நேற்றைய இந்திய அரசாங்கத்தின் யாகூ குழுமம் தடையின் சூடு தணிவதற்குள் இன்று இணையத்தில் இன்னொரு சேவை நிறுத்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. வடஅமெரிக்கா, ஜப்பான் தவிர உலகெங்கிலும் தன்னுடைய (இலவச) அரட்டை சேவையை (chat) நிறுத்தப் போவதாக மைக்ரோஸாப்ட் அறிவித்துள்ளது. இலவசச் சேவை நிறுத்தம் என்பதுதான் எனக்கு முக்கியமான விஷயமாகப்படுகிறது. இலவச அரட்டைச் சேவைகளின் மூலமாகத் தங்கள் பாலியல் தேவைகளுக்குச் சிறார்களிடம் சிறார்புணர்ச்சி விரும்பிகள் வலைவிரிப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று மைக்ரோஸாப்ட் அறிவிக்கிறது. pedophile என்ற வார்த்தைக்குச் சரியான தமிழ்பதம் இருப்பதாகத் தெரியவில்லை. யோசிக்கும் பொழுது சிசுபாலர்கள் (சிசு+பால்+அர்) என்ற பதம்தான் தோன்றுகிறது.:). உலகெங்கிலும் இருக்கும் இந்த வெறியர்கள் பெரியவர்கள் துணையின்றி அரட்டையில் ஈடுபடும் சிறார்களை வேட்டையாட அரட்டை அரங்கங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (இலவச) அரட்டை சேவையை நிறுத்துவதன் மூலம் சிறார்களைக் காப்பாற்றுகிறோம் என்று மைக்ரோஸாப்ட் அறிவிக்கிறது.

ஒரு வழியில் பார்க்கப்போனால் இது சரியான முடிவுதான். பணக்கார நாடுகளில் பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது இயலாத காரியமாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் பெரும்பகுதி நேரத்தை இணையத்திலும், வீடியோ விளையாட்டுகளிலும் செலவிடுகிறார்கள். காப்பின்றி இணையத்தைப் பயன்படுத்தும்பொழுது அவர்கள் வெறியர்களிடம் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள்.

ஆனால் அரட்டை சேவையைக் குறைப்பதால் இது முற்றாக நின்றுவிடுமா? கட்டாயம் இல்லை. சிக்கல் என்னவென்றால், சிறார்கள் மைக்ரோஸாப்டை விடுத்து, பிற சிறிய சேவை வழங்கிகளிடம் போவார்கள். இருளுக்குச் செல்லும் அவர்களுக்குப் பொதுவிடத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும் அற்றுப்போகும். நான் மைக்ரோஸாப்டை பொதுவில் வெறுக்கிறேன். ஆனால் மைக்ரோஸாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் தேவை சில இடங்களில் அவசியமாக இருக்கிறது. இணையத்தில் சிறுவர்கள் பாதுகாப்பு அதில் ஒன்று. மைக்ரோஸாப்டுக்கு இருக்கும் பண, ஆள், தொழில்நுட்ப பலங்களைக் கொண்டு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது எளிது. இதைத் தொடர்ந்து, யாகூ, ஏஓஎல் போன்ற நிறுவனங்களும் தங்கள் அரட்டை சேவைகளை நிறுத்தும் (இவை ஏன் மைக்ரோஸாப்டைப் பின்பற்றும் என்று பின்னர்). தங்களை ஒத்த சிறுவர்களுடன் இணையத்தின் வழி தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் பணக்காரச் சிறுவர்களுக்கு இருக்கிறது (முன்னர் சொன்ன அதே பெற்றோர்களுக்கு நேரமின்மை காரணம் முக்கியமான ஒன்று). இந்நிலையில் அவர்கள் தரம் பற்றிய சிந்தனை ஏதுமில்லாத நிறுவனங்களை நாடத் தொடங்குவார்கள். அது கட்டாயம் இதைவிட மோசமான அழிவைத்தான் தரும்.

இன்னொருவகையில் சேவை நிறுத்தம், தொழில்நுட்பத் தடை என்பவை எந்தக்காலத்திலும் எந்தப் பிரச்சனைக்கும் முற்றான தீர்வாக இருக்கப்போவதில்லை. தொழில் நுட்பம் வேறுவகையில் வடிவெடுத்துக் கைகளைத் தேடிவரும். இது சமூகப் பிரச்சனை, இதற்குத் தீர்வு தொழில்நுட்பத் தடையில் இல்லை.

மைக்ரோஸாப்டின் இந்த அறிவிப்பிற்கு முக்கியமான காரணங்கள் சில. 1. நஷ்டத்தில் நடந்துவரும் அதன் MSN மற்றும் தொடர்புள்ள இணையச் சேவைகள், 2. வருங்காலத்தில் தங்கள் சிறார்கள் மைக்ரோஸாப்ட் அரட்டை அரங்கத்தின் வழியாகத்தான் சோரம் போனார்கள் என பெற்றோர்கள் வழக்குத் தொடுக்கலாம் என்ற அச்சம். 3. வருங்காலங்களில் உடனடி செய்தி (Instant Message) சேவையை தன்னுடைய இயக்குதளத்தில் இணைத்து அதை வர்த்தக நிறுவனங்களுக்கான கருவியாக மாற்ற மைக்ரோஸாப்ட் முடிவெடுத்துள்ளது, இந்நிலையில் இலவசச் சேவை அதற்குத் தடையாக இருக்கும். இவற்றை நேர்மையாக ஒத்துக் கொண்டு, வணிக ரீதியாக இது சாத்தியமில்லாமல் போகிறது எனவே நிறுத்துகிறோம் என்று சொல்லும் தைரியம் இல்லை. இதற்கு சிசுக்காவலை முன்னால் நிறுத்துகிறார்கள். இதில் ஒரு வசதி இருக்கிறது, இதை யாரும் எதிர்க்க முடியாது. எதிர்ப்பவர்கள் சிறார்களின் நலனுக்கு எதிரிகளாக முத்திரை குத்தப்படுவார்கள். உண்மையில் தன்னிடம் இணைச் சேவை பெறுபவர்கள் (அவர்கள் குழந்தைகள் உட்பட) தொடர்ந்து அரட்டை வசதியைப் பயன்படுத்த முடியும் என்கிறது மைக்ரோஸாப்டின் அறிவிப்பு.

உடனடி செய்திச் சேவை வழங்கலில் கொடிகட்டும் மும்மூர்த்திகள், ஏஓஎல், யாகூ, மைக்ரோஸாப்ட். இதே நஷ்ட நிலையில்தான் யாகூ, ஏஓஎல் இரண்டும் இருக்கின்றன. மைக்ரோஸாப்ட் பூனைக்கு மணி கட்டியிருக்கிறது. இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு விரைவில் இவை இரண்டும் சிசுக்காவல் பணியை சிரமேற்கொள்ளும்.

எல்லாமே வியாபாரம்தான் என்று ஆகிவிட்ட நிலையில் பொய் சொல்லாமல் வியாபாரம் நடத்தலாமே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது.