My blog configuration does not permit lengthy posts 🙂 So, Part -2 is here. ‘ரெண் நாள் தெருவுல ரத்தமா இருந்தது. மண்ணப் போட்டு மூடினாங்க. ஆனாக் கூட என் கண்ணு அந்த மண்ணுல சேப்பு தெரீதான்னே பாக்கும்…’ நிலமே அம்மியாக, தலையற்ற உடலே குழவியாக அக்ககுமாரனைத் தரையோடு தரையாக அனுமன் அறைத்த இடத்தில் குருதி தேங்கி நின்றதாம். இராவணன் அதைப் பார்க்க ஒண்ணாது கதறினானாம். எந்த அப்பனானால் என்ன? பிள்ளைப் பாசம் அவ்வளவு எளிதில் விடுமா?

‘இங்கியே இர்ந்தாக்க ஒரே னாபகமா வர்து சார்… அதான் காலி பண்ணிட்டு போய்ட்டோம். இத்தப் பாக்கச் சொல்லோல்லாம் ஒரே அழயா வருது’ எண்ணெய்க் கறையைத் தடவுகிறார். அவருக்கு அது பிள்ளை. ‘இது மேல சுண்ணாம்பு அட்சிடலாம் பாத்தா மன்சு வர்ல சார்… அப்புடியே உட்டாலும் பேஜாராவுது. அத்தான், வூட்ட வாங்கறவங்க இன்னாவே பண்ணிக்கட்டும்னு அப்புடிய உட்டுட்டோம்…’

ர்ர்ர்ர்ர்ர்ர் என்று காற்றில் லாரி ஓட்டிக்கொண்டு, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளை உள்ளே ஓடிவந்தான். என்னுள் இருக்கும் அப்பன் எதிரில் இருக்கும் அப்பனை உணர்ந்தான். அதுவரை என்னை அரித்துக்கொண்டிருந்த குடிகாரன் போன திசை தெரியவில்லை. அன்னியம் உடைந்தது. தன்னையறியாமல் அவரை அணைத்துக்கொண்டேன். தோளில் தட்டி, முதுகில் தடவி, மெளனமாக அவரை அமைதிப்படுத்த முனைந்தேன். இப்போதுதான் என் பிள்ளை ஒரு விபத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறான். எனக்குத் தெரியும் இதன் பரிமாணம். எனக்குப் புரியும் இந்த நிலை. அங்கே இருப்பது செங்கல்லும், சிமிட்டியும், வர்ணப் பூச்சும், கொஞ்சம் எண்ணெய்த் தடமுமா?

அது மற்றவர்களுக்கு. சில வினாடிகளுக்கு முன்வரை எனக்கும்.

>o0o< >o0o< >o0o< மனைவியைக் கவிதையாகப் பார்த்தான் பாரதி. கவிதையை மனைவியாகப் பார்த்தான் என்றாலும் பொருந்தும். … … … … சக்தி நிலையமே, நன்மனைத்
தலைவீ, ஆங்குஅத் தனிப் பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன் நிறை அனுபவம் ஆக்கி
உயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து
ஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள் புரிந்து……

(வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி..)

என்று சொல்லிக்கொண்டே போவான். மிகச் சாதாரணமான செய்திகளும் கவிதைக்குள் பயன் நிறை அனுபவமாகின்றன. அனுபவம் என்பது எப்போது பூரணம் ஆகிறது என்றால், அங்கே ‘தான்’ உணரப்படும்போது. இன்னொரு முறை. உணரப்படும்போது. அகம்பாவத்தில் எழும் தான் இல்லை இது. இது வேறு. மக்கள் அனுபவத்தை விளைவித்தால் அதைப் பரிபூரணமாக்குவது ‘தம்’. அது எண்ணெய்க் கறையானாலும் சரி; மழலைச் சொல்லானாலும் சரி. ‘தம் மக்கள்’ என்ற சொற்களை எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும் சொற்கூட்டம். அடுக்கிவைத்த செங்கல். உணர்ச்சியற்ற ஒலியன்.

நான் என் உலகிலிருந்து மீளும்போது கூட்டம் முடிந்து நன்றியுரை நடந்துகொண்டிருந்தது.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

* * *
இந்த எழுத்துடன் என்னால் ஒன்றிப் போக முடிவது எதனால் என்று யோசித்தேன். எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். முதலாவது மகனுக்கு இரண்டு வயதில் ஆஸ்துமா வந்தது. மருந்தின் வேலையால் அவனுக்குத் தூக்கம்போய் அவன் அதிதசக்தியுடன் ஒன்றரை நாள் கிட்டத்தட்ட தூக்கம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தான். சலிப்பில்லாமல், தூக்கமில்லாமல் விளையாடும் குழந்தையைப் பார்த்து நான் அழுதிருக்கிறேன்.
கண்ணுக்கு முன்னால் இருந்தால் ஹரியின் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்வேன்.