இந்த மாதம் திசைகளை இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இணையப் பத்திரிக்கைக்கு மாத வெளியீடு மிகவும் பொருத்தமற்றது. இணையம் என்ற இந்தத் தகவல் ஊடகத்தின் வெற்றி இரகசியமே அதன் வேகம்தான். ஜெயலலிதா ஹிந்து ஊழியர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் அது படங்களுடனும் நிபுணர்களின் கருத்துக்களுடனும் இணையத்தின் வழியே என் வீட்டுக்கு கதவைத் தட்டுகிறது. இப்படியிருக்க மாதம் முழுவது மாறாமல் இருக்கப்போகும் பக்கங்களைப் படிக்க இப்பொழுது என்ன அவசரம் என்று தள்ளிப் போடத்தான் தோன்றுகிறது. இந்தச் சிக்கல் அச்சில் வரும் சஞ்சிகைகளுக்குக் கிடையாது ஏனென்றால் அவற்றை இரயில் வண்டிக்கும், கழிப்பறைக்கும் கூடவே எடுத்துச் செல்ல முடியும். காலத்தை வெல்லும் இணையச் சஞ்சிகைகளால் இடத்தை வெல்ல முடியவில்லை. இந்த நிலை விரைவில் மாறி எல்லோரும் செல்பேசியில் சஞ்சிகைகளைப் படிக்க அருளுமாறு உங்களுக்குப் பிடித்தமான இஷ்ட தேவதைகளிடமோ, சாமியார்களிடமோ வேண்டிக் கொள்ளுங்கள்.

இனி. மாலனின் ஜெ.ஜெ. சில குறிப்புகளைப் பற்றிய இரண்டு கருத்துகள். (இதில் இருக்கும் பல விஷயங்களைப் பற்றி நான் பேசப்போவதில்லை). இதை எழுதுவதன் மூலம் இரண்டு ஜெக்களில் எவரையும் நியாயப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது.

முதலாவது ஜெயலலிதாவுக்கும் ஜெயமோகனுக்கு ஆணவம் பொதுக் குணம் என்று வரையறுக்கிறார் மாலன். இருந்துவிட்டுப் போகட்டும். எல்லோருக்கும் ஆணவத்தை வைத்துக்கொள்ளும் திறமையைப் பரிணாமமும், உரிமையை இந்திய அரசியல் சட்டமும் வழங்குகின்றன. சிக்கல் அந்த ஆணவம் பிறர்மீது அம்பாகப் பாயும்பொழுதுதான். ஜெ2 வின் ஆணவம் அதிகபட்சம் காகிதத்தில் மையாகவோ, மைக்கில் நாராசமாகவோ, இணையத்தில் எலெக்ட்ரானாகவோ தோன்றி இடம்பெயர்ந்து, மாறி அழிந்துபோகும். ஆனால் ஜெ1-ன் ஆணவம் அப்படியல்ல. அது பலரைத் தீய்த்திருக்கிறது. (சமீபத்தில் தி ஹிந்து). எனவே, இது தனிமனிதனின் பிரச்சனை கிடையாது. இரண்டையும் அப்படி ஒன்றாகக் காட்டியிருப்பது சரியாகத் தோன்றவில்லை.

இரண்டாவது, ஜெ2 ஞானக்கூத்தன் கருணாநிதியுடன் கைகுலுக்கும்போது ஏற்பட்ட புளகாங்கிதத்தைச் சாடியிருப்பது பற்றியது. மாலன், ஜெ2-வும் ஒரு சமயத்தில் வேறு ஒருவரது (மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் மஹாராஜபுரம் சந்தானத்தின்) அண்மையில் மெய்சிலிர்த்துப் போனதாக எழுதியதைச் சுட்டியிருக்கிறார். எனவே, ஞானக்கூத்தன் கருணாநிதியின் தொடுகையால பரவசமடைந்தது எந்த விதத்திலும் இழிவல்ல என்று உணர்த்துகிறார். ஞானக்கூத்தனின் புளகாங்கிதத்திற்கும் அதை அவர் வெளிப்படுத்திய விதத்திற்கும், ஜெயமோகனின் பரவசத்திற்கும் அதை அவர் எழுத்தில் வடித்ததற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

மஹாராஜபுரத்தின் அண்மை தன்னைப் பரவசப்படுத்தியது என்று ஜெ2 அவர் முகத்திற்கு முன்னால் சொன்னதாகத் தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கும் வகையில் இது ஜெ2 மஹாராஜபுரத்தின் மறைவிற்குப் பிறகு எழுதியது. மறைந்துபோன ஒரு இசைக்கலைஞனுக்கு மரியாதை செலுத்துவது “மாண்புமிகு” ஒருவரின் முகத்திற்கு எதிரே துதிபாடப்பட்டதற்கு எப்படி ஒப்பாகும் என்று புரியவில்லை. உயிருடன் இருந்தாலும் மஹாராஜபுரம் ஜெ2வின் புகழுரைக்கு ஈடாக என்ன செய்திருக்க முடியும்? ஒரு எழுத்தாளனைப் புகழ்ந்தால் அவன் கைமாறாக வேறிட்டத்தில் என்னுடைய முதுகைச் சொறிந்துவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன (கிட்டத்தட்ட நம்முடைய எழுத்தாளர் குழுக்களெல்லாம் இப்படித்தானே செயல்படுகின்றன) அல்லது அவனைத் தூற்றினால் அவன் பேனா வேறிடத்தில் என்னைக் குத்திக் கிழிக்கக் கூடும். மேடைப் பேச்சாளரும் அப்படியே. போற்றப்பட்டவன் சினிமா நடிகனாக இருந்தால் குறைந்தபட்சம் அவனுடைய படத்தில் எழுத்தாளரின் புத்தகத்தைக் காட்டியோ அல்லது அவன் புத்தகத்தைப் பற்றி பேசியோ விற்பனையை உயர்த்திக் கொடுத்துக் கைமாறு செய்ய சாத்தியங்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக, கையளவு சீதனங்களைப்பற்றி எழுதும் தன்னுடைய கவிதைகளுக்கெல்லாம் ஆதர்ச குரு இன்னார்தான் என்று தன்னுடைய இரசிக சிகாமணிகளுக்குச் சொல்லி அவர்கள் உடலை மண்ணுக்குக் கொடுக்கும் போது சுண்டு விரலாவது இவரைச் சேரவேண்டும் என்று உணர்த்தலாம்.

கர்நாடக இசைப் பாடகர் ஒருவரைப் பற்றி உயர்த்திப் பேசிய ஜெ2வின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று மாலன் நினைக்கிறார்? அந்த அற்பஜீவி ஜெ2வைப் பற்றி தன்னுடைய கச்சேரியில் ஒரு வார்த்தைகூடப் பாடமுடியாது. (எனக்குத் தெரிந்து கிருபானந்தவாரியார்தான் உள்ளூரில் தங்கியிருக்கும் புரவலரைப் பற்றி ஒரு வார்த்தையாவது தன்னுடைய சொற்பொழிவில் புகுத்திவிடுவார்). ஆனால் எதிர்ப்புறத்தில் ஞானக்கூத்தன், கலாப்பிரியா போன்றவர்கள் ஒரு அரசியல்வாதியை மேடையில் முன்வைத்துத் துதிபாடுவதன் நோக்கம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

இதே ஞானக்கூத்தன் குழுவினர் ஒரு தீவிர இலக்கிய மேடையில் கருணாநிதியின் இலக்கியப் பெருமைகளை முன்வைத்துப் பேசியிருந்தால், ஏன் எதையுமே உருப்படியாகப் பேசாமல் அந்த மேடையில் “நான் ஒரு நாள் கருணாநிதியைன் கையைத் தொட்டேன், அப்பொழுது தோன்றிய மின்னதிர்வுகளில் பரவசமானேன்” என்று பேசியிருந்தால் அவரது புரிதல்களை விமர்சிப்பவர்கள்கூட அவரது நோக்கங்களைச் சந்தேகிக்க மாட்டார்கள். அந்த மேடையில் நடந்தவைகளைப் பற்றிக் கேட்கும்போது காலம் காலமாக, “நான் ஏழை, என்னுடைய வயிறு முதுகுடன் ஒட்டியிருக்கிறது, உன் முகத்தைப் பார்க்கையில் என் பசி மறந்து போகிறது, ஆனால் வீட்டிற்குப் போனவுடன் எனக்குப் பசிக்கும், என் அடுக்களையில் இருக்கும் பூனைக்குட்டியைத் துறத்த ஆன்ற உதவிகளை நான் கேட்காமலே நீ புரிவாய் எனத் தெரியும்” என்று வேண்டி நிற்கும் புலவர்கூட்டமாகத்தான் அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரியும். இந்தக் கையேந்தி சாபத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு விமோசனமே கிடையாது போலிருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் தொடங்கி பெரியார்வரை ஜெயமோகனின் புரிதல்கள் தவறாக இருக்கலாம்; அவர் வெளிப்படுத்தும் விதம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில் நடந்திருக்கும் அவலத்தை நியாயப்படுத்துவது நேர்மையாகத் தோன்றவில்லை. மாலனின் கட்டுரையில் வரிசையில் நின்று முகத்துக்கு எதிராகத் துதிபாடியது தவறு என்று பொருள்படும்படியாக ஒரு வரி எழுதிவிட்டு ஜெ2=ஜெ1 என்று நிறுவ முற்பட்டிருந்தால் அவரது நேர்மையைப் பாராட்டலாம்.

இதைத் தொடர்ந்து மாலன் விரைவில் கருணாநிதி ஜெ2வை கபோதி என்று பாடியதற்கும், இளையபாரதி ஜெ2வை நபும்சகன் என்று விளித்தற்கும் ஏதாவது நியாயங்களை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாமா? அல்லது குறைந்த பட்சம் “கலைஞர் விஸ்வரூபம் கொண்டு காலடி எடுத்துவைத்தால் ஜெ2 எங்கே போயிருப்பார்” என்று தொனிக்க சக எழுத்தாளனைப் பற்றிய கொலை மிரட்டலை பகிரங்கமாக அறிவித்த இளையபாரதியிடம் வருத்தத்தையாவது காட்டுவாரா?