இன்றைக்கு மைக்ரோஸாப்ட் புதிய செய்திச் சேவையைத் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட கூகிள் செய்தியைப் போலவே இருக்க்கிறது. இதன் மூலம் மைக்ரோஸாப்ட் கூகிளுடன் நேரடியாக மோதத் தொடங்கியிருக்கிறது. கூகிளின் செய்திச் சேவைக்காகச், சிறிய ரன்கள் (இயந்திரனின் சுருக்கம் – ஆங்கிலத்தில் Bot என்று அழைக்கிறார்கள்) இணையத்தில் அலைந்து செய்திகளைச் சேகரிக்கின்றன. இவற்றை திரட்டிகள் (aggregators) என்று விளிக்கலாம். திரட்டிகள் தொடர்ச்சியாக தி ஹிந்து போன்ற நாளிதழ்கள், வீக் போன்ற சஞ்சிகைகள், பிபிஸி போன்ற தொலைக்காட்சி/வானொலி செய்திகள், ஸ்லாஷ்டாட் போன்ற இணையச் செய்திக் குழுக்கள் எல்லாவற்றையும் சல்லடை போட்டு செய்திகளைக் கொண்டுவருகின்றன. பின்னர் கூகிள் எந்த அளவிற்கு அந்தச் செய்திகள் தற்சமயம் பிரபலமாக இருக்கின்றன, பிரபலமான, நம்பகமான ஊடகங்களில் அவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெருகின்றன என்று ஆராய்ந்து அவற்றை வரிசைப்படுத்துகிறது. பின்னர் செய்திச் சேவையில் அவை கிரமப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன. மேம்போக்காகப் பார்த்தால் மைக்ரோஸாப்ட் ரன்களும் இதைப்போலத்தான் செயல்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் கூகிள் ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியது, இதன் துணையுடன் உலாவி இல்லாமலே நீங்கள் இணையத்தைத் தேட முடியும். அடிப்படையில் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியைப் பயன்படுத்தும் இக்கருவியை நேரடியாக உங்கள் மேசைத்தளத்திலிருந்தே இயக்கலாம். இதன் வழியே வழமையான இணையத் தகவல்கள், செய்திகள், பங்குச் சந்தை நிலவரம் இவற்றுடன் கூட ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களையும் தேடமுடியும். இது செய்திக்காகவும், தகவல்களுக்காகவும் இணையத்தைத் தேட உலாவியைத் திறக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுவிக்கிறது. இந்த வகையில் இது மைக்ரோஸாப்ட்க்கு ஒரு சவால்தான்.

இன்றைக்கு செய்திச் சேவையைத் துவங்கியதன் மூலம் கூகிளும் மைக்ரோஸாப்டும் நேரடியாக மோதத் தொடங்கியிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னால்கூகிளை விலைபேச மைக்ரோஸாப்ட் முயற்சி செய்வதாக செய்திகள் வந்தன. இப்படியான செய்திகள் அடிக்கடி வருபவைதான் என்றாலும் மைக்ரோஸாப்ட் கூகிளை இன்னொரு நெட்ஸ்கேப் ஆக்க முயற்சிப்பது கண்கூடாகத் தெரிகிறது.