சாது மிரண்டால்-1

சாது மிரண்டால்-2

மீண்டும் தனது அடையாளம் திருடப்பட்டதையும், அதைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த இணையச் சேவை வழங்குநரின் இயலாமையும் கண்டு வருத்தமடைந்தான் ஆன்டி. ஆனால் இதை எப்படியும் ஒரு கை பார்த்தே தீருவது என்று முடிவு செய்தான். “நான் கணினியை வைத்துக் கொண்டு படங்கள் வரைபவன்; கணினி வலைநுட்பன் கிடையாது. மென்மையான ஓவியனான நான் சிக்கல்கள் நிறைந்த கணினி உலகிற்குத் தள்ளப்பட்டேன். ஆனால் நான் நேசிக்கும் இணையம் என் கண்களுக்கு முன்னாலே திருடர்களுக்கும் எத்தர்களுக்கும் அடிமைப்பட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. என்னுடைய தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறேன். இதைவிட்டால் எனக்கு வேறு போக்கிடம் கிடையாது. எனவே இதை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்” உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் தலைப்பில் அனுப்பியவரின் முகவரி, நேரம், போன்ற சமாச்சாரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவற்றைத் தவிர இன்னும் பல விஷயங்களும் தலைப்பில் பொதிந்து கிடக்கும். பல மின்னஞ்சல் நிரலிகளில் “மேலதிகத் தலைப்புகள்” என்று ஒரு சமாச்சாரம் இருக்கும், அதைத் திறந்து பார்த்தால் மின்னஞ்சல் வந்ததடைந்த வழி தெளிவாகத் தெரியும். அதாவது, என்னுடைய கணினியிலிருந்து புறப்பட்டு அது எந்தெந்த வலை முடிச்சுகளையெல்லாம் கடந்து உங்கள் உள்ளே பெட்டிக்கு வந்திருக்கிறது என்ற ஜாதகத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நம்மாள் ஆன்டி இதுபோன்ற சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக்கொண்டு அதற்கு மேலும் போய் சந்தேகமான வலைத்தளம் யார் பெயரில் இருக்கிறது என்று துப்பறியத் தொடங்கினான்.

ஆள் இல்லை என்று திரும்பி வந்த எரிதங்கள் இதற்கு பெரிய உதவியாக இருந்தன. அதாவது, தன்னிடம் திரும்ப வந்த மின்னஞ்சல் கடந்து வந்த வழியெல்லாம் தேடிக்கொண்டு போனால் அது கடைசியாக யாரால் துவக்கப்பட்டது என்று காட்டிக் கொடுக்கும். ஆனால் இது அவ்வளவு இலகுவானது இல்லை. நேர்மையான கடிதங்களின் மூலத்தைக் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் எத்தர்களான எரிதர்கள் இப்படி அஞ்சல்களை அனுப்ப அவர் வீட்டுக் கணினிகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அது இன்னொரு ஏமாளியில் கணினியாக இருக்கும். கிட்டத்தட்ட ஆறு ஏழு கைப்பற்றப்பட்ட அப்பாவி கணினிகளை அடையாளம் கண்டுபிடித்தான் ஆன்டி. இவர்கள் எல்லோரும் ஆன்டியைப் போலவே ஒரே எரிதனால் பாதிக்கப்பட்டவர்கள்.

அயராத முயற்சிக்குப் பிறகு தேடிச் சென்ற எல்லா வழிகளும் கிட்டத்தட்ட ஒரே நபரைச் சுட்டத் தொடங்கின. அவன் பெயர் எட்டி மாரின் (Eddy Marin) . எரிதர்கள் உலகில் முடிசூடா அரசன் அவன். இணையப் பாதுகாப்புத் தளங்கள் அவன் ஒரு நாளைக்குச் சராசரியாக 50 மில்லியன் (அதாவது 50,000,000!!!) மின்னஞ்சல்களை அனுப்புவதாகச் சொல்கின்றன. அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் எட்டி, இப்படி விளம்பர எரிதங்களை அனுப்பியே கோடிஸ்வரனாகியிருக்கிறான். அவன் புகழ் மின்வெளியைக் கடந்தது. 1990ல் கொக்கேய்ன் கடத்தலுக்காகப் பிடிபட்டிருக்கிறான். ஆனால் மின்னுலகில் இருக்கும் சட்டத் துளைகளை இப்பொழுது சட்டபூர்வமாகக் கையாண்டு இந்த வெறுக்கத்தக்க தொழில் மூலம் பணக்காரனாகியிருக்கிறான்.

தன்னுடைய எதிரியை நன்றாக அடையாளம் கண்டுகொண்ட ஆன்டி தக்க ஆதாரங்களுடன் எட்டி மாரினுக்கு வலைத் தொடர்பு அளித்து வந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டான். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம், எட்டியின் புகழ் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது; ஆனால் எட்டி தங்கள் சேவையைப் பயன்படுத்தி வருவது அவர்களுக்கே தெரியாது! உடனடியாக அவர்கள் எட்டியின் இணையத் தொடர்பைத் துண்டித்திருக்கிறார்கள்.

கீழே விழுந்த எட்டி துள்ளி எழுவதற்கு அதிக நாள் எடுக்காது. அவன் மீண்டும் வேறு அவதாரங்கள் எடுத்து இணையத்தைத் துளைக்கத் தயாராகி வருகிறான். ஆனால் இந்தப் போரில் முதல் வெற்றி ஆன்டிக்குத்தான். உண்மையை நிரூபித்தபிறகு ஆன்டியின் இணைய தளத்தின் பெயர் எரிதர்கள் பட்டியல்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. மெல்ல அவன் இழந்த தொழில் திரும்பிக் கொண்டிருக்கிறது. “எட்டி மாரின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போகிறாயா?” என்று கேட்டால் ஆன்டிக்குச் சிரிப்புத்தான் வருகிறது. அமெரிக்காவில் எந்தவிதமான நியாங்களுக்கும் சட்டபூர்வ தீர்ப்பு எளிதில் கிடைக்காது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. வழக்கு என்று நீதிமன்றத்திற்குப் போனால், நிரூபணங்களை வழங்க வேண்டிய கட்டாயம் பாதிக்கப்பட்ட ஆன்டிக்குத்தான் இருக்கிறது. எட்டியின் பணபலத்தால் சட்டங்களைத் துளைக்கமுடியும். எனவே, தனித்து அவனுடன் சட்டப் போர் புரியப்போவதில்லை என்று சொல்லும் ஆன்டி, அவனால் பாதிக்கப்பட்ட பலரும் ஒன்று சேர்வதாக இருந்தால் அவன்மீது பொதுநல பாதிப்பு வழக்கு தொடுக்கலாம் என்று சொல்கிறான்.

இணையத்தின் வரலாற்றில் அதிகம் தொழில்நுட்பம் தெரியாத ஒரு சாதாரணப் பயனர் ஒரு எத்தனின் முகமுடியைக் கிழித்தது ஒரு அதிசய சம்பவம். இது வணிக ஆதாயங்களுக்காக திசை திருப்பப்படும் இணையத்தின் மீது பழைய நம்பிக்கையைத் திரும்பத் தருகிறது.