இன்றைக்கு Nature என்ற முன்னனி அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை என்னைக் கவர்ந்திழுத்தது. சாதாரண காகிதத் தாளை ஒத்த அமைப்பில் கணினி (மற்றும் பிற மின்சாதனங்களுக்கான) விழியத் திரை இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் பிலிப்ஸ் (ஆமா, நம்ப ஊர்ல ரெண்டு பாண்ட் டிரான்சிஸ்டர் விப்பாங்களே, அவுகதான்) ஆராய்சிக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட இது ஒரு சராசரி தாளைப் போலத்தான் இருக்கும், ஆனால் இதில் சலனப்படங்களைப் பார்க்க முடியும்.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் இ-இங்க் என்னும் நிறுவனம், மின்துளைபரவல் (electrophoresis) என்னும் கருத்தின் அடிப்படையிலான மின்தாள்களைத் தயாரிப்பதைப் பற்றி அறிவித்தது. இம்முறையில் நேர் மற்றும் எதிர் மின்தூண்டலுக்கு உள்ளாகும் நுண்துகள்கள் தாளின் (பாலிமர் பரப்பு) மேற்பரப்பை நோக்கி இழுக்கப்பட்ட, பரப்புக்கு அருகில் வரும் கருப்புத் துகள்களினால் தாளில் எழுத்துக்கள் உருவாகிறது. எழுத்துக்களின் அமைப்பை கணினித் திரைகளை இயக்கும் விடியோ இயக்கி (video driver) மூலம் இயக்க, தாளில் மாறுபடும் எழுத்துக்களை அச்சிடமுடியும் என்று நிரூபித்தார்கள். இம்முறையைப் பயன்படுத்தினால், ஒரு முழுப் புத்தகத்தை (கம்பராமாயணம் முழுக்க) ஒரு தாளிலேயே அடக்கிவிட முடியும்.

ஆனால் இம்முறையைக் கொண்டு அதிவேக மாறுபாடுகளைக் கொண்ட சலனப்படங்களைக் காட்டமுடியாது. இதற்கு முக்கிய காரணம், மின்துளைபரவல் மிகவும் மெதுவான செயல் (கிட்டத்தட்ட மில்லிநொடிகள் தேவை). இன்றைக்கு பிலிப்ஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவின்படி வண்ணத்தில் சலனப்படங்களைத் தாளில் காட்டுவது சாத்தியமாகியிருக்கிறது. இது அடிப்படையில் மின்ஈரமாக்கல் (electrowetting) என்னும் கருத்துப்படி அமைந்தது. இம்முறையில் துகள்கள் (தின்மப்பொருள்கள்) கிடையாது. இது எண்ணைய் போன்ற திரவத் திட்டில் நிறங்களைக் கொண்ட பல்வேறு சாயங்கள் (dyes) நகர்ந்து பரப்புக்கு வருவதால் சாத்தியமாகிறது. தின்மத் துகள்களைக் காட்டிலும், திரவங்களை மிக எளிதில் நகர்த்தலாம். மேலும் இத்தகைய இயக்கம் மின்துளைபரவலைவிட வேகமாக நிகழ்கிறது.

பிலிப்ஸ் விஞ்ஞானிகள் இம்முறையைப் பயன்படுத்தி மூவண்ணத் திரை (தாள்திரை) இயக்கிக்காட்டியிருக்கிறார்கள். நெருக்கமாக அமைக்கப்பட்ட துணைபடக்கலம் (subpixel) மூன்றில் அடிப்படை நிறங்கள் மூன்றையும் மின்ஈரமாதல் முறையில், வெவ்வேறு விகிதங்களில் தாளின் மேற்பரப்புக்குக் கொண்டுவர நெருங்கிய இவை கலவையாகி நம் கண்ணுக்குப் பல வண்ணங்களையும் காட்டுகின்றன. (இதே முறையில்தான் தற்பொழுது மடிக்கணினிகளில் திரவப்படிகங்கள் (liquid crystal, LCD) அமைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் மூன்று வேறு துணைபடக்கலங்கள் இருப்பதால் நேர் குத்தாகப் பார்க்காமல் கண்களைச் சாய்த்துப் பார்க்கும்பொழுது இடமாற்றுத் தோற்றப்பிழை (parallax error) ஏற்படுகிறது. புதிய கண்டுபிடிப்பில் சாயங்கள் எல்லா கோணங்களிலும் பிரகாசமாக இருப்பதால் இந்தப் பிழை தவிர்க்கப்படுகிறது).

இது அடிப்படை ஆராய்ச்சி முடிவுதான், இதிலிருந்து தொழில்நுட்பமாக வடிவெடுத்துக் கருவியாக பரிணமிக்க நிறைய நாட்கள் ஆகலாம். ஆனால், ஆய்வக நிலையிலேயே இது நடைமுறைத் தொழில்நுட்பத்தைவிட மேம்பட்டதாக நிகழ்த்திக் காட்டப்பட்டிருப்பது விரைவில் சந்தைக்கு வரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

வந்த உடன் ஒன்று வாங்க வேண்டும். கழிவறை, படுக்கை, சாப்பாட்டு மேசை, மார்க்கெட்டிங் சந்திப்புகள், காலை இரயில் பயணம் என்று தினசரிக்கு ஒன்றுக்கு மேல் தேவைப்படும் என்றுதான் தோன்றுகிறது.

Hayes, R. A. & Feenstra, B. J. Video-speed electronic paper based on electrowetting. Nature, 425, 383 – 385, doi:10.1038/nature01988 (2003). Article