அவருடைய கட்டுரைப் பற்றி நான் எழுதியதற்கு நண்பர் ரூமியின் பதில் ராயர் காபிகிளப்பில் இன்றைக்குக் கிடைத்தது.

என்னுடைய பதிலை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டு பாராட்டியிருக்கிறார். அவருடைய நேர்மையும் தெளிவும் எனக்கு அவர்மேல் மரியாதையை அதிகரிக்கின்றன. வீண்சண்டைகளும், வெட்டி விவாதங்களும் அதிகரித்துப் போன இந்த நாட்களில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நினைப்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அச்சமாக இருக்கிறது. இதே அச்சம்தான் என்னை அவருடைய தமிழோவியம் கட்டுரைக்கு உடனடியாகப் பதிலெழுதாமல் தாமதிக்க வைத்தது.

இன்று காலை (இதெல்லாம் எங்கள் கனடா நேரம்), கிளப்பில் என்னுடைய வலைக்குறிப்பைப் படிக்க முடியவில்லை என்று எழுதியிருந்தார். மதியம் அவருடைய கடிதம் வந்திருக்கிறது. எனவே, கொஞ்சமும் தயக்கமில்லாமல் படித்தவுடனேயே அவர் பதிலெழுதியிருக்கிறார். நல்ல இலக்கியவாதியான ரூமி என்னுடைய மதிப்பில் மிக நல்ல மனிதராகவும் உயர்ந்திருக்கிறார். பல சமயங்களில் நண்பர்களை நாம் இப்படித்தான் அடையாளம் காண்கிறோம்.

அவருடைய கடிதம்;
அன்புள்ள வெங்கட் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், வணக்கம்.

வெங்கட்டின் ‘ப்ளாக்’கை படித்துவிட்டேன். (‘ப்ளாக்’ என்பதற்கு என்ன தமிழ் என்று வெங்கட்தான் சொல்லவேண்டும்) என்னென்னவோ செய்து இப்போதுதான் படித்தேன். என் பதில் :

நான் எழுதிய கட்டுரைக்கு பதில் என்பதாக உங்கள் கட்டுரையை நான் நினைக்கவில்லை. தமிழில் அறிவியல் சொற்கள் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் எழுதி நாங்கள் புரிந்து கொள்ள என் கட்டுரை ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளது என்பதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். ரொம்ப அற்புதமான கட்டுரை. உங்கள் அனுபவமும், திறைமையும் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. நான் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருக்காவிட்டால் உங்களது கட்டுரை கிடைத்திருக்குமா?!

என் கட்டுரையில் என் முக்கியமான அல்லது பிரதானமான வருத்தம் அல்லது கோபமே தமிழ்ப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு தமிழைப் படுத்துபவர்கள்மீதுதான். அதோடு சிந்தனை நமதாக இல்லாத பட்சம், ஏன் மற்றவருடைய சிந்தனையை தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற கேள்வியும் கேட்டுத்தான் இருந்தேன். அதற்கு நீங்கள் சொல்கின்ற விளக்கம் என் வாதத்தோடு முரண்படுவதாக நான் நினைக்கவில்லை. ஒருவேளை என் நிலைப்பாட்டை நான் இன்னும் சரியாகச் சொல்லவில்லையோ என்னவோ.

ஒருவருடைய சிந்தனையைப் பற்றி அல்லது ஒட்டி நாம் மறுபடி சுயமாக சிந்திக்கும்போது அது நம்முடைய சிந்தனையாகத்தான் ஆகிவிடுகிறது. அதன்பிறகு அதற்கான சொற்களை உருவாக்க முயல்வதில் தவறு ஒன்றுமில்லை. இந்த வகையில் அறிவியல் சொற்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். நம்முடைய சிந்தனை என்ற விஷயத்தின் நீட்சி எங்கெல்லாம் வரும் என்பதைப் பற்றி நான் குறிப்புகூட கொடுக்காமல் விட்டுவிட்டது தவறாகப்புரிந்து கொள்ளக் காரணமாக அமைந்து போயிருக்கலாம். இந்த வகையில், inflation என்பதற்கு பணவீக்கம் என்பதை வரவேற்கத்தான் வேண்டும். ஏனெனில் அது நம்முடைய சிந்தனையாகிவிட்டது. அது நம்மையும் அன்றாடம் பாதிக்கின்ற பிரச்சனைகளில் ஒன்றாகிப் போனதாலோ என்னவோ சொல்லும் அழகாக வந்து விழுந்துவிடுகிறது.

ஆனால் ‘சூபர்ஹெட்ரோடைன்’ என்பதற்கு ‘கலக்கிப்பிரித்தல்’ என்பது ஒரு எளிமையான சுருக்கமான விளக்கமாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அது ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் என்ற அந்தஸ்துக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன். Floppy Disk போன்ற வட்டுகளைப் பற்றி நீங்கள் சொல்வது ரொம்ப சரி.

நிற்க. ரோஜாவை ரோஜா என்று சொல்ல முடியாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் தமிழ்த் தூய்மை என்ற பெயரில், வடமொழிக் கலப்பெல்லாம் கூடாது என்று சொல்லி, வேண்டுமென்றே ‘ரோசா’ என்று சொல்வதற்கும் எழுதுவதற்கும்தான் எனது ஆட்சேபம். அதற்காகத்தான் “இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி சொன்னதை உதாரணம் காட்டினேன். மற்றபடி ‘ச’வின்மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. நான் ‘ஜ’வை எவ்வளவு விரும்புகிறேனோ அதே அளவு ‘ச’வையும்தான் நேசிக்கிறேன்! என்னுடயை எதிர்ப்பு உச்சரிப்பை நோக்கியதல்ல. உச்சரிப்பின் பின்னால் உள்ள, மொழியின் அழகுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் உள் நோக்கங்களின்மீதுதான்.

‘கார்’போல சுருக்கமாக எளிமையாக இருக்கும்போது நேரடியாகக் கையாளலாம் என்று நீங்கள் சொன்னதைத்தான் நண்பரே நான் கொஞ்சம் நீட்டி முழக்கி ஒரு கட்டுரையாகச் சொன்னேன்!
கடைசியாக ஒன்று : யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு எப்போதுமே கிடையாது. (இப்படிச் சொல்லிவிட்டதனால் மட்டும் சொல்வது உண்மையாகிவிடாது என்பது வேறுவிஷயம். ஆனால் நான் இப்போது அதிகபட்சமாக இதைத்தானே செய்ய முடியும்?) எனவே இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கவனமாக இருந்து சான்றோர் மரபைப் பின்பற்ற முயல்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

வெங்கட் இதுபோன்ற கட்டுரைகள், எதிர்வினைகள் இன்னும் நிறைய செய்வாரென்றால் நானும் ‘சிறுபிள்ளைத்தனமான’ கட்டுரைகள் — ஆனால் சான்றோர் மரபுப்படி — மேலும் எழுத காத்திருக்கிறேன்.

அன்புடன்
நாகூர் ரூமி