அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் டாக்டர் ஸ்டூவர்ட் மெலோய் கண்டுபிடித்திருக்கும் உள்ளீடு (implant) புரட்சிகரமானதுதான். அதைக் கண்டுபித்தவுடன் அவர் உலகெங்கும் இருக்கும் பெண்களின் முக்கிய தேவையைத் தான் நிவர்த்தி செய்துவிட்டதாகவும் இதை அடைய பெண்கள் அளவற்ற ஆர்வம் காட்டப்போவதாகவும் கற்பனை செய்துகொண்டார். ஆனால் இது சோதனைக்குத் தயாராகியிருக்கும் இந்த நேரத்தில் இதை முயற்சித்துப் பார்க்க (பெரும்பாலும் முயற்சித்துப் பார்த்தல் இலவசம், சில சமயம் பணம் கூடக் கொடுப்பார்கள். இந்த மாதிரி சோதனைகளுக்குப் பலிகடா வேலையை மேலை நாடுகளில் பலர் தொழில் ரீதியாகச் செய்துவருகிறார்கள். ரொம்பச் சுலபம்; புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்தை முயற்சி செய்துபார்க்கத் தயார் என்று சொல்ல வேண்டியது. அவர்கள் மருந்தைக் கொடுத்து, சோதனையில் பங்கேற்கப் பணத்தையும் தருவார்கள். இப்படி பொடுகு ஒழிப்பு மருந்து, முகப்பரு நீக்கி என்று பல மருத்துவ, அழகுசாதனங்களுக்குத் தங்களை உடன்படுத்திக் கொண்டால், உடம்பை அசைக்காமல் காலம் தள்ள முடியும்). அப்படி என்ன புரட்சி, டாக்டர் மெலோய் கண்டுபிடிப்பில்? அவர் ஒரு சிறிய உள்ளீட்டை தண்டுவடத்திற்கு அருகில் அறுவை செய்து பதித்துவிடுவார். பின்னர் அந்த உள்ளீட்டை மென்மையாக நெருடிவிட்டால் போதும் பெண்ணுக்குக் கலவி இன்பத்தில் உச்சகட்ட சுகம் கிடைக்கும். (ஆங்கிலத்தில் orgasm என்று சொல்வதற்குத் தமிழில் நான் வார்த்தை தேடிக்கிடைக்காமல் முற்றின்பம் என்று பெயரிட்டிருக்கிறேன்).

முற்றின்பம் கிடைக்காமல் ஐந்தில் இரண்டு பெண்கள் வருத்தத்தில் மெலிந்துபோவதாகவும், அதனால் அது உளவியல் ரீதியாக அவரக்ளைப் பாதித்து அவர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளில் மனம் ஒன்றமுடியாமல் வாழ்வில் தோல்வியிருவதாகவும் மேலை நாடுகளில் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாகள். இந்த நிலையில் இந்த உள்ளீடு இவரக்ளுக்கு ஒரு அரிய வரப்பிரசாதம் என்று மெலோய் நினைத்திருந்தார். அவருடைய கண்டுபிடிப்பைக் களச்சோதனைக்கு உட்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமையத்திடம் பல சிக்கல்களுக்கு இடையில் அனுமதியும் பெற்றார். ஆனால் இப்பொழுது சோதனைக்கு உட்பட தேவையான எண்ணிக்கையில் பெண்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார். தலையில் தேய்த்துக் குளிக்க, முகத்தில் அப்பிக்கொள்ள என்று பல சோதனைகளுக்குத் தயாராக இருப்பவர்கள் கூட “முதுகில்தொட்டு முற்றின்பம் காணத்” தயாரில்லை.