எண்ணங்களால் இயந்திரங்களை இயக்குதல்

இப்படி குரங்கிற்குக் கணினி திரையில் உதவி செய்ய, குரங்கின் இயக்கத்தால் கணினி கற்றுக்கொள்ள ஒருவருக்கொருவர் ஒத்திசையும் இணக்கம் தோன்றுகிறது. எனவே அவைகளுக்கு (அவர்களுக்கு??) இடையே புரிதல் அதிகரிக்கிறது. இதன் அடுத்த கட்டம் தொடுகை உணர்வை கணினிகளுக்குப் புரியவைத்தல். இதற்காக வடிவமைக்கப்பட்ட சோதனையில் குரங்குகள் இருட்டில் அமர வைக்கப்பட்டன. பின்னர் திரை உயர்த்தப்பட்டு அவற்றின் முன்னால் ஒரு தட்டில் வைக்கப்பட்ட பழம் ஒன்றைக் காட்டினார்கள். குரங்குகளின் கைகளில் தொடுகையுணரிகள் (touch sensors) பொருத்தப்பட்டிருந்தன. எந்த அளவு அழுத்தம் கொடுத்தால் இயந்திரனினி கையைக் கொண்டு பழத்தை பிடித்து எடுக்கலாம் என்று குரங்குகள் கற்றுக் கொண்டன. இதற்கு உதவி செய்வதற்காக குரங்குகளின் கையில் பதிக்கப்பட்ட சிறிய கம்பிகளின் மூலம் அவற்றுக்கு அதிர்வுகளை அளித்து தொடுகையின் அழுத்தம், பழத்தின் மிருதுதன்மை போன்றவை உணர்த்தப்பட்டன. அதிசயிக்கத்தக்க வகையில் குரங்குகள் வெகுவிரைவில் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டன.

பார்வை வழி உதவியும், தொடுகை உணர்வும் பழக்கப்படுத்தப்பட விரைவில் குரங்குகள் இயந்திரனின் கையைத் தன்னுடைய மூன்றாவது கையைப்போல அசைக்கப் பழகிக் கொண்டன. தொடர்ச்சியான ஆய்வுகளில் குரங்கின் கைக்கு ஊசிபோட்டு அதை மரத்துப் போகச் செய்தார்கள். இந்த நிலையில் குரங்குக்கு கையில் எந்தவிதமான உணர்வும் இல்லாமல் போக அது எண்ணங்களின் ஓட்டத்தால் காரியங்களைச் செய்யக் கற்றுக் கொண்டது (அதாவது கையைப் பயன்படுதாமல் மூளையில் இருக்கும் நியூரான்களை மாத்திரமே பயன்படுத்தி இயந்திரங்களை அவற்றால் இயக்க முடிகிறது.

இந்தச் சோதனையின் உச்சகட்டம் இதுதான்; மரத்துபோன கையைப் பயன்படுத்த முடியாமல் போகும் குரங்கு அந்த இடத்தில் இயந்திரத்தைக் கொண்டு தனக்குத் தேவையானதை சாதித்துக் கொள்கிறது. ஆய்வின் இந்த முக்கியமான கட்டம் இப்பொழுது துவக்க நிலையில்தான் இருக்கிறது. இது முழுமையாகச் சாத்தியமானால் பாரிச வாயுவினால் செயலிழந்துபோனவர்களும், விபத்தில் செயலிழந்துபோன முத்துப்பாண்டி போன்றவர்களும் பயிற்சிகளுக்குப் பின் தங்கள் மூளையைப் பயன்படுத்தி ஒரு இயந்திரக் கையை தங்கள் சொந்தக் கையைப்போலவே பாவிக்கக் கற்றுக்கொள்ள முடியும்.

இந்தச் சோதனைகளில் முக்கிய பங்கு வகிப்பது மூளை-இயந்திரன் இடைமுகம் (Brain-Machine Interface, BMI). முற்றிலும் மின்னணுச் சாதனங்களால் ஆன ஒரு பெட்டி இது. இதற்குக் ஹார்வி பெட்டி எனப் பெயர். தொடர்ச்சியான ஆராய்வுகளினால் இந்தப் பெட்டியின் திறன் படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்பொழுது 100க்கும் மேற்பட்ட நியூரான்களைத் தொடர்ச்சியாக அளந்து அதன்மூலம் கணினியின் அசைவுக் கணிப்பு திறனை உயர்த்த முடிகிறது. ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் ஐம்பது முதல் தொன்னூறு வரையான நியூரான்களை அளந்தால்கூட இயக்கங்களை நூறு சதவீதம் கணிக்க முடிகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். விலங்குகளின் மூளையில் மில்லியன் கணக்கில் நியூரான்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு நூறு நியூரான்களை அளந்தாலே போதும் என்பது வடிவமைக்கப்படும் கருவியின் சிக்கலைக் குறைக்கிறது. அதிகச் சிக்கலில்லாமல் குறைந்த பட்ச ஊடுருவல் மாத்திரமே போதும். இதைத் தவிர மூளையில் ஒரு சிறிய பகுதி சேதமின்றி இருந்தாலே போதும், நோயாளியின் இயக்கத்திற்கு இயந்திரங்கள் மூலம் உதவலாம் என்பதும் ஆறுதல் அளிக்கிறது.

இந்த சோதனையில் இன்றைய அறிவியல் துறைகளின் பல எல்லைகளும் ஒன்று சேருகின்றன. முதலில் மூளை அறுவை முறைகள். இன்றைய மருத்துவத்தில் அதிகம் முன்னேற்றம் தேவைப்படும் துறை மூளை அறுவை சிகிச்சைகள்தான். நமக்கு மூளையின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்த விஷயம் மிகவும் குறைவு. இன்னொரு புறம், வளையக்கூடிய, உறுதிமிக்க, அதிமெல்லிய நியுரான் உணரிகளை வடிவமைத்தல், இதற்கு டெ·à®ªà¯à®³à®¾à®©à¯ பூசப்பட்ட கம்பிகள் பெரிதும் உதவுகின்றன. கம்பிகளில் உண்டாகும் சன்னமான மின்னழுத்தங்களை பிழையின்றி அளக்கும் ஹார்வி பெட்டி மின்னணுவியலின் உன்னதம் என்றே கூறலாம். அளக்கப்பட்ட மின்னழுத்தங்களை வகைப்படுத்தல், அலசல் அவற்றை இயக்கங்களுடன் ஒப்பிட்டு ஆராய்தல், பின்னர் மின்னழுத்தங்களைக் கொண்டு இயந்திரனின் கையை இயக்குதல் என்று கணினி, இயந்திரனியல் துறை வளர்ச்சிகளின் உச்சங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொழுது கணினியால் செய்யப்படும் எல்லா காரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு வன்கலன் சில்லை, நரம்புச் சில்லு (neurochip) வடிவமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இப்படிப் பட்ட சில்லை பாதிக்கப்பட்ட நோயாளின் தலையில் நேரடியாகப் பொருத்தி அதன் கட்டளைகளை இணைப்புகள் இல்லாமல் பரப்பி, இயந்திரனை இயக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆராய்சிகள் முழுமையாகப் பரிணமிக்கும் காலத்தில் ஒரு நரம்புச் சில்லை அறுவையின் மூலம் மூளையில் பொருத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளி இழந்த கைகளுக்குப் பதிலாக அதே திறனுடன் செயல்படக்கூடிய மூன்றாவது கையைப் பெற வாய்ப்பிருக்கிறது.

இயந்திரனியல் துறை அதிவேக வளர்ச்சியடைந்து வருகிறது. மனிதனால் இயலாத பல காரியங்களை இயந்திரன்களைக் கொண்டு செய்து முடிக்கிறார்கள். உதாரணமாக, அதி வெப்பநிலையில் இருக்கும் இயந்திர பாகங்களைக் கையாளுதல், சிக்கலான இடங்களில் புகுந்து காரியத்தை நிறைவேற்றுதல், மனிதக் கைகளால் செய்யமுடியாத அதிநுட்ப காரியங்கள் (உதாரணமாக மிகவும் சிறிய துளையுள்ள ஊசியில் நூலைக் கோர்த்தல்) போன்றவற்றை இப்பொழுது இயந்திரன்களைக் கொண்டு முடிக்கிறார்கள். ஹோண்டா, சோனி போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட மனிதனை ஒத்த வடிவில் இயந்திரன்களை வடிவமைத்து வயதானவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும் உதவும் திறனை அளித்து வருகிறார்கள். இயந்திரன்களின் வடிவில் நம் உடலமைப்பை விட சிக்கலான வடிவங்களைக் கொண்டுவருவதன் மூலம் சில காரியங்களை எளிதாகச் செய்து முடிக்கலாம், உதாரணமாக, எல்லா திசைகளிலும் சுழலும் முழங்கை இணைப்பை இயந்திரன்களுக்கு எளிதில் தரமுடியும். என்றாலும் இத்தனை வளர்ச்சிகளையும் தாண்டி படைக்கப்படும் இயந்திரன்களின் கைகளின் இரண்டு வயதுக் குழந்தைக்கு இருக்கும் லாவகம் இன்னும் வரவில்லை. இதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறார்கள்.

இந்த ஆய்வில் இயந்திரன்களின் வடிவ முன்னேற்றமும் அதை இயக்க மனித மூளையும் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் உன்னதங்களைப் பெற்ற மனிதனுக்கு (மனித மூளைக்கு), திறமையான ஒரு ஆயுதத்தை (மூன்றாவது கை) தருவதன் மூலம் இன்னும் பல காரியங்களை செய்யமுடியும். இவை எல்லாவற்றையும் விட பல்வேறு விதமான இயந்திரங்களையும் இணைப்புகள் இல்லாமல் எண்ணங்களால் கட்டுப்படுத்தும் சாத்தியங்கள் கற்பனையின் எல்லைகளையும் விரிக்கின்றன.

– – –