1978, ஐப்பசி மாதம் ஒரு அடைமழைக்குப் பிறகான ஒரு மாலையில், கும்பகோணம் நேடிவ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வழக்கம் போல் சென்றது பிள்ளையார் கோவில்தெரு கிரிக்கெட் குழு. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு நினைவில் வைத்திருந்து எழுதும்படியாக அப்படியன்றும் பிரபலமான குழு அல்ல அது. வழக்கமாக எல்லா தெருக்களிலும் இருப்பதைப் போன்ற ஒரு வெட்டிக் கூட்டம். வழக்கம்போல இது வசதியான ஒரு பையனின் அப்பாவின் அதீத கிரிக்கெட் ஆர்வத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு ஜீவித்து வந்தது. அவ்வப்போது தெரு மேட்ச் போடுவது, நடேசய்யர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது கல்லூரி இயற்பியல்துறை குட்டிச் சுவற்றில் உட்கார்ந்துகொண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழக ஓப்பனரை கவாஸ்கருக்கு இணையாகப் பேசுவது என்று காலத்தைக் கழித்துவந்த கூட்டம். அந்தக் கூட்டத்தில் முக்கியமற்ற நபர் பீக்காச்சு. பீக்காச்சு என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட விடலைக்கு அவன் பெற்றோர் ஆசையாகச் சூட்டிய பெயர் பிரகாஷ். பீக்காச்சு என்ற இன்னிசை அளபெடைக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு காட்டினார் அவன் அப்பா. அவரே பின்னர் ஒரு நாள் என்னைத் தெருவில் பார்த்தபொழுது “அந்தக் கடங்காரன் பீக்காச்சுவை எங்கயாவது பாத்தயாடா, சனி எங்க ஒழிஞ்சதுன்னே தெரியல” என்று பீக்காச்சு பெயரில் இருக்கும் இனிமையை உணர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் பீக்காச்சு அவன் வீட்டில் இருந்தான். இல்லாமல், என்றைக்காவது உண்மையாகவே அவன் தொலைந்து போனால், கருப்பு-வெளுப்பில் மாத்திரமே அப்பொழுது தெரிந்து கொண்டிருந்த, “செந்நாய் தொலைக்காட்சி நிலையத்தில்” செய்திகளுக்குப் பிறகு வரும் விளம்பரத்தில், பீக்காசுவை இப்படி வருணிக்கலாம்; “கறுப்பு நிறம், கறுப்பு முடி, நீண்ட முகம், வாழைக்கச்சலை ஒத்த தேகம், காணமல் போன தினத்தன்று வெள்ளைச் சட்டையும் நீல நிறக் கால்சட்டையும் அணிந்திருந்தார்”. பீகாச்சுவை டவுன் ஹைஸ்கூல் யூனிபார்மான வெள்ளைச் சட்டை-நீல நிறக் கால்சட்டை தவிர வேறு வண்ணங்களில் பார்த்ததாக நினைவு இல்லை. முக்காலே மூனுவீசம் பருப்புச்சோறு தின்றே வளர்ந்த எங்கள் கூட்டத்துக்குள்ளே அற்ப ஜீவியாக அணைவராலும் அங்கீகரிக்கப்பட்டவன் அவன்தான். சாதாரணமாக நின்று கொண்டிருக்கும்போது “டேய், காலுக்குக் கீழ..” என்று கத்திச் சொன்னால் உத்தரவாதமாக உடனே மேற்சொன்ன நீலக் கால்சட்டையை நனைப்பான்.

அப்படியான பீக்காச்சு ஒரு நாள் அனைவரையும் மிரட்டி அந்த மைதானத்தில் கொடிகட்டிப் பறந்துவந்த காமராஜ் நகர் சின்னராசுவை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்துவிட்டான்.

காரணம் இதுதான்; வழக்கமாக எல்லா டீமும் மைதானத்திற்கு வரும் முன்னே எங்கள் டீம் வந்து ஒரு மூலையில் இடம்பிடிக்கும். லேட்டாக வரும் டீமுக்கு மைதானத்தில் இடம் இருக்காது. சர்வதேசக் கிரிக்கெட் விதிகளில் சொல்லப்பட்ட பரிமாணங்களில் முக்கால் அளவே இருக்கும் நேடிவ் ஸ்கூல் கிரவுண்ட், சர்வசாதாரணமாக எட்டு முதல் பத்து டீம்களுக்கு இடம் கொடுக்கும். எங்கள் அணியின் மிட்விக்கெட் பீல்டர், அடுத்தத் தெருவின் சில்லி பாயிண்ட் இடத்தில் தைரியமாக முதுகைக் காட்டிக் கொண்டு நிற்க வேண்டும். இதற்காகவே, நாங்கள் மூலையில் இடம் பிடிப்போம், ஆப் சைடில் இருப்பவர்கள் இன்னொரு டீமுக்குப் பயப்பட வேண்டியதில்லை. ஒரு நாளாவது நாங்கள் முழுவதும் ஆடினோம் என்று சொல்லமுடியாது. காரணம், மேட்டுத்தெரு, சோலையப்பன் தெரு போன்ற வஸ்தாது டீம்கள் வலுக்கட்டாயமாக எங்கள் ஆட்டத்தை முடிக்கும்.

சம்பவம் நடந்த தினத்தன்று நல்ல மழைக்குப் பிறகு கணுக்கால் அளவிற்குத் தண்ணீர். நாங்கள் ஆட ஆரம்பித்து அரைமணி நேரம் கூட இருக்காது, சின்னராஜ் அன் கோ வந்து எங்களை இடம் பெயர்க்கத் தொடங்கினார்கள். அது போன்ற மழை நாட்களில் கூடவே ஒரு பயம், மைதானத்திற்கு கிழக்குப் பக்கத்தில் இருக்கும் வயல்களில் இருந்து தண்ணீர்ப் பாம்புகளை ஸ்டாம்பால் தூக்கிவந்து எங்கள் மேல் போடுவார்கள். அன்றும் சின்னராஜ் தனது வார்த்தைகளின் வீச்சைக் காட்டத் தொடங்கியிருந்தான். டைம் ஷேரிங் போன்ற இன்றைய பிரபலமான சமாச்சாரங்கள் எல்லாம் சின்னராஜ் அன் கோவின் நம்பிக்கைகளுக்கு உகந்தவை அல்ல. ‘வந்தார்கள், ஸ்டம்பைப் (பிடுங்கினார்கள், நட்டார்கள்), விளையாடினார்கள்’ என்று இராமன், வில் சமாச்சாரத்தைக் கம்பன் சொல்வதைப் போலச் சுருக்கமாகச் செய்வதுதான் அவர்கள் வழக்கம். பிக்காசு அப்பொழுதான் பேட்டைக் கையில் வாங்கியிருந்தான். “சின்னராஜ் இன்னும் என்னத் தவுத்து ஒத்தன்தான் இருக்கான், நாங்க முடிச்சுட்டு விட்டுட்றோம், ஒங்க டீம்லையும் இன்னும் எல்லாரும் வல்ல” என்று மண்றாடிக் கொண்டிருந்தான்.”டேய் பேசினே வாய்ல திணிச்சுடுவேண்டா” என்று மிரட்டினான். சின்னராஜின் ஆண்மையின் பரிமாணங்களைப் பற்றிய சந்தேகம் தினையளவும் எங்களுக்குக் கிடையாது. ஆனால் அவன் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டோம் என்பது விரைவிலேயே புரிந்து போயிற்று. “சின்னராஜ், டேய், கொஞ்ச நேரண்டா” என்று பீக்காச்சு கெஞ்சிய போது – எங்கிருந்து, எப்படி பிடித்து வந்தான் என்று தெரியாது, சின்னராஜ் தன் சட்டைப் பையில் கைவிட்டு ஒரு குட்டி மீனை எடுத்து, பீக்காசுவின் வாயில் திணித்துவிட்டான். தன்னுடைய டீம் வரும்வரை பொழுதுபோக்குவதற்காக சின்னராஜ் இந்த விளையாட்டை முன்னரே வடிவமைத்துக் கொண்டு கிழக்குத் திசையிலிருந்து மைதானத்திற்குள் பிரவேசித்திருந்தான்.

நாங்கள் எல்லோரும் மிரண்டு போய் நின்றுகொண்டிருந்த அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒரு விஷயம் நடந்தது. அது பல நாட்களுக்கு கும்பகோணம் விடலைகள் வட்டாரத்தில் வியப்புடன் பேசப்பட்டது. கையில் இருந்த பேட்டைக் கீழே போட்ட பீக்காச்சு, ஸ்டம்பு ஒன்றை உருவினான், முதல் அடி சின்னராசுவின் வலது முட்டியில் விழுந்தது. அடிவயிறில் இருந்து கத்திக் கொண்டு கீழே விழுந்தான் சின்னராஜ். தொடர்ச்சியாக ஏழெட்டு அடிகள் பீக்காச்சு அவனை சாத்திவிட்டான். அப்படி அடிக்கும்போது சுதர்ஸனாஷ்டகம், ஸ்யாமாளா தண்டகம் போன்றவற்றை மற்றுமே உரக்கச் சொல்லும் பீக்காசுவின் வாயிலிருந்து சின்னராசின் பிறப்பு பற்றிய அடிப்படை சந்தேகங்களை எழுப்பவல்ல, அவனுடைய டி.என்.ஏக்களை பத்திரமாக அடுத்த சந்ததிக்குக் கடத்துவதில் அவனுக்கு இல்லை என்று சொல்லப்பட்ட குறைகளைப் பற்றிய வார்த்தைகள் சரமாரியாக உரக்க வெளிவந்தன. அடித்து முடித்தவுடன் பீக்காச்சு கீழே மூர்ச்சைபோட்டு விழுந்துவிட்டான்.

மன்னிக்கவும், இது கும்பகோணம் பிள்ளையார் கோவில் தெரு பீக்காசுவைப் பற்றிய கதையல்ல. இது சாக்ரமாண்டோ, கலிபோர்னியாவில் இருக்கும் ஆண்டி மார்க்லியின் கதை. அந்தச் சாதுவும் எங்கள் பீக்காசுவைப் போல ஒருநாள் மிரண்ட கதை.