‘பின்நவீனத்துவம் – ஜப்பானிய கழிவறைத் தொழில்நுட்பம் பற்றிய ஒரு ஆய்வு’ என்ற கட்டுரையை நான் எழுதியபோது அதிலிருக்கும் அதிகழிவறைகளை நம்புவதா இல்லையா என்று தெரியாமல் என்னிடமே பலர் சந்தேகம் தெரிவித்தார்கள். கிறுக்குத்தனமான சாதனங்களை உருவாக்குவதில் ஜப்பானியர்களுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை என்று சொல்லலாம். ஜப்பானில் வசித்தவரை வாரந்தோறும் அக்கிகபாரா போய் இப்படியான சாதனங்களை உடனுக்குடன் தரிசித்துப் புண்ணியமடைந்தது உண்டு.

usb_noodles.gifஇன்றைய வெளியீடு இதோ: USB-ல் இணைத்து இயக்கக்கூடிய நூடுல்ஸ் வேகவைக்கும் அடுப்பு!! இது அடிக்கடி பயணம் செய்யும் ஜப்பானிய சாதனப்பித்தர்கள் பசியால் வாடாமல் இருக்க உருவாக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வகையில் தட்டுத்தடுமாறி படித்ததில் இது தண்ணீரைக் கொதிக்கவைக்கத் தேவையான மின்சக்தியை மாத்திரமே USB வழியாகப் பெறுகிறது. இதில் சமையல் குறிப்பைப் படித்து தானாகக் கலக்கிவிடும் மோட்டார் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

toothbrush.gifநான் வலைக்குறிப்பைத் தொடங்கும் முன் கட்டாயம் இதைப்பற்றி யாரிடமாவது புலம்பியே தீரவேண்டும் என்று நினைத்த இன்னொரு சாதனம் உண்டு அது USB இணைப்பு கொண்ட பல் பிரஷ்!!! இதுவும் அவ்வழிதான்; பயனிக்கும் அதிபுத்திசாலிகள் பல்துலக்காமலே அலுவலங்களுக்கு வருவதைத் தடுக்க உருவான கருவி. இதிலிருக்கும் மோட்டார் கணினியிலிருந்து மின்சாரத்தைத் திருடி பளிச்சிடும் வெண்மையை அளிக்கிறது.

பிரஷைத் தயாரித்த நிறுவனத்திடம் எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. இதன் அடுத்த, முன்னேறிய வடிவத்திற்கு என்னுடைய யோசனைகள் (தமிழில் எழுதுவதால் எனக்குக் காப்புரிமை தராமல் திருடிவிட மாட்டார்கள் என நம்புகிறேன்).

1. மடிக்கணினியின் முதலாவது USB-ல் ஒரு webcamஐ இணைக்கலாம்

2. இரண்டாவது USBல் மேற்சொன்ன பளிச்சிடும் வெண்மை கருவி.

3. இரண்டையும் ஒட்டுமொத்தமாக இயக்கும் ஒரு மென்கலன். காமெராவைத் துலக்கப்படும் பல்லை நோக்கி சரியாக அமைத்துவிட்டு, காரியத்தைத் துவங்கப் பணித்தால் போதும்.

4. காமெராவில் பெறப்படும் பற்களின் தொடர் படங்களை ஒவ்வொரு நொடியிலும் மென்கலன் ஆராயலாம். Image processing உதவிகொண்டு பல்லின் தற்பொழுதைய நிறம் என்ன என்று அறியலாம்? இதற்கு பல்லின் அளவு, அழுக்கின் நிறம் போன்ற சில காரணிகளை மாத்திரமே ஆராய்ந்தால் போதும். பற்களைத் தவிர பயனரின் முகத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட மென்கலனைப் பணிக்கலாம்.

5. பல் நிறத்தின் மஞ்சள்தன்மைக்கு ஏற்ப பிரஷ் மோட்டாரின் வேகம் மற்றும் பல்லில் அது செலுத்தும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு அதிவேக servo motor தேவை.

6. தேர்ந்தெடுக்கப்பட்ட வெண்மையை பற்கள் அடைந்தவுடன் கருவியை நிறுத்தலாம்.

7. பற்களின் இறுதிப் படத்தை காமெராவில் நிறுத்தி, சேமிக்கலாம்.

8. சராசரி ஜப்பானிய இளைஞர்/இளைஞியை மனதில் கொண்டு மேற்சில பயன்பாடுகளை இணைக்கலாம்.

8அ. சேமிக்கப்பட்ட படத்தை, புளுடூத் கொண்ட அவரது செல்பேசிக்கு இணைப்புகள் இல்லாமலே மாற்றலாம்.

8ஆ. அந்தப் படத்தை அவரது ‘தொகொமோ'(DoCoMo – NTT Japan) இணைப்பு மூலமாக இணையத்திற்கு மாற்றலாம்.

8இ. கூகிளின் புதிய WAP-enabled blogging வசதிகளைக் கொண்டு, உடனடியாக அவரது வலைக்குறிப்பில் அதைச் சேர்க்கலாம்.

இப்படியாகப் போகிறது USB-Toothbrush Version 2 பற்றிய என்னுடைய கற்பனை.

இந்த பிரஷ் சிங்கப்பூரில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. யாராவது நண்பர் வாங்கினால் அதில், இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்ற, பற்களை முத்துப் போல் பிரகாசிக்கச் செய்யவல்ல, கோபால் பல்பொடியை சரிவர பாவிக்க முடிகிறதா என்று எனக்கு எழுதலாம்.