நேற்று தமிழ் ஈழப் பொருளாதார முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற தமிழ் கனேடிய தொழில்நுட்ப அரங்கிற்குச் சென்றிருந்தேன். இது மூன்று ஆண்டுகளாகக் கோடையில் நடந்து வரும் ஒரு வருடாந்தர நிகழ்வு. நாள் முழுக்க ஆறு வயதுச் சிறுமியர் தொடங்கி, தொன்னூறு வயதுப் பெரியவர்கள்வரை ஒன்றுகூடி அவர்கள் சமூகத்தில் நடந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தெரிந்து கொள்கிறார்கள். கணினிச் சேவை, உள்ளூர்த் தமிழ் தொலைக்காட்சி, நாளேடு நடத்துபவர்கள், இன்னும் மின் சாதனத் தயாரிப்பாளர்கள் எல்லோரும் அவர்கள் தயாரிப்புகளையும், சேவைகளையும் அரங்கிட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். இன்னொரு அறையில் கணினி வழி குறும்படத்திற்குப் பின்னனி இசைகோர்ப்பு, டிஜிட்டல் புகைப்படத் தொழில்நுட்பம், வரைபட உயிரூட்டம் (graphical animation) போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அல்லது கலைநுட்பத் தொழிஞர்கள் தங்கள் படைப்புகளைக்காட்டி மயக்குகிறார்கள். நாள் முழுவதும் தொழில்நுட்ப உரைகள் இன்னொரு அரங்கில் (நாளின் கடைசி உரையாக அடியேனுடைய “திறந்த ஆணைமூலம் – நம் சமுதாயத்திற்கான நன்மைகள்”).

புலம்பெயர்ந்தவர்கள் பெரிதும் தங்கள் இழப்புகளையும் கலைந்துபோன கனவுகளையும் (அல்லது கிடைக்காத ஜோதிகாவின் புதுப்படத்தையும், கிடைத்துவிட்ட ரகுமானின் புது இரைச்சலையும்) பற்றியே ‘பெனாத்திக்’ கொண்டிருக்க, இந்த அரங்கில் தொன்பட்டதெல்லாம் தன்னம்பிக்கை, நிகழ்காலச் சவால்களின் சமாளிப்புகள், வெற்றிகள், வருங்காலத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கல், என நம்பிக்கையூட்டும் விஷயங்கள்தான். டொராண்டோ நகருக்கான ஆயிரம் பக்கங்களினாலான தமிழர் வர்த்தக வழிகாட்டி நூல் வணிகம் வெளியிடுபவர் அடுத்த வருடம் இன்னும் நூறு விளம்பரங்களைக் கூட்டிக் கொள்ளமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். கலிபோர்னியாவிலிருந்து நண்பர் நவரூபராஜா தொலைபேசியில் பேச அதைத் தொலைக்காட்சி அறிவிப்பாளினி தனது செல்பேசியை ஒலிபெருக்கியில் பிடித்து அரங்கினுள் மறு ஒலிபரப்புகிறார். நவரூபராஜா அமைதி திரும்பிவரும் கிளிநொச்சியில் புலம்பெயர்ந்த தொழில்நுட்பவியலார் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள வன்னிடெக் கல்லூரியின் எதிர்காலக் கனவுகளை ஆர்வம் பொங்க விரித்துச் சொல்கிறார்.

சிறுவர் சிறுமியரும் கொண்டாடுகின்றனர். வருடம் முழுதும் தாங்கள் பாடுபட்டு வடிவமைத்த லெகோ பிளாக் ரோபோட்களை அரங்கினுள் பெருமிதம் பொங்க இயக்கிக் காட்டுகிறார்கள். வயது அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகத் தங்கள் நண்பர்களுடன் ரோபோ போட்டியில் திளைக்கிறார்கள். இறுதியாட்டத்தில் தோற்றுப்போன பத்து வயது சிறுவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. தோல்வி முழுவதுமாக அவனுடைது இல்லை. இன்னும் ஒரு கியரை வாங்கித்தராத அவனுடைய தந்தையும் அவன் இழப்பிற்குக் காரணம் என்று. வட அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையேயான இயந்திரனியல் போட்டியில் முதல்பரிசு பெற்ற ஒன்டாரியோ கல்லூரி மாணவன் ஆர்வம் பொங்கத் தன்னுடைய இயந்திரத்தின் வடிவமைப்பை விளக்க, இரண்டாம் வரிசையிலிருந்து எட்டு வயதுச் சிறுவன் கையுயர்த்துகிறான்; “Can you tell me, how many gears it has?”. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளூமுன் ஐந்து வயதுச் சிறுமி தன் சந்தேகத்தைக் கேட்கிறாள், “Can it carry any people on it?” – நிச்சயமாக, சமீப காலத்தில் எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையளித்த பெரிய நிகழ்வு இதுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று மணி சுமாருக்கு ஐந்து பேர் என்னுடைய உரையினை ஏற்பாடு செய்திருந்த ImagineTech நிறுவனத்தின் அரங்கிற்கு என் பெயரை விசாரித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் நான்கு பேர் பார்வை இழந்தவர்கள். கடந்த புதன்கிழமையன்று கனேடியத் தமிழ் வானொலியில் லினக்ஸ் பற்றிய என்னுடைய நிகழ்ச்சியைக் கேட்டு இரசித்துப் பாராட்டினார்கள். அவர்களில் ஒருவர் தான் Voice-Activated Linux PC யைப் பயன்படுத்துவதாகவும் அதன் மூலம் தகவல் தெரிந்து கொள்வதாகவும் கூறினார். அதுபோல பேச்சுவழி இயக்ககூடிய தமிழ்க் கணினி எப்பொழுது கிடைக்கும் என்று ஆர்வம் பொங்கக் கேட்கிறார். தமிழ் லினக்ஸின் தற்பொழுதைய நிலையையும் அது முன்னோக்கிச் செல்ல போதுமான தன்னார்வலர்கள் இல்லாதக் குறையையும் சொல்கிறேன். தமிழிலும் ஆங்கிலத்தில தனக்கு நல்ல புலமை உண்டு; தமிழில் speech to text என்ற பேச்சிலிருந்து ஆவணம் அச்சிடும் நிரலிகள் இல்லாததால் தன்னால் பங்களிக்க முடியாமை குறித்து வருத்தப்பட்டுக் கொள்கிறார். கஷ்டப்பட்டு அவருக்கு முன்னால் அடக்கிக் கொண்ட கண்ணீர் இப்பொழுது அதை மறுஉருவாக்கையில் என்னுடைய கணினி விசைப்பலகையில் தெரிக்கிறது.