்பட்ட வேகத்தைக் காட்டிலும் ஆபீஸ் எக்ஸ்பி அவ்வளவு விரைவாக வரவேற்கப்படவில்லை). எனவே, இது கையை முறுக்கி எல்லோரையும் 2003 வாங்க வைக்க அற்புதமான வழி.

2. இதை மேலும் திறமையாகச் செயல்படுத்த நடப்பில் இருக்கும் ஆபீஸ் செயலிகளால் 2003 கோப்புகளின் தஉநி விளையாட்டில் பங்கு பெற முடியாது. உதாரணமாக ஆபீஸ் 2000ல் வடிக்கப்பட்ட கோப்புகளை ஆபீஸ் 95ல் திறக்க முடியும். ஆனால் இனிமேல் இந்தப் பாச்சா பலிக்காது. மைக்ரோஸாப்ட் வரி ஆண்டாண்டுக்குச் செலுத்தப்பட்டால்தான் உங்கள் வேலை நடக்கும்.

3. இது நாள்வரை மைக்ரோஸாப்ட் வேர்ட் கோப்புகளை வேர்ட் பர்பெக்ட், சன்-னின் ஸ்டார் ஆபீஸ் அல்லது திறந்த ஆணைமூல ஒப்பன் ஆபீஸ் செயலிகளைக் கொண்டு திறக்கவும் மாற்றியமைக்கவும் முடிந்தது. இனிமேல் “மாம் ஏகம் சரணம் பஜ” என்று வைஷ்ணவர்கள் மாதிரி ஒட்டு மொத்த மைக்ரோஸாப்ட் சரணாகதி உய்வதற்கான ஒரே வழி

4. இதைத் திறக்க பிற நிறுவனங்கள் செயலிகளை எழுத முயற்சிப்பது அமெரிக்க அரசாங்கத்தின் பதிநூறாண்டு டிஜிட்டல் காப்புரிமை விதிகளுக்கு (Digital Millennium Copyright Act) புறம்பானது. எனவே, வேறு நிறுவனங்கள் எதுவும் இந்த விளையாட்டை விளையாட முடியாது. இதே போல வேறு விளையாட்டை பிற நிறுவங்கள் வடிவமைப்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும், மைக்ரோஸாப்ட் ஆபீஸ் செயலிகளுக்கு இருக்கும் தனிப்பெரும் சந்தைப்பங்கினால் இது நடைமுறையில் இயலாத காரியமாகிறது.

5. இது மாத்திரமல்லாது இப்பொழுது ஆபீஸ்2003 கொண்டு நீங்கள் வடிக்கும் கோப்பைத் திறக்க வருங்காலத்தில் மைக்ரோஸாப்ட் அனுமதி வேண்டும் என்று அவர்களால் மாற்றியமைக்க முடியும். அந்த பட்சத்தில், உங்கள் அலுவலகத்தின் பாதுகாப்பு அவர்கள் கையில்.

5. அதாவது, மைக்ரோஸாப்ட் டிஜிட்டல் தாளைக் கண்டுபிடிப்பதில் பெறு வெற்றியடைந்திருக்கிறது. இதனால் தகவல் நுட்பத்தில் சாத்தியமாகக்கூடிய தங்குதடையற்ற தகவல் பரிமாற்றத்தை தடுக்க வேண்டிய முட்டுக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இதானால், நான் தனி நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் தங்கள் டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாக்கும் உரிமையை முற்றாக இழக்க வேண்டும் என்று கூறவில்லை. இதற்கான வேறு வழிகள் இருக்கின்றன. திறந்த வடிவில் கிடைக்கும் சங்கேதச் செயலிகள் இதற்கு நல்ல மாற்று மருந்து.

உதாரணமாக, நான் என்னுடைய முக்கிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்பும் பொழுது அவற்றை சங்கேதப்படுத்தி அனுப்புகிறேன். இதற்குத் தேவையான GNU Privacy Guard இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதைக் கொண்டு கோப்பைச் சங்கேதப்படுத்தி அனுப்பினால் பெற்றுக் கொள்ளும் நபர் அதன் சிதையாமையை தனது செயலி கொண்டு உறுதி செய்து திறக்க இயலும். அதை திறக்கவும் மாற்றியமைக்கவும் அவருக்கு திறவெண் தேவை. (கிட்டத்தட்ட இந்த வழியில்தான் இணையத்தில் கடன்அட்டை எண்கள் கடத்தப்படுகின்றன. மின்வணிகம் இத்தகைய பாதுகாப்பை முற்றாக நம்பியிருக்கிறது. இதன் தொழில்நுட்பம் தீர்மானமாகச் சோதிக்கப்பட்டு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது).

அளவுக்கதிகமான ஏகபோகம் சமுதாயத்திற்கு நல்லதல்ல என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால வணிக உலகின் முதலைகள் பிடியில் தகவல் இருக்கும்வரை இதிலிருந்து தப்பிப்பது தினந்தோறும் அதிகச் சிக்கலாகி வருகிறது.