அதிவேகமாக வளர்ந்துவரும் லினக்ஸ் நிறுவனங்கள் மூன்றில் ஒன்று மாண்ட்ரேக் லினக்ஸ் (ரெட் ஹாட், சுசி மற்றவை). இந்த லினக்ஸ் நிறுவனங்கள் எல்லாமே தளையறு மென்கலன் அல்லது திறந்த ஆணைமூலம் கொள்கைகளில் இயங்குபவை. இவற்றின் ஆதாரக்கூறு வெளியிடப்படும் அனைத்து மென்கலன்களுடனும் கூடவே அதன் ஆணைமூலங்களையும் திறந்த வடிவில் வெளியிட்டாக வேண்டும் என்பது. ஆணைமூலங்களையே வெளியிடும்பொழுது அவற்றின் தயாரிப்புகளை எப்படிப் பதுக்கிவைப்பது. எனவே, இவை தாங்கள் வணிக ரீதியில் விற்கும் அதே தயாரிப்புகளை அவர்களது இணைய தளங்களிலிருந்தே இலவசமாக இறக்கிக் கொள்ள வசதியை வைத்திருக்கின்றன. தங்கள் விளைபொருள்களை இலவசமாகக் கொடுத்துவிட்டு இவர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள்?

1. இவர்கள் இலாபத்திற்குத் தயாரிப்புகளை (இயக்குதளம், மென்கலன்) நம்பியிருக்கவில்லை. சேவையைத்தான் நம்பியிருக்கிறார்கள். உதாரணமாக கணினியில் இயக்குதளத்தை நிறுவ உதவி, சந்தேகங்களுக்குத் தொலைபேசி வழியாக உதவி, போன்றவற்றின் மூலம் இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.

2. இதைத் தவிர, நிறுவனங்களுக்கு அதிக அளவில் மென்கலன்களை நிறுவ, இயக்க, அது தடையின்றி செயல்பட ஆள்பலத்தைத் தருகிறார்கள்.

3. தங்கள் தயாரிப்புகளைத் திறம்பட இயக்க பயிற்சியளிக்கும் பள்ளிகளை நடத்துகிறார்கள்.

இப்படிப் பலவழிகளில் நேர்மையாக, விளைபொருளுக்கு அதிக விலை வைத்து விற்காமல் (அல்லது விற்கமுடியாமல்) தங்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள். சொல்லப்போனால் புள்ளிவணி குமிழி உடைந்துபோன இந்த நாட்களில் இவர்கள் ஒரளவுக்குக் கௌரவமாகவே இருக்கிறார்கள். இவர்களில் மாண்ட்ரேக்தான் சற்று தள்ளாடும் நிலையில்; கிட்டத்தட்ட மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் இருக்கிறது. இருந்தபோதும், அதன் தயாரிப்புகள் அதிவேகமாக வளர்ந்துவருகின்றன. இன்றைய நிலையில் தனிநபர் பயன்பாடுகளுக்கு லினக்ஸைத் தயார்படுத்தியதில் மாண்ட்ரேக் முக்கிய இடத்தை வகிக்கிறது.

சமீபத்திய முடிவின்படி வரவிருக்கும் வெளியீட்டில் சேர்க்க விளம்பரங்களை நாடியிருக்கிறது மாண்ட்ரேக். இயக்குதளம் கணினியில் நிறுவப்படும் சமயத்தில், உலாவில் இருக்கும் புத்தகக் குறிகளில், உலாவியின் முதல்பக்கமாக வர்த்தகங்களின் இணையதளமாக மாற்றுவதில் என காசுக்கு இடத்தைத் தருவதாக அது வாக்களிக்கிறது. இந்த முடிவு இணையத்தில் மிகவும் சூடாக விவாதிக்கப்படுகிறது. விளம்பரங்களை மாண்ட்ரேக் உள்ளடக்கக்கூடாது அது எங்களுக்கு எரிச்சலூட்டும் என சிலர் சொல்கிறார்கள். எந்தவிதமான விளம்பரங்கள் அதில் வரும் என்பதில் பலருக்கும் எதிர்ப்பார்ப்புகள்/கவலைகள். இணையத்தை உலாவையில் துள்ளியெழும் கீழ்க்கண்ட விளம்பரங்களின் அடிப்படியில் என்னுடைய கற்பனையை ஓட்டுகிறேன்;

1. இதுபோன்ற துள்ளியெழும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமா? எங்கள் தயாரிப்பை நாடுங்கள்!

2. சிறியதைக் கண்டு உங்கள் மனம் சோம்பிப்போகிறாதா? மீட்சி இதோ; நீட்டிக்கும் களிம்பு!!

3. சுய எழுச்சி உங்கள் கரங்களில்!! மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வயாகரா வேண்டுமா? எங்களிடம் உங்கள் கடன் அட்டை எண்களைக் கொடுங்கள்.

4. ஈர்க்கிடை நுழையா கொங்கைகளுக்கு எங்கள் மருத்துவரின் வலியில்லா சிலிக்கோன் உள்ளீடுகள்.

5. உலகை அடக்கியாளும் மென்கலன்களை எழுத மைக்ரோஸாப்டின் டாட்நெட் கருவிகள், நேரடியாக மைக்ரோஸாப்டிடம் இருந்தே!

6. இதுபோன்ற லினக்ஸ் வெளியீடுகளைப் பயன்படுத்துவதற்காக நீங்கள் ஒருநாள் வருந்த வேண்டியிருக்கும், உடனடியாக கப்பம் கட்டுங்கள் – ஸ்கோ நிறுவனம்.

இந்த பூகம்பத்திற்குப் பதிலாக மாண்ட்ரேக் தனது தயாரிப்புகளில் ஏற்கனவே விளம்பரங்கள் இருப்பதாகவும், இதனால் யாரும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை/எரிச்சலடையவில்லை என்றும் கூறுகிறது. ஏற்கனவே, தனது நிறுவனத்தைப் பற்றிய சுயவிளம்பரம், தளையறு மென்கலன்கள், மென்கலன் குறித்த புத்தங்கள் போன்றவற்றைப் பற்றிய விளம்பரங்கள் இருந்துவருகின்றன. இந்த முறையை நாங்கள் நெறிப்படுத்துகிறோம். இதை விளம்பரப்படுத்தி நிறுவனத்திற்குப் பணம் சேர்க்கிறோம் என்று கூறுகிறது. மேலும் விளம்பரங்களை ஒத்துக்கொள்ளும்பொழுது அவற்றின் தகுதியும் மனதில் கொள்ளப்படும் என்று சொல்கிறது.

இது எனக்கு மிகவும் நியாயமாகப்படுகிறது. இது அவர்கள் தயாரிப்பு, இதை நீங்கள் இலவசமாகப் பெறுகிறீர்கள், இந்நிலையில் ஒரு சில விளம்பரங்களை நீங்கள் பொறுத்துக் கொள்வதில் இருக்கும் சிரமம் தவிர்க்க முடியாதது. மாண்ட்ரேக்கின் இந்தச் செயல்பாடு நேர்மையானது. விளம்பரங்களை முற்றிலும் தவிர்த்த மென்கலன்களை நீங்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளவும் அது வழிசெய்கிறது. தளையறு மென்கலன் கொள்கைப்படி ஆணைமூலங்கள் திறந்த வடிவில் இருக்க வேண்டும். அதைச் செயல்வழிப்படுத்த நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பது தவறில்லை, நேரடியான விளம்பரம் மிகவும் நேர்மையான விஷயம்.

இணைய விளம்பரங்களில் முதலிடம் வகிப்பது இழிகாமப் படங்கள்தான். மாண்ட்ரேக் காசு வாங்கிக்கொண்டு அதை அனுமதிக்க வேண்டும், அப்பொழுதுதான் எங்கள் வேலைக்கு நடுவே நாங்கள் பயமின்றி நேர்மையாக நீலப்படங்களைப் பார்க்க முடியும் என்று சிலர் ஜொள்ளழுக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் :).