மடல் இலக்கியத்தைப்பற்றி நண்பர் பத்ரி வலைக்குறித்திருக்கிறார் . தமிழ் செவ்விலக்கியத்தில் மடல் இலக்கியம் ஒரு முக்கிய கூறு.

நிறைவேறாத காதலுக்கு கடைசி முயற்சியாக மடலேற்றம் நடந்திருக்கிறது. மடலேறுவேன் என்று பயமுறுத்துவது வரை அகத்திணையாகக் கருதப்படும். ‘மடல்மா கூறும் இடனுமார் உண்டே’ – தொல்காப்பியம்

ஆனால் மடலேறிவிட்டால் அது பெருந்திணை (புறம்) மாறிவிடும்

“ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” – தொல்காப்பியம்

இப்படி அந்தக் காலத்தில் பொத்திவைத்திருக்கும் வரைதான் அது புனிதமான காதலாகக் கருதப்பட்டது, அது வீதிக்கு வந்தால் இழிகாமம் என்று இகழப்பட்டது. என்றாலும்

காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி

என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

திருமங்கையாழ்வாரின் பெரியதிருமடல் சிறியதிருமடல் இரண்டும் சுவாரசியமானவை. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த வேறொரு மடலாசிரியர் இருக்கிறார், அவரைப்பற்றி வரும் நாட்களில் எழுத உத்தேசம்.