இன்றைக்கு வெளியாகியிருக்கிற திசைகள் டிசம்பர் இதழில் ஆசிரியர் மாலன், என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். இதன் பின்புலம்:

நவம்பர் திசைகள் இதழில் மாலன் ஜெ.ஜெ. சில குறிப்புகள் என்ற தலைப்பில் ஜெயலலிதாவையும், ஜெயமோகனையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அதன் மீதான எனது கருத்துக்களை என்னுடைய வலைக்குறிப்பில் பதிந்திருந்தேன். சுருக்கமாகச் சொல்லப்போனால், அவர் ஜெயமோகனைப் பற்றி விமரிசித்தது தவறு என்று கருத்து தெரிவித்திருந்தேன். சில நாட்கள் கழித்து எதிர்வினையாக மாலனிடமிருந்து எனக்குத் தனிப்பட்ட கடிதம் வந்தது. அதில் என்னுடைய விமர்சனங்களுக்கு அவர் சில பதில்களைத் தெரிவித்திருந்தார். நான் அதை வலைக்குறிப்பில் பிரசுரிக்காமல் விட்டது அவருக்கு நியாயம் செய்வதாகாது என்று இன்றைக்கு எழுதியிருக்கிறார். அதைப் படிக்கக் கிடைத்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் உடனே அவருக்கு பதில் எழுதினேன். அவர் கடிதத்தை அனுப்பியது எனக்குத் தனிப்பட்ட அஞ்சலில் நான் தனிக் கடிதங்களுக்கு உரிய மரியாதை தருபவன். அவற்றைப் எழுதியவர் சுட்டியிருந்தாலேயழிய பொதுவில் பகிர்ந்துகொள்வது எனக்கு உடன்பாடானது அல்ல. அந்த வகையில் மாலன் எழுதியதை நான் பிரசூரிக்கவில்லை. மேலும் என்னுடைய வலைக்குறிப்பில் கருத்துகள் சொல்ல இடமிருக்கிறது. தன்னுடைய வாதங்களைப் பொதுவில் முன்வைக்க வேண்டுமென்றிருந்தால் மாலன் எளிதாக அவற்றை என்னுடைய விமர்சனத்தின் கீழேயே உள்ளிட்டிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் எனக்குத் தனி அஞ்சலில் எழுதியதால் அவர் கருத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டாமென விழைகிறார் என்று எடுத்துக் கொண்டேன். இதைத்தான் இன்றைய கடிதத்தில் அவருக்குச் சுட்டிக் காட்டினேன்.

கிட்டத்தட்ட அவரது கருத்துக்களை நான் இருட்டடிப்புச் செய்துவிட்டதைப் போல் தோற்றமளிக்கும் வகையில் அவர் எழுதியிருந்தது என்னை மிகவும் பாதித்தது. எனவே, அடுத்த நிமிடத்தில் நான் அவருக்கு விளக்கமளித்தேன். வியப்பூட்டும் வகையில் ஐந்தாவது நிமிடம் அவரிடமிருந்து பதில் வந்தது. என்னுடைய மௌனத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதாக எழுதியிருக்கிறார். மொத்தத்தில் இதற்குக் காரணம் எங்களுக்குக்கிடையே இருந்த தகவல் இடைவெளிதான் என இருவருக்கும் புரிந்துபோயிற்று.

எனக்கு எழுதியதை போலவே பத்ரியின் விமர்சனத்துக்கும் (அவரும் ஜெஜெ சில குறிப்புகள் மீது கிட்டத்தட்ட என்னுடைய கருத்துகளுக்கு ஒத்தவாறே எழுதியிருந்தார்) மாலன் தனி அஞ்சலில் பதிளலித்திருக்கிறார். அவற்றை பத்ரி உடனே தன் வலைக்குறிப்பில் உள்ளிட்டிருக்கிறார். நானும் சில நாட்கள் கழித்து அதைப் படித்தேன் படித்தவுடன் உடனே பத்ரியை “உங்களுக்கு வந்த தனிப்பட்ட அஞ்சலை நீங்கள் எப்படிப் பகிரங்கப்படுத்தலாம்?” ரீதியாக ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றிருந்தேன் (தள்ளிப்போட்டு மறந்து போயிற்று). இன்னொரு முக்கியமான விஷயம்; பத்ரி இது சம்பந்தமாக வலைக்குறித்த நாட்களில் அவருடைய தளத்தில் நேரடி கருத்துப் பறிமாறல் வசதி இல்லை. எனவே, மாலன் அவருக்குத் தனித்து எழுதினாலும் அது பொதுவான கருத்துதான் என்று பத்ரி எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு, எனவே தான் பத்ரிக்கு இதுபற்றி கேட்டு எழுதும் ஆர்வம் எனக்கு குறைந்துபோனது.

ஒருவழியாக மாலனுக்கு எனக்கும் இருந்த தகவல் இடைவெளி நீங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். மாலனின் தனிப்பட்ட அஞ்சலை இப்பொழுது நான் பொதுமைப்படுத்துகிறேன். இதன்மேலும் எனக்கு சில கருத்துக்கள் இருக்கிறது என்றாலும், இந்தத் திரியை மூடிவிட்டுப் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதே நல்லது என்று எனக்குத் தோன்றுவதால், மாலனின் வார்த்தைகளே இறுதியாக இருக்கும்.

அன்புள்ள வெங்கட்,

உங்களது வலைப் பூவில், திசைகளில் வெளியான எனது ஜெ.ஜெ. சில குறிப்புகள் குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தீர்கள். நன்றி.

உங்கள் கருத்துக்கள் மீதான எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன். முதலில் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன்.

கருணாநிதியோ, இளையபாரதியோ, அல்லது வேறு எவரேனுமோ, தடித்த வார்த்தைகளில், இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்தி, ஜெயமோகனையோ, அல்லது வேறு எவரையும், விமர்சனம் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது போன்ற பிரசினைகளில் என் நிலை என்பதை நான் ஏற்கனவே பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறேன். அண்மைக்கால உதாரணம்: நாச்சார் மட விவகாரத்தின் போது நான் தெரிவித்த கருத்துக்கள். அது குறித்த என் கடிதம் காலச்சுவடில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் நான் எழுதியிருந்த ஒரு வரி: “படைப்பாற்றலை சொந்த காழ்ப்புக்களுக்கு பயன்படுத்தும் அனைவரையும் நான் கண்டிக்கிறேன்” இதே கருத்தை திசைகள் ஜுலை இதழிலும் தெரிவித்திருக்கிறேன். (http://www.thisaigal.com/julyo3/Uessay3.html)

இனி உங்கள் பதிவுகள் பற்றி.

முதலாவது ஜெயலலிதாவுக்கும் ஜெயமோகனுக்கு ஆணவம் பொதுக் குணம் என்று வரையறுக்கிறார் மாலன். இருந்துவிட்டுப் போகட்டும். எல்லோருக்கும் ஆணவத்தை வைத்துக்கொள்ளும் திறமையைப் பரிணாமமும், உரிமையை இந்திய அரசியல் சட்டமும் வழங்குகின்றன. சிக்கல் அந்த ஆணவம் பிறர்மீது அம்பாகப் பாயும்பொழுதுதான். ஜெ2 வின் ஆணவம் அதிகபட்சம் காகிதத்தில் மையாகவோ, மைக்கில் நாராசமாகவோ, இணையத்தில் எலெக்ட்ரானாகவோ தோன்றி இடம்பெயர்ந்து, மாறி அழிந்துபோகும். ஆனால் ஜெ1-ன் ஆணவம் அப்படியல்ல. அது பலரைத் தீய்த்திருக்கிறது. (சமீபத்தில் தி ஹி஢ந்து). எனவே, இது தனிமனிதனின் பிரச்சனை கிடையாது. இரண்டையும் அப்படி ஒன்றாகக் காட்டியிருப்பது சரியாகத் தோன்றவில்லை.

தன்னைப்பற்றி ஒருவர் மிகை உணர்வு கொள்வதில் பல நிலைகள் இருக்கின்றன.

1.கர்வம், பீடு (Pride) 2. அகங்காரம் (Ego) 3இறுமாப்பு (contempt) 4.ஆணவம் (arrogance) இந்த நிலைகளுக்கு இடையே நுட்பமான வேறுபாடுகள் உண்டு. இவற்றில் ஆணவம் என்பது என்றைக்குமே ஆக்க பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆணவம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து என்னுடைய கட்டுரையில் கோடிகாட்டியிருக்கிறேன்.

ஜெயமோகனின் ஆணவம் மற்றவர்கள் மீது அம்பாகப் பாயவில்லை, காயப்படுத்தவில்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? தி.க.சியிலிருந்து சுந்தர ராமசாமி வரை பலருண்டு. பாதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் இருந்தால்தான் அது பொருட்படுத்தத் தக்கது என்று கருதுகிறீர்களா? எண்ணிக்கைதான் முக்கியமா?

இரண்டு ஜெ.க்களின் ஆணவத்திற்கும் பின்னுள்ள அடிப்படையான மனோபாவம் ஒன்றேதான். அது பன்முகத் தன்மையை (plurality/ diversity) நிராகரிப்பது. பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டவர்கள் ஜனநாயக உணர்வுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

1933ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பெர்லின் நூலகம் சூறையாடப்பட்டு , அங்கிருந்த புத்தகங்கள் வீதிக்குக் கொண்டு வரப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் ஃபிராய்ட் போன்ற யூத மேதைகளின் நூல்கள் மட்டுமல்ல, ஏர்னஸ்ட் ஹெம்மிங்வே, சிங்களர் லூயி, ஜாக் லண்டன் போன்றவர்களது படைபுக்களும் கொளுத்தப்பட்டன. இந்த சொக்கப்பனையை மேற்பார்வையிட்டு வழி நடத்தியவர், ஹிட்லரின் வலதுகரமான கோயபல்ஸ். Pluralityயை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆணவம்தான் இந்த எரியூட்டலுக்குப் பின்னிருந்த மனோபாவம். மேலே சொன்ன எழுத்தாளர்களின் படைப்புக்கள் மட்டுமல்ல, ஹெலன் கெல்லரின் படைப்புக்களும் கொளுத்தப்பட்டன. காரணம், அவர் உடல் ஊனமுற்றவர்கள் பூமிக்கு சுமை, அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்ற ஹிட்லரின் கருத்தைப் பொய்பித்துக் கொண்டிருந்தார்.

தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்ற இந்த மனோபாவம்தான் ஆணவம். Pluralityயை நிராகரிக்கும் ஆணவம் இரண்டு ஜெ.க்களிடமும் ஏராளமாக இருக்கிறது. எனவே pluralityயில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அதைக் காப்பற்றும் ஆர்வம் கொண்டவர்களுக்கு இரண்டு ஜெ.களையும் எதிர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.

ஜெயலலிதாவின் ஆணவம் பலரைத் தீய்த்துவிடக் கூடியது, ஆனால் ஜெயமோகனின் ஆணவம் அத்தகையது அல்ல என்று எழுதியிருக்கிறீர்கள். ஜெயலலிதா பதவிக்கு வரும் முன்னரே அவரிடம் ஆணவம் குடி கொண்டிருந்தது. (அவர் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த போது கலந்து கொண்ட கூட்டங்களில் மேடையில் ஒரே ஒரு நாற்காலி மட்டும்தான் போடப்படும்) ஆனால் அதை, இது தனிமனிதப் பிரசினை அல்ல என்று எண்ணி அவரை 1991ல் ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு, அவரது முதலாவது ஆட்சிக் காலத்தில் 100 அவதூறு வழக்குகளுக்கு மேல் பத்திரிகைகள் மீது சுமத்தப்பட்டன. அவரது முதலாவது ஆட்சிக்காலத்தின் தவறுகளைப் பொருட்படுத்தாமல், இரண்டாவது வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை இன்று நாங்கள் சந்தித்து வருகிறோம்.ஜெயலலிதாவால், இன்று தமிழகத்தின் ஜனநாயக அமைப்புக்களை அழித்து விட முடியவில்லை. ஆனால் அவற்றை சிதைக்க முடிந்திருக்கிறது.

இன்று ஜெயமோகனிடம் இன்று அரசியல் அதிகாரம் இல்லை.(Thank God) என்பது உண்மைதான். ஆனால் அறிவுலகின் மீது அதிகாரம் செலுத்தும் ஆசையின் காரணமாகத்தான் அவர் ‘அரசியல்’ செய்து கொண்டிருக்கிறார். சுந்தரராமசாமியின் நெருக்கத்தை இழந்த பிறகு, சுந்தரராமசாமியால் வெவ்வேறு காலங்களில், விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளானவர்களை ஜெயமோகன் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். சுந்தரராமசாமியை வசைபாடும் நாச்சார் மடக் கதையை வெளியிட்டதை எண்ணிப் பாருங்கள். சுந்தரராமசாமிக்கு எதிராக, தனக்கு சாதகமாக ஒரு அணியைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஜெயமோகனின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாததல்ல.ஜெயமோகனின் இந்த அரசியலுக்குப் பின் உள்ள ஆசை அறிவுலகில் அதிகாரம் பெறுவது.

அந்த ஆசையை இனம் கண்டு கொள்ளாமல், அலட்சியப்படுத்தினால், தமிழ் நாட்டு அரசியலில் ஒரு ஜெ. உருவானமாதிரி, தமிழ் அறிவுலகில் இன்னொரு ஜெ. உருவாவது நிச்சியம். ஜெயலலிதாவால், இன்று தமிழகத்தின் ஜனநாயக அமைப்புக்களை அழித்து விட முடியவில்லை. ஆனால் அவற்றை சிதைக்க முடிந்திருக்கிறது. அதே போல், தனது நெடிய மரபுகளையும், அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் உள்ளார்ந்த ஆற்றலையும் சார்ந்து நிற்கிற தமிழ் அறிவுலகை ஜெயமோகனால் அழித்துவிட முடியாது. ஆனால் சிதைவுகளை ஏற்படுத்த முடியும். He is an ominus sign

மறைந்துபோன ஒரு இசைக்கலைஞனுக்கு மரியாதை செலுத்துவது “மாண்புமிகு” ஒருவரின் முகத்திற்கு எதிரே துதிபாடப்பட்டதற்கு எப்படி ஒப்பாகும் என்று புரியவில்லை என்றும் எழுதியிருக்கிறீர்கள்

மறைந்து போன இசைக்கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமானால் அவரது இசையின் தரம், அதன் பின்னிருந்த கலை வெளிப்பாடு ஆகியவற்றை எழுதினால் போதாதா? தன்னைப் பற்றியும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டுமானால், அந்த இசையைக் கேட்ட போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டால் போதாதா? அவர்து முதுகை அரையடி தூரத்தில் இருந்து பார்த்ததை எழுதுவது, எம்,ஜி,ஆரின் சிவப்புத் தோலைப் பார்த்துப் புளகாங்கிதம் அடையும் ரசிகர் மன்ற மனோபவத்திற்கு ஒப்பானது. ஞானக்கூத்தனும் அதே மாதிரியான மனோபாவத்திற்கு உள்ளாகி இருக்கலாம்.

ஜெயமோகன் மகாராஜபுரத்தை ரசிக மன்ற மனோபாவத்துடன் சிலாகிப்பது, அவரது ரசிகர்களின் நல்லெண்ணத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ள. கருணாநிதியின் அபிமானிகள் நிறைந்த சபையில்அதே உத்தியை ஞானக்கூத்தன் பயன்படுத்தியிருக்கலாம். தன்னால் வெல்ல முடியாத பலவீனம் ஒன்றை மற்றவரிடத்திலும் இருப்பதைக் காணும் போது ஏன், தன்னுடைய பலவீனத்தை உயர்வாகவும் மற்றவரது பலவீனத்தை இகழ்ச்சியாகவும் கருத வேண்டும் என்பதுதான் என் கேள்வி.

இன்று கருணாநிதியிடம் ஆட்சி இல்லை. அடுத்த தேர்தலுக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. இரண்டரை வருடங்களில் அரசியல் எத்தகைய திருப்பங்களை சந்திக்கும் என்பது எளிதில் ஊகிக்கக் கூடிய ஒன்றல்ல. இன்று தமிழகம் உள்ள நிலையில், ஒருவர் தன்னைக் கருணாநிதிக்கு நெருக்கமாகக் காண்பித்துக் கொண்டால் அவர் கதி என்னவாகும் என்பதற்கு அண்மைக்கால உதாரணம் டாக்டர். பொன்னவைக்கோ. இந்தப் பின்னணியில் ஞானக்கூத்தன் தனக்குக் கருணாநிதி மீதுள்ள அபிமானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். காரணம் நீங்கள் கருணாநிதியை அரசியல்வாதியாகப் பார்ப்பது போல ஞானக்கூத்தன் பார்க்கவில்லை என்றே எண்ணுகிறேன். ஞானக்கூத்தன், அவரைப் பழந்தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவராகத்தான் பார்க்கிறார் என்று கருதுகிறேன். ஞானக்கூத்தனுக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் மீதுள்ள பற்று, ஆர்வம் அவருடன் பழகிய எல்லோருக்கும் தெரிந்தது.

தீவிர இலக்கிய மேடை, அதி தீவீர இலக்கியமேடை என்பதெல்லாம் மனதுக்கு மனம் வேறுபடுவை. subjective.

என்னுடைய திசைகள் கட்டுரையிலும், இங்கும் நான் வலியுறுத்துவது இதைத்தான்: இலக்கியத்தில் பன்முகத்தன்மை என்பது இயற்கையானது. சில குறிப்பிட்ட நம்பிக்கைகள், ரசனைகள், லட்சியங்கள் இவற்றின் அடிப்படையில் ஒரு பிரிவொடு தங்களை அடையாளம் கண்டு கொண்டவர்கள், மற்ற பிரிவுகளை பாராட்ட, அங்கீகரிக்க வேண்டாம். ஆனால் இத்தகைய பிரிவுகள் இயற்கையானது என்பதை ஏற்க வேண்டும். யாருடைய எழுத்து சிறந்தது என்பதை அந்தந்த genreஐ சேர்ந்தவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். அப்படி இல்லாமல், ஒருபிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவினரை இழித்துரைப்பது ஒருவகையான fundamentalism. அது pluralityயை நிராகரிப்பது.

அன்புடன்

மாலன்