இந்திய மொழிகளில் மின்னூலாக்கத் திட்டங்களில் முதன்மையானது மதுரைத் திட்டம். தற்சமயம் இரு நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ம.தியினால் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நானே கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளை நண்பர்களுக்கு விநியோகித்திருக்கிறேன் (வட அமெரிக்காவில் யாருக்காவது தேவைப்பட்டால் எழுதவும். அனுப்பி வைக்கிறேன்). தற்பொழுது அதிகார்வபூர்வமற்ற முறையில் மதுரைத் திட்டத்திற்கு பகிர்வுப் படிதிருத்தமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் சேர எல்லோரையையும் நான் அழைக்கிறேன். பலபேர்கள் மதுரைத் திட்டத்திற்குப் பங்களிக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் தமிழ் தட்டச்சுவதில் திறமை குறைவு, நேரமின்மை என்று பல காரணங்களைக் காட்டி அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள். இவர்கள் குறைந்தபட்சம் பகிர்வுப் படிதிருத்தம் மூலமாக பங்களிக்க முடியும்.

நண்பர் டாக்டர் குமார் மல்லிகார்சுனன் நடத்தும் இத்திட்ட முகவரிக்குச் செல்லுங்கள். உங்களை ஒரு பங்களிப்பவராகப் பதிவு செய்து கொள்ளுங்கள். மதிய உணவு இடைவேளை, இரவு படுக்கைக்குச் செல்லுமுன் என ஒரு நாளின் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு பதினைந்து நிமிடத்தை இதற்கு ஒதுக்குங்கள். மேலே அலகிடப்பட்ட பக்கங்களின் ஒளிவடிவம், கீழே எழுத்துணரி மூலம் தமிழாக்கப்பட்ட உரைக்கோப்பு எனத் தோன்றும் இதில் மேலே இருப்பதைப் பார்த்துக் கீழே படிதிருத்துவது மிகவும் எளிதான செயல். இப்படி பத்து நண்பர்கள் ஒரு நாளைக்கு நான்கு பக்கங்களைத் திருத்தினால் பத்து நாளில் நானூறு பக்கங்கள் மின்னூலாக்கப்படும்.

இதைப் படித்த யாராவது இப்படி முயற்சி செய்கிறேன் என்று சொன்னால், நான் மிகவும் சந்தோஷமடைவேன். நான் தற்சமயம் பழைய வழியிலேயே (என்னிடம் தமிழ் எழுத்துணரி இல்லை) டொராண்டோ பல்கலைக் கழகத்தில் இருக்கும் சில நூல்களைத் தட்டச்சி வருகிறேன்.

அருமையான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பவர் முனைவர் குமார் மல்லிகார்ச்சுனன். இவரும் முனைவர் கல்யாணசுந்தரமும் துவக்ககாலம் முதல் மதுரைத் திட்டத்தை திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். தமிழ் உலகம் இவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.