ஜெயமோகன் – கருணாநிதி விவகாரத்தில் திசைகளில் மாலன் எழுதிய ஜெ.ஜெ.சில குறிப்புகள் என்ற கட்டுரைக்கு என்னுடைய எதிர்வினையை ஆதரிக்கிறார் நண்பர் பத்ரி.

இதே விஷயத்தில் காலச்சுட்டின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இவ்வாரத் திண்ணையில் எம்.வி. குமார் என்பவர் சொல்லியிருப்பதைப் போல இந்தக் கருத்தை ஜெயமோகன் முன்வைத்திராவிட்டால் நவீன இலக்கிய உலகில் இன்னொருவர் கட்டாயமாக இதையே சொல்லியிருக்கக் கூடும்; குறிப்பாக எழுத்தாளர் சுந்தர ராமசாமி. குமார் இந்த விவாதம் பரபரப்பாக்கப்படுவதைப் போல ஜெயமோகனால் துவக்கப்படவில்லை என்றும், அப்துல் ரகுமான் அசோகமித்திரன் மேடையிலிருந்த கருணாநிதியை முன்வைத்துப் பேசத்தொடங்கவில்லை என்று புலம்பியதன் எதிர்வினைதான் ஜெயமோகனிடமிருந்து வந்தது (யப்பா! ஒரே வாக்கியத்தில் நான்கு பெயர்ச்சொற்கள்) என்று தெளிவாகக் கூறுகிறார்.

அப்படியிருக்க இந்த இதழ் காலச்சுவடு இந்த ஜெயமோகன் – கருணாநிதி விவகாரத்தில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் பிற பத்திரிக்கைகளில் வந்த மேற்கோள்களைத் திரட்டி ஒரு வம்பு மேடைபோல வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

* * *
சொல்ல மறந்து விட்டேன். இது காலச்சுவடின் ஐம்பதாவது இதழ். இதை இளம்படைப்பாளிகளின் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் முழுவதும் படிக்கவில்லை.

காலச்சுவடுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.