எம்பி3 இசைக்கோப்புகளில் பாடல் தரவுகளின் கூடவே பாடலைக் குறித்த மேலதிக விபரங்களையும் சேமிக்க முடியும். மீத்தரவுகள் (metadata) என்று பொதுவில் அறியப்படும் இத்தகைய தொடர்புள்ள விபரங்கள் கோப்புகளை ஒழுங்குபடக் கையாள உதவும். இத்தகைய மீத்தரவுகளை உள்ளடக்கி html கோப்புகளின் பயனை நீட்டிப்பதுதான் xml எனும் வருங்காலத்திற்கான மீயுரைக் கோப்பின் முக்கிய நோக்கம்.

எம்பி3 கோப்புகளுடன் கூடவே ID3 tag என்று சொல்லப்படும் விஷயத்தையும் சேர்க்கலாம். இந்த id3 tag ல் பாடலைப் பாடியவர், வெளியான வருடம், அது எப்படிப்பட்ட சங்கீதம் (ராக், ஜாஸ், பாப்,…) என்ற விஷயம், போன்ற மீத்தரவுகளை பாடலை எம்பி3யாக மாற்றும்பொழுதோ, அல்லது பின்னரோ சேமிக்க முடியும். தற்பொழுது மேற்கத்திய நாடுகளில் வரும் இசைக் குறுவட்டுகளில் பாடலுடன் கூடவே இவற்றைச் சேர்க்கிறார்கள். இதன் பயன் அளவிட முடியாதது.

என்னிடம் கைவசம் இருந்த ஒலிநாடாக்களை எல்லாம் ஜப்பானில் வசிக்கும்பொழுது MiniDisc வடிவில் மாற்றிவிட்டேன். இதில் இரண்டு முக்கிய இலாபங்கள்; 1. தேய்ந்து அழியும் பழைய பாடல்களில் ஒலிநாடாக்களை மினிடிஸ்கின் டிஜிட்டல் வடிவில் மாற்றிவிட்டால் அவற்றின் ஆயுசு பெருகும். 2. அடர்த்தி அதிகமுள்ள மினிடிஸ்க் ஒன்றில் கிட்டத்தட்ட நான்கு சிடி அளவுக்குப் பழைய மோனோ பாடல்களை சேமிக்க முடியும். இரண்டு பெட்டிகளில் இருந்த என்னுடைய ஒலிநாடாக்களின் அளவை பத்தில் ஒரு பங்காகக் குறைக்க முடிந்தது. தொடர்ந்து இவற்றை பொதுப் பயன் (கணினி, இல்லத்திரையரங்கு போன்றவற்றில் இயக்கும் வசதி) கருதி எம்பி3 ஆக மாற்றிவிட்டேன். கூடவே என்னுடைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பெற்ற பாடல்கள் எல்லாவற்றையும் சேர்த்து இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் என்னுடைய கணினியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறன.

இப்படி இரண்டாயிரம் பாடல்களில் எனக்கு வேண்டிய பாடலை நான் தேடி எடுப்பது தற்பொழுது சிரமமாகிவிட்டது. இந்த நிலையில் id3 tag மீத்தரவை விட்டால் எனக்கு வேறு வழியில்லை. இயன்றவரை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் விபரங்களை என்னுடைய எம்பி3 கோப்புகளில் சேர்த்து வருகிறேன். கிட்டத்தட்ட என்னுடைய சேமிப்பில் நான்கில் ஒரு பங்கு ஒழுங்குபட்டிருக்கிறது.

ஆனால் இந்த id3-ல் ஒரு சிக்கல் இருக்கிறது. இது பெரிதும் மேற்கத்திய இசைக்கென்று வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட இசைகளின் மீத்தரவுகளையும் உள்ளிட வசதியாக இது மாற்றியமைக்கப்பட்டது. இப்பொழுது பெரிதும் புழக்கத்தில் இருப்பது இதன் இரண்டாம் படிநிலை (id3 version 2, id3v2). இதில் உள்ளிடப்படும் தரவுகள் CD Database (CDDB) என்று சொல்லப்படும் இன்னொரு தரவு வடிவத்தின் பல கூறுகளை உள்ளடக்கியது. உதாரணமாக, ஆல்பம் பெயர், பாடியவர் பெயர், இசைத்தட்டு நிறுவனம், வருடம் போன்ற பொதுவான தரவுகள். கூடவே, ஒவ்வொரு பாடலுக்கும், பாடலின் பெயர், இசையமைத்தவர், போன்ற விஷயங்கள் இவை CDDB-யின் கூறுகள். CDDB பற்றிய மேலதிக விபரங்களை இங்கே காணலாம்.

CDDB சமாச்சாரங்களுடன் கூடவே, id3v2 மீத்தரவில் பாடலை எம்பி3 ஆக மாற்றியதன் தொழில்நுட்ப விபரங்கள் (sampling rate, ஒலியளவு, இட-வல சமன் வீதங்கள்), பாடலின் உரை வடிவம் போன்றவையும் அடங்கும். இது எல்லா இடங்களிலும் பாடலை சரியான ஒலி அமைப்புகளுடன் மறுபடி கேட்க உதவும். பாடலைக் கேட்கும்போதே கவிதை வடிவத்தையும் படித்தறிய முடியும்.

எல்லாம் இருந்தும் என்ன பயன்? நமக்குத் தேவையான மீத்தரவுகளுக்கு இந்த id3v2 தரத்தில் இடமில்லை. நம்மூரில் கேட்கப்படும் பாடல்களின் மீத்தரவுகள் என்ன? திரைப்படப் பாடலாக இருந்தால், பாடியவர்(கள்) பெயர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தின் பெயர், தயாரித்த நிறுவனம், இயக்குநர் பெயர், பாடல் காட்சியில் வரும் நடிகர் நடிகையர் பெயர், வருடம் போன்றவை. அல்லது கர்நாடக இசையாக இருந்தால், பாடலைப் பாடியவர், பக்க வாத்தியங்கள், பாடலை எழுதியவர், இராகம், தாளம், போன்ற விஷயங்கள். இவற்றுக்குச் சுத்தமாக இடமே இல்லை.

இப்படியிருக்கும் நிலையில், என்னுடைய கோப்புகளிலிருந்து ஹம்ஸானந்தி இராகப் பாடல்களையோ, நாகேஷ் நடனமாடிய பாட்டுக்களையோ பொறுக்கியெடுப்பது இயலாத காரியம். இந்த நிலை எப்பொழுது மாறும்?

நம்மூர் இளைஞர்களும் இளைஞிகளும் ஆயிரக்கணக்கில் நிரல் எழுதுகிறார்கள், கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கில் பாடல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் (Die4Love என்று விசித்திரமாகப் பெயரிடப்பட்ட Direct Connect, DC++, P2P மையங்களையோ போய்ப்பார்த்திருக்கிறீர்களா? சிலர் 140 GB அளவிற்குப் பாடல்களைச் சேமித்துவைத்துப் பறிமாறிக் கொள்கிறார்கள்). இவர்களில் யாருக்கும் இப்படியரு சிறிய மாற்றியமைக்கப்பட்ட id3 வடிவத்தையோ, அல்லது அதைப் பயன்படுத்த உதவும் மென்கலனையோ எழுதவேண்டும் என்ற முயற்சி இல்லை.

உலகில் மென்கலன் எழுதும் முளைகளில் எங்கள் மூளைகள் தான் பெரியவை, எண்ணிகையில் அதிகம் என்று நாம் மார்த்தட்டிக் கொள்வதில் எந்தக் குறையும் இல்லை. இதெல்லாம் ஒரு புறமிருக்க நம்முடைய தேவைக்கென்ற மென்கலன்களை உருவாக்குவதில் இவர்கள் எள்ளளவு முயற்சியையும் செய்வதில்லை. உதாரணமாக, நம்மூருக்குத் தேவையான உள்ளூர்மயமாக்கப்பட்ட மென்கலன்கள், நம் பள்ளிக் கூடங்களுக்குத் தேவையானவை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துச் சீட்டு வழங்க, என்று எதையும் யாரும் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. இவையெல்லாம் மேற்கில் உய்யும் நம்முடைய வித்தகர்களின் வாழ்முறைக்கு ஒவ்வாத விஷயங்கள், அவர்கள் நம்மூர் கிராம சுகாதாரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சற்று பேராசையாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய 140 GB எம்பி3 பாடல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள அவரே ஒரு சிறு நிரலியை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தப்பில்லை என்று தோன்றுகிறது. நம்முடைய மூளைகளில் பிறருடைய சட்டைப்பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருப்பது வருத்தமளிக்கிறது. இதில் தன்னுடைய நலனோ, சமூக சேவையோ மாத்திரம் இல்லை. இவற்றைக் கடந்த வணிகச் சாத்தியங்களும் உண்டு. பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், மென்கலன்களும் இப்படிச் சிறு முயற்சியிலேயே உருவானவை. ஆனால், நமக்குத் தேவை என்ன என்று கண்டுபிடித்து ஒரு வெளிநாட்டு நிறுவனம், நம்முடைய ஆட்களை குறைந்த சம்பளத்திற்கு வேலை வாங்கி நம்மூரில் அதிக இலாபம் வைத்து விற்பதை எதிர்பார்த்துக் கை கட்டி நிற்கவேண்டிய நிலை.

* * *

id3 மீத்தரவை உள்ளிட்டால் எப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதற்கான செய்விளக்கத்தை என்னுடைய இசைத் தரவிலிருந்து பார்க்கலாம். http://www.tamillinux.org/venkat/netjuke. இது உலகின் எந்த மூளையிலிருந்தும் என்னுடைய பாடல்களைக் கேட்க, திறந்த ஆணைமூல மென்கலன், Netjuke கொண்டு, எனக்கு நானே வடிவைத்துக் கொண்ட வசதி.

test@dhool.com என்ற பயனர் பெயரையும், tamilsong என்ற கடவுச் சொல்லையும் உள்ளிட்டுப் பாருங்கள். பாடல்களை உங்களால் இறக்கிக் கொள்ள வேண்டிய அனுமதியை நான் அளிக்கவில்லை.
* * *