இப்போதைக்கு உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த இணையதளம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால் பலரும் உடனே கூகிள் என்று சொல்வார்கள். இது ஒரு தேடல் இயந்திரம். அதி அற்புதமான தேடல் இயந்திரம். கூகிளில் தேடி விடை கிடைக்கவில்லை என்றால், இரண்டு கருத்துக்களைத்தான் கூறமுடியும்;

1. அப்படியாக இந்த உலகில் (மின்னுலகையும் சேர்த்துத்தான்) எதுவும் இல்லை.

2. உங்களைப் போன்ற அதிர்ஷ்டக்கட்டை உலகில் யாரும் கிடையாது.

அப்படி உத்தரவாதமான தகவல் பொக்கிஷமாக கூகிள் எப்படி உருவெடுத்தது? கூகிளின் அடிப்படை இரகசியம் என்ன, என்று சொன்னால், பூ, இவ்வளவுதானா? என்று பலரும் உதட்டைப் பிதுக்குவார்கள். ஆனால்,

1.இது வேறு யாருக்கும் தோன்றுவதற்கு முன் லாரி பேஜ், செர்கே பிரின் (கூகிள் நிறுவனர்கள்) மூளையில்தான் முதலில் உத்தித்தது

2. இதே போன்ற அற்புத கண்டுபிடிப்புத் தருணங்கள் பலருக்கும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் அதைத் தவறவிட்டிருக்கிறார்கள், அல்லது பேராசையால் அழித்தொழித்திருக்கிறார்கள்.

அப்படி என்ன கூகிள் எந்திரத்தின் அடிப்படை என்று தெரியாதவர்களுக்காக;

வழக்கமாக (பழைய தேடல் இயந்திரங்கள், ஆல்டா விஸ்டா, நெட்ஸ்கேப், எக்சைட்) போன்றவை உலகில் இருக்கும் இணையதளங்களைப் பட்டியல் இட முயற்சி_த்தார்கள்(_கின்றனர்). அவர்களின் தேடல் இயந்திரம் இணையத்தைச் சுற்றிவரும், ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் இணைப்புகள் எல்லாவற்றிலும் பயணிக்கும். அங்கிருந்து முக்கிய வார்த்தைகளை (கருச்சொற்களை) அள்ளிக் கொண்டுவந்து தலைமையிடத்தில் குவிக்கும். பிறகு அவை பட்டியலிடப்பட்டு வைக்கப்படும். நீங்கள் தேடும் வார்த்தை எந்த இணைய பக்கத்தில் அதிகதடவை வருகிறதோ அதுதான் உங்களுக்குத் தொடர்பானது எனக் கொண்டு அதை முக்கியமானதாகத் தரும். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நல்ல(ஒரே) வழி என்று தோன்றினாலும் இது முட்டாள்தனமானது.

இணையப் பக்கங்களின் எண்ணிக்கை பில்லியன்களில் பெருகத் தொடங்க எல்லோரும் தேடல் இயந்திரங்களைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. இந்த நிலையில் உலகத்திலேயே நான் தான் முக்கியமான ‘வெங்கட்’ என்று அறிவித்துக் கொள்ள ஒரு வெற்று பக்கத்தைத் திறந்து அதை வெங்கட் என்ற வார்த்தைகளால் (ஆயிரக்கணக்கில்) நிரப்பிவிட்டால் போதும். தேடும் அணைவருக்கும் காட்சியளிக்கும் ஒரே வெங்கட் நான் ஆவேன்.

இந்நிலையில் லாரியும் செர்கேவும் வேறுவிதமாகச் சிந்தித்தார்கள். மனிதர்களுடைய உலகில் முக்கியமான வெங்கட் நானாக இருக்க வேண்டுமென்றால் பலருக்கும் என்னைத் தெரிந்திருக்க வேண்டும். இணையத்தில் இதற்கு இணையாக எதைச் சொல்லலாம்? பல இணைய பக்கங்கள் வெங்கட் என்ற வார்த்தையுடன் என்னுடைய இணையப் பக்கத்திற்குத் தொடர்பு கொடுத்திருந்தால்தானே நான் முக்கியமானவானாக இருக்க முடியும். எனவே, அவர்கள் தயாரித்த தேடல் இயந்திரம் இந்தப் பணியை மேற்கொண்டது. இதனால் கூகிளின் விடைகள் பலமுறையும் சரியானவையாக இருக்கத் தொடங்கின.

இயந்திரத்தனமாக வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருக்காமல் மனிதர்களைப் போல ஆராயக் கற்றுக் கொண்டதுதான் கூகிளின் முதல் வெற்றி. கண்மூடித்தனமாக, சிறீராமஜெயம் எழுதினால் பரமபதம் அடையலாம் என்று நம்புவர்கள் மடையர்கள்தானே.

இரண்டாவதாக, அப்படி வெறும் இணைப்புகளின் எண்ணிகையை மாத்திரம் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கவில்லை கூகிள். என்னுடைய பக்கத்திற்கு இணைப்பு தருபவரின் தகுதி என்ன என்றும் பார்த்தது. அதாவது, சுட்டிக் காட்டும் பக்கம் எந்த அளவிற்குப் பலரால் சுட்டப்படுகிறது என்றும் பார்த்தது. வெறு வார்த்தைகளில் சொன்னால் எத்தனை மனிதர்களுக்கு இந்த வெங்கட்-டைத் தெரிந்திருக்கிறது என்பது முக்கியமல்ல; எத்தனை “முக்கியமான” மனிதர்களின் கண்களில் இந்த வெங்கட் முக்கியமானவனாகத் தெரிகிறான் என்பது அவசியம்.

ஆனால் அப்படியன்றும் இது புதுமையானது இல்லை. ஆராய்ச்சி உலகில் இது பல காலமாகப் பின்பற்றப்பட்டு வந்ததுதான். உதாரணமாக, லேசர் துறையில் நான் எவ்வளவு முக்கியமானவன் என்று எப்படிக் கணக்கிடுகிறார்கள்;

1. லேசர்கள் குறித்த எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன்?

2. லேசர்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளில் என்னுடைய கட்டுரைகள் எந்த அளவிற்குச் சுட்டப்படுகின்றன?

3. லேசர்கள் குறித்த என்னுடைய கட்டுரைகள் எத்தகைய ஆய்வேடுகளில் வெளியாகியிருக்கின்றன? உதாரணமாக, பிஸிக்கல் ரிவ்யூ லெட்டரில் என்னுடைய ஒரு கட்டுரை வெளியாகியிருப்பது வேறு மூன்றாம் தர ஆய்வேடுகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை நான் எழுதுவதற்குச் சமம். ஏனென்றால், பிஆரெஎல் முதல் தரமான ஆய்வுமுடிவுகளை மாத்திரமே வெளியிடும், பிறவற்றை நிராகரிக்கும்.

4. முதல் தரமான ஆய்வேடுகளில் எத்தனைமுறை என்னுடைய ஆய்வுக் குறிப்புகள் சுட்டப்பட்டிருக்கின்றன?

இது பல தலைமுறைகளாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு உலகில் கடைபிடிக்கப்படுவரும் நடைமுறை. இதை எளிதாக்க என்று கரண்ட் கன்டென்ட்ஸ், சயன்ஸ் சைட்டேஷன் இன்டெக்ஸ் என்று பல குறியீட்டுச் சஞ்சிகைகள் அறிவியல் உலகில் பிரசித்தம். அதே போல மருத்துவ, சமூகவியல் ஆய்வுலகங்களுக்கும் தர நிர்ணயங்கள் உண்டு. இவற்றின் மனிதத் தன்மையை முற்றாக உள்வாங்கிக் கொண்டு உருவாக்கப்பட்ட இயந்திரம் (மானுடம்?) கூகிள்.

இது கூகிளின் தோற்றுவாய். அதனுடைய ஐந்தாண்டுகால வரலாற்றில் அது தொடர்ந்து மானிடவியல் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இவற்றைப் பற்றி பின்னாளில்…