என்னுடைய யாப்பிலக்கணப் பாடங்களை மறு வலையேற்றம் செய்தது பற்றி ராயர் காபி கிளப்பிலும் போட்டிருந்தேன். பத்ரி, எழுத்தாளர் திரு சுஜாதா “உயிர்மையில் ‘கண்ணீரில்லாமல் யாப்பு’ என்று பாடம் நடத்துகிறார். ஜெயலலிதா – நிரை-நிரை-நேர் => கருவிளங்காய்; கருணாநிதி – நிரை-நேர்-நிரை => புளிமாங்கனி என்றெல்லாம் பாடம் போகிறது”. என்று சுட்டியிருந்தார்

என்னுடையது கட்டாயமாக “மடையர்களுக்கு யாப்பு” (Yappu for Dummies)சமாச்சாரமில்லை. நான் மடையனாக இருக்கலாம், ஆனால் படிப்பவர்களைக் குறைத்து எடைபோட மாட்டேன். கண்ணீரில்லாமல் யாப்பு என்ன, எதுவுமே கற்றுக்கொள்ள முடியாது. அந்தத் தொடரை நான் பார்த்தேன் (அதில் சில அச்சுப்பிழை/ தவறுகள் இருக்கின்றன என்று எழுதினால் உடனே எனக்குத் தர்ம அடி கிடைக்கும் என்பது தெரியும்). யாப்பைப் பற்றி திரு சுஜாதவிற்கு எந்த அளவிற்கு அபிப்பிராயம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள
முடியவில்லை. எனென்றால் ஒரே வாரத்தில் இந்தியா டுடேயில் “இந்தக் காலத்திலும் யாப்பில் எழுதலாம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களே” என்று அலுத்துக் கொண்டுவிட்டு அதே வாரத்தில் அம்பலத்தில் “கட்டளைக் கலித்துறை கடினமான யாப்பு, இதை எழுதுவதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்” என்று நம்மாழ்வாருக்கு புகழாரம் சூட்டினார். (தன்னுடைய வாசகர்களின் நினைவுத் திறன் மீது அசாத்திய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்). ஒரு சமயத்தில் நல்ல கவிதையை எப்படி அடையாளம் காணலாம் என்று வரையறுக்கும் போது “1. யாப்பில் எழுதப்பட்டதெல்லாம் நல்ல கவிதை அல்ல” என்று முதல் விதியாக எழுதினார். இப்பொழுது அவரே வெங்காயம் உரிக்காமல் விஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்ற ரீதியாக யாப்பு சொல்லித் தருகிறார்.

அவருடைய கருணாநிதி, ஜெயலலிதா, புளிமாங்கனி, இதயக்கனி இதெல்லாம் எவ்வளவு தூரம் எடுத்துப்போகப் போகிறார் என்று பார்க்க வேண்டும். என்னுடைய தந்தை (பள்ளி ஆசிரியர்) ஒரு நிகழ்வைச் சொல்வார். பள்ளிக்கு வந்த மாவட்டப் பள்ளி ஆய்வாளர், வகுப்பிலேயே புத்திசாலிப்
பெண்ணிடம். “நா பத்து முட்டை வாங்கினேன். ஒரு அட்டப் பெட்டில வைச்சேன். வைக்குறப்ப ஒன்னு உடைஞ்சி போச்சு. அப்புறம் வைக்கல சுத்தினேன், மேல அசையாம இருக்க பேப்பரை வச்சி மூடினேன். பஸ்ல வரப்ப ஆடி ஆடி ரெண்டு போச்சு, (என்ற ரீதியாகக் கணக்கு சொல்லி), பாக்கி எவ்வளவு முட்ட எங்கிட்ட இருக்கும்?” என்று கேட்க அவள் விழித்திருக்கிறாள். என் அப்பாவிற்குத் தெரியும் – இந்த கழித்தல் கணக்கெல்லாம் அவளால் எளிதாக முடியும் என்று, அவர் “ஏம்மா, பத்துல ஒன்னு போச்சி, அப்புறம் ரெண்டு போச்சி, அப்புறம் நாலு போச்சி, பாக்கி எவ்வளவு” ஏன்று கேட்டு முடிக்கும் முன் சரியாக விடை வந்திருக்கிறது. அதெத்தான சார் கேட்டாரு, ஏன் சொல்லலை? என்று கேட்க, சிறுமி “அவர் முட்டைய எப்படி பத்தரமா எடுத்துகிட்டுப் போறதுன்னு சொல்றாருன்னு நெனச்சேன். கணக்க கவனிக்கல சார்” என்று அழுதிருக்கிறாள்.

சொல்லிக் கொடுக்க முயற்சிப்பவர்கள் தங்கள் மேதமைத்தனம், நகைச்சுவை உணர்வு இதெல்லாவற்றையும் ஒரு ஓரமாக விட்டுவிட்டு (ஓரமாகத்தான், ஒரேயடியாக இல்லை), எப்படிச் சொன்னால் போய்ச் சேரும் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இது என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். கருணாநிதி… புளிமாங்கனி.. (வனிதாமனி, வனமோகினி) என்று பாட்டுப் பாடிவிட்டு வாசகரை ஒதுங்கிப்போக வைப்பது எளிது. (அவர் எழுதுவது சிற்றிதழில் என்பதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்).

என்னுடைய யாப்பு பாடத்திலும் “சின்னச் சின்ன ஆசை” வரும், ஒரமாக பெட்டிகட்டி. ஆர்வத்தைத் தேக்கவைக்க உதவியாக, கற்றதைப் பிறவற்றிலும் பொருத்திப் பார்க்கலாம் என்று சொல்வதற்காக.

ஒரு மாத இதழில் இரண்டு பக்கங்களில் கண்ணீரில்லாமல் யாப்பு, (இன்னும் என்னென்ன சொல்லித்தரப் போகிறேன் என்று பட்டியல் போட்டார் என்பது மறந்துவிட்டது). போறத குறைக்கு லினக்ஸ், மோஸிலா, கேடிஈ, க்னோம், ஓப்பன் ஆபீஸ் இதெல்லாம் கூட தமிழ்ப் “படுத்தப்” போகிறார். அவருக்கு நீண்ட ஆயுளை வேண்டி பிராத்திக்கத்தான் முடியும்.