கனடாவிலிருந்து வெளிவரும் காலாண்டிதழான காலம் இதழ் 18 இவ்வாரம் படிக்கக் கிடைத்தது. இதுநாள் வரை எந்தவொரு நிலைகளையும் சாராமல் வெளிவந்து கொண்டிருந்த காலம் இவ்விதழில் சறுக்கியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இரண்டு படைப்புகளை முன் வைத்தே நான் இப்படிக் கூற வேண்டியிருக்கிறது. முதலாவது, பேராசிரியர் தொ. பரமசிவனுடனான ஷோபாசக்தியின் நேர்முகம். இரண்டாவது சிவத்தம்பி அவர்கட்குப் பணிவான வேண்டுகோள் என்று தலைப்பிடப்பட்ட வரனின் கடிதக் கட்டுரை.

பின்னது, சிவத்தம்பியின் ‘நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம் என்ற புத்தகத்தில் தவறுகள் மலிந்துள்ளதாகவும் அதனை அவர் விற்பனையிலிருந்துத் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தும் விமர்சனக் கடிதம். அறிவுசார் விவாதங்களுக்குச் சற்றும் பொருத்தமில்லாத தொனியில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தை மொழி மிஞ்சுகிறது. வாதங்களில் சிறந்த, சான்றாண்மைக்கு உகந்த வழி, தனது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்து, பிரதிவாதியையோ நடுவரையோ (வாசகரையோ) தீர்ப்புக்கு நகர்த்திச் செல்வது. அது இல்லாமல் இதுதான் என்னுடைய தீர்ப்பு இதற்கு நீங்கள் உடன்பட்டேயாக வேண்டும் என்று தொனிப்பது அல்ல. இது ஆசிரியரின் சிகப்பு மைக்குத் தப்பியது எப்படி என்று தெரியவில்லை.

இரண்டாவது, மிக முக்கியமானது. ‘மறுபடியும், மறுபடியும் பெரியாரிடம்’ என்று தலைப்பிடப்பட்ட பேராசிரியர் தொ.ப வின் நேர்காணல். ஷோபாசக்தியின் கேள்விகளில் விடை எதிர்நோக்கும் தொனியோ, விளக்கம் தேடி நிற்கும் ஆர்வமோ தென்படவில்லை. மாறாக, இதைத்தான் நாங்கள் பறைசாற்ற முனைகிறோம் என்னும் தம்பட்டம்தான் தெரிகிறது. உதாரணத்திற்கு ஒரு கேள்வி;

“தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நான் அவதானித்த விடயம் கடந்த பதினைந்து வருடங்களாக அதாவது பிரம்மராஜன், சாருநிவேதிதா, கோணங்கி தலைமுறைக்குப் பின்னான தலைமுறையில் பெயர் சொல்லுமளவுக்கு ஒரு ‘ஒத்தப்பாப்பான்’ இலக்கிய, தத்துவார்த்தப் புலங்களில் இல்லை. எப்படியிருக்கிறது தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழல் உங்களுக்கு இது நிறைவளிக்கிறதா?”

{ஒத்தப்பாப்பன் மேற்கோள்குறி ஷோபாசக்தி இட்டது}

என்ன கேட்க வருகிறார் இவர்? பார்ப்பான் ஒருத்தன்கூட இல்லாத நிலை அப்படி என்ன விசேடமானது? இதே கேள்வியை நாட்டுக்கோட்டை செட்டியாரை முன்வைத்துக் கேட்பாரா? (இலக்கியத்தில் இல்லையென்றால் வட்டிக் கடை நடத்துவதை வைத்துக் கொள்ளலாம்). இந்தக் கேள்விக்கு தொ.ப என்ன பதிலளிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்?

(அ) இல்லை. பார்ப்பனர்கள் ஒருகாலத்தில் தமிழ் இலக்கியத்தை வெகுவாக முன்னெடுத்துச் சென்றார்கள். இப்பொழுது அவர்கள் பங்களிப்பு இல்லாமல் தமிழ் தேய்கிறது. இந்த நிலை எனக்கு மிகுந்த மனவருத்ததைத் தருகிறது.

(ஆ) ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். ஒத்தப்பாப்பான் எவனும் தமிழில் தலையெடுக்கவிடாமல் கல்லைப் போட்டு நசுக்கிவிட்டோம். தூக்குங்கள் உங்கள் கோப்பையை, சியார்ஸ்!!

(சாருநிவேதிதா, பிரம்மராஜன், கோணங்கி – முப்பெரும் தெய்வங்களை நினைத்தாலே புல்லரிக்கிறது)

தொ.பவும் சற்றும் சளைக்காமல் – ஷோபாவின் கருத்தைப் பிரதிபலிக்கிறார். ஒருகாலத்தில் இலக்கியத்தொகுப்புகளில் பார்ப்பனர்களே அறுதிப் பெரும்பாண்மை வகித்தார்கள். இந்த நிலை மாறிவிட்டது. “…அறுபதுகளின் கடைசிப் பகுதியிலிருந்து சிறுகதை, நாவல் இரண்டு துறைகளும் தமிழர்களால் பறிக்கப்பட்டுவிட்டது. … இன்று மறுபடியும் பார்ப்பனர்கள் மெல்ல இந்த இரும்புக்கோட்டைக்குள் நுழைய முயல்கிறார்கள். ஆனால் பாலகுமாரன் ஒரு கதை எழுதினால் உடனே எதிர்வினை வருகிறது…”

ஒரு சமுகத்திற்கோ, தனிநபருக்கோ எழுதும் உரிமைகளைப் பறிக்கவும் அவர்களை விலக்கவும் தனக்கு (தங்களுக்கு) அதிகாரம் இருப்பதாகப் பறைசாற்றிக் கொள்கிறார். இதற்கு வரலாற்றில் ஒரு விசேடப் பெயர் உண்டு – பாசிசம். எழுதப்படுவது என்ன என்று தங்களுக்குக் கவலை இல்லை; பார்ப்பனர்களை எழுதவிடாமல் எதிர்வினை புரிவதே தங்கள் பிறவிக்கடன் என்பது அவரது ஒப்புதல் வாக்குமூலம்.

முத்தாய்ப்பாக இப்படிக் கூறுகிறார்; “… எனவே, பார்ப்பனர் அல்லாதோரின் எழுச்சியின் சில நியாங்களையாவது ஒத்துக் கொண்டமாதிரி பார்ப்பனர்கள் எழுதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் சுஜாதா திருக்குறளுக்கு உரையெழுத வருவாரா?”

ஆஹா! திருக்குறளுக்கு உரையெழுதல் என்பது பார்ப்பனர் அல்லாதோரின் நியாங்களை ஒத்துக் கொண்டதற்கு அடையாளம். வாருங்கள் பேராசிரியரே! உங்கள் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று படுகிறது. எது என்று விளக்குவீர்களா? அல்லது என்னுடைய அறிவிற்கெட்டாமல் போன விடயத்தை முடிச்சவிழ்த்துத் தருவீர்களா?

(அ) திருக்குறளில் இருப்பவை எல்லாம் பா-அ-வர்களின் நியாங்கள் (உதாரணமாக, கொல்லாமை, புலால் மறுத்தல்,…) இவற்றுக்கு உரையெழுதி பார்ப்பனர்கள் நடைமுறை கட்டாயங்களுக்கு உட்படுகிறார்கள்.

(ஆ)திருக்குறள் பா-அல்லாத வள்ளுவரின் படைப்பு. அதிலிருக்கும் நியாங்களுக்கு உரையெழுதித் சுஜாதா உய்வடைகிறார்.

(இ)இதே ரீதியில் உங்களிடம் ஐங்குறுநூறு எந்த சாதியின் சொத்து? திரிகடுகத்திற்கு உரியவர்கள் முக்குலத்தோரில் எக்குலத்தோர் என்ற ஷெட்யூல்-47 இருக்கிறதா?

(ஈ) சமீபத்தில் சுஜாதா புறநானூற்றுக்கு உரையெழுதினார். அது அவரது ஞானத்தெளிவின் அடுத்த கட்டமா? அப்படியென்றால் “ஆழ்வார்கள் – ஒரு எளிய அறிமுகம்” என்று எழுதும்பொழுது அவர் ஞானச்சறுக்கல் எந்த அளவிற்கு அவரை வீழ்த்துகிறது?

நேர்காணல் முழுக்க இப்படியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக தொ.ப கணினி வளர்ச்சியும் தலித்துகளின் எழுச்சியும் என்பது பற்றிய ஒரு அற்புதமான கருதுகோளை முன்வைக்கிறார். அது குறித்து அடுத்த வலைக்குறிப்பில் எழுதியாக வேண்டும்.

—-
இதே இதழில் அடியேன் எழுதிய “கொந்தரைப் போற்றுதும், கொந்தரைப் போற்றுதும்” என்ற கணினி பாதுகாப்பு சம்பந்தமான கட்டுரையும் வெளியாகியிருக்கிறது!!
—-